விதிமுறைகளை மீறிய அருண தர்ஷனவிற்கு ஏமாற்றம்

Paris Olympics 2024

153
Aruna Darshana qualifies for Paris 2024 Olympics

ஒலிம்பிக் வரலாற்றில் இலங்கையில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற அருண தர்ஷன, ஓடு பாதை விதியை மீறியதால் கடைசி நிமிடத்தில் ஒலிம்பிக் மைதானத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

பிரான்ஸில் நடைபெற்றுவரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நேற்று (06) இரவு நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் பங்குகொண்ட அருண தர்ஷன, அப் போட்டியை 44.75 செக்கன்களில் ஓடி முடித்து 5ஆவது இடத்தைப் பிடித்தார். இது அவரது தனிப்பட்ட நேரப் பெறுமதியாகவும் இடம்பிடித்தது.

முன்னதாக 1998ஆம் ஆண்டு ஜப்பானின் ஃபுகுவோகாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சுகத் திலகரத்ன 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிகழ்த்திய 44.61 செக்கன்கள் என்ற இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை அருண தர்ஷன தவறவிட்டார்.

இது இவ்வாறிருக்க, போட்டி விதிகளின்படி, போட்டி ஆரம்பமாகியதில் இருந்து 400 மீற்றர் முடியும் வரை 4ஆவது பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தாலும், அவர் 200 மீற்றர் ஓடும்போது 3ஆவது தடத்தில் கால் பதித்தது போட்டியின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே, மூன்று அரையிறுதிப் போட்டிகள் முடிவில் அருண தர்ஷன TR 17.2.3 விதியை மீறும் வகையில் மற்றைய தடத்தில் கால் பதித்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன்படி, அருண தர்ஷன நேற்று போட்டியை 44.75 செக்கன்களில் நிறைவு செய்த போதிலும், அது பெறுபேறு பட்டியலில் இடம்பெறவில்லை. இதனையடுத்து அருண தர்ஷனவின் ஒலிம்பிக் கனவு ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.

இதனிடையே, அருண தர்ஷன இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாவிட்டாலும், அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, மூன்று அரையிறுதிப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 6 வீரர்களும் அடுத்த அதிசிறந்த நேரங்களைப் பதிவுசெய்த இருவருமாக 8 வீரர்கள்  ஆண்களுக்கான 400 இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் குவின்சி ஹோல் (43.95 செக்.), ட்ரினிடாட் அண்ட் டுபாகோ வீரர் ஜெரீம் ரிச்சர்ட்ஸ் (44.33 செக்.) 2ஆவது அரையிறுதிப் போட்டியில் க்ரெனெடா வீரர் கிரானி ஜேம்ஸ் (43.78 செக்), ஸம்பியா வீரர் முஸாலாக சாமுகொங்கா (43.81 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களையும், கடைசி தகுதிகாண் போட்டியில் பிரித்தானிய வீரர் மெத்யூ ஹட்சன் – ஸ்மித் (44.07 செக்.), அமெரிக்க வீரர் மைக்கல் நோர்மன் (44.26 செக்.) ஆகியோர் முதலிரு இடங்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெற்றனர்.

அத்துடன், அவர்களுடன் ஒட்டுமொத்த நிலையில் அடுத்த அதிசிறந்த நேரப் பெறுதிகளைப் பதிவுசெய்த அமெரிக்க வீரர் கிறிஸ்டோபர் பெய்லி (44.31 செக்.), நைஜீரிய வீரர் சாமுவேல் ஒகாஸி (44.41 செக்.) ஆகியோரும் இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<