தேசிய விளையாட்டு பெரு விழா போட்டிகளில் பெண்களுக்கான பளுதூக்கலில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான விஜயபாஸ்கர் ஆர்ஷிகா, 3 போட்டிச் சாதனைகள் மற்றும் ஒரு தேசிய விளையாட்டு விழா சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 45 தேசிய விளையாட்டு பெரு விழாவின் ஓர் அங்கமான பளுதூக்கல் போட்டிகள் கொழும்பில் உள்ள டொரிண்டன் உள்ளக அரங்கில் கடந்த 10ஆம், 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெற்றது.
தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த 300இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்குற்றியிருந்தனர்.
இந்த நிலையில், போட்டியின் முதல் நாளன்று (10) நடைபெற்ற பெண்களுக்கான 64 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ஆர்ஷிகா, ஸ்னெச் முறையில் 77 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 98 கிலோ கிராம் எடையையும் தூக்கி இரண்டு புதிய தேசிய விளையாட்டு விழா சாதனைகளை நிலைநாட்னார்.
இதில் ஸ்னெச் முறையில் 77 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், தேசிய சாதனையொன்றை முறியடித்ததுடன், ஒட்டுமொத்தமாக 175 கிலோ கிராம் எடையைத் தூக்கி மற்றுமொரு புதிய தேசிய விளையாட்டு விழா சாதனையையும் நிகழ்த்தினார்.
இதன்படி, அடுத்தடுத்து நான்கு சாதனைகளை முறியடித்த ஆர்ஷிகா, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கத்தினை வென்று வடக்கு மாகாணத்துக்கு பெருமையை தேடிக் கொடுத்தார்.
குறித்த போட்டியில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த கே. செவ்வந்தி (127 கிலோ கிராம்) வெள்ளிப் பதக்கத்தையும், வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எம். சமரசிங்க (116 கிலோ கிராம்) வெண்கலப் பதக்கத்தினையும் வென்றனர்.
இதுஇவ்வாறிருக்க, எதிர்வரும் டிசம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு இலங்கை பளுதூக்கல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தகுதிகாண் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பில் நடைபெற்றது.
இதில் பங்குகொண்ட ஆர்ஷிகா, 64 மற்றும் 71 ஆகிய கிலோ எடைப் பிரிவுகளுக்கான போட்டிகளில் பங்குபற்றி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், தெற்காசிய விளையாட்டு விழா தொடரில் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், பெண்களுக்கான 71 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட வட மாகாணத்தைச் சேர்ந்த கே. ரெஜினா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்னெச் முறையில் 58 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேக் முறையில் 70 கிலோ கிராம் எடையையும் (ஒட்டுமொத்தமாக 128 கிலோ கிராம்) தூக்கிய அவர், தேசிய விளையாட்டு பெரு விழா வரலாற்றில் முதல்தடவையாக பதக்கம் வென்று அசத்தினார்.
இதனிடையே. பெண்களுக்கான 87 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட கே. சுகன்யா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
Photo Album : National Sports Festival 2019 | Weightlifting | Day 2
இதில் ஸ்னெச் முறையில் 65 கிலோ கிராம் எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 75 கிலோ கிராம் எடையையும் தூக்கிய அவர், ஒட்டுமொத்தமாக 140 கிலோ கிராம் எடையைத் தூக்கி அசத்தினார்.
இதேநேரம், பெண்களுக்கான 49 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட ரி. அபிஷாக் (ஸ்னெச் 53 கிலோ கிராம் மற்றும் க்ளீன் அண்ட் ஜேர்க் 58 கிலோ கிராம்) மற்றும் பெண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட எஸ். நிதூஷனா (ஸ்னெச் 55 கிலோ கிராம் மற்றும் க்ளீன் அண்ட் ஜேர்க் 70 கிலோ கிராம்) ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.
இதன்படி, இம்முறை தேசிய விளையாட்டு பெரு விழாவில் கலந்துகொண்ட வடக்கு மாகாண பளுதூக்கல் அணி ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியது.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<