கிட்டத்தட்ட 22 வருடங்களாக, ஆர்செனல் கால்பந்து கழகத்திற்கு முகாமையாளராக பணியாற்றிய பிரான்ஸ் நாட்டின் ஏர்சின் வெங்கர், குறித்த பதவியிலிருந்து இந்தப் பருவகாலத்துடன் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்சின் வெங்கர் ஆர்செனல் கழகத்தில் இருந்து விலகுவதை அதன் நிர்வாகம் இன்று (20) வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்திருக்கின்றது. அத்தோடு வெங்கர் தான் பதவி விலகப்போவதை ஆர்செனல் அணி வீரர்களுக்கு அவர்கள் பிரீமியர் லீக் தொடருக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது தானே முன்தோன்றி கூறியிருக்கின்றார்.
68 வயதான வெங்கரின் பதவிக்காலம் ஆர்செனல் கால்பந்து கழகத்துடன் இரண்டு வருடங்களின் முன்னரே முடிவடைந்த போதிலும், பின்னர் அது சில காரணங்களுக்காக இரண்டு வருடங்கள் நீடிக்கப்பட்டிருந்தது. நீடிக்கப்பட்ட பதவிக்காலத்தின்படி இன்னும் ஒரு வருடம் வெங்கர் ஆர்செனல் கழகத்திற்கு முகாமையாளராக இருக்க முடியும் என்ற போதிலும், அரைவாசியிலேயே தனது பதவியை துறக்கின்றார்.
தேசிய கால்பந்து அணியில் மேலும் 3 வீரர்கள் இணைப்பு
ஆர்செனல் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்த அறிக்கையில், “கழகத்துடன் இடம்பெற்ற தீர்க்கமான பேச்சு வார்த்தை ஒன்றின் அடிப்படையில் நான் கழகத்தில் இருந்து விலக இந்தப்பருவகாலத்தின் நிறைவுக்கட்டமே சிறந்த தருணம்“ எனக் குறிப்பிட்டிருந்த வெங்கர் “கழகத்திற்காக நினைவுகூறும்படி பல வருடங்கள் சேவையாற்றியது மகிழ்ச்சி தருகின்றது“ என்றும் கூறியிருந்தார்.
“நான் இந்தக் கழகத்தை முழு அர்ப்பணிப்புடன் முகாமை செய்திருக்கின்றேன். இப்போது வீரர்களுக்கும், கழக உத்தியோகத்தர்களுக்கும், இயக்குனர்களுக்கும், இந்தக் கழகத்தை மிகவும் விஷேடமாக மாற்றிய ரசிகர்களுக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ரசிகர்களே இந்த அணிக்குப் பின்னால் இருந்து இந்த கழகத்தை மேல் நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆர்செனல் ரசிகர்கள் அனைவரும் இந்தக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பை தொடர்ந்தும் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த கழகத்தின் மீது நான் வைத்திருக்கும் பற்றும் அன்பும் எப்போதும் இருக்கும்“ என மேலும் வெங்கர் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
ஆர்செனல் அணியின் முகாமையாளராக வெங்கர் 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இணைந்திருந்தார். இதன் பின்னர் வித்தியாசமான பயிற்சி முறைகளினால் கழகத்தில் புதிய மாற்றங்களை வெங்கர் கொண்டு வந்து அணியின் முன்னேற்றத்திற்கு பங்காற்றினார். வெங்கரின் ஆளுகையில் ஆர்செனல் அணி மூன்று பிரீமியர் லீக் சம்பியன் பட்டங்களையும், ஏழு FA கிண்ணங்களையும் வென்றிருகின்றது. இதில் ஆர்செனல் அணி 2003/04 ஆண்டுகளுக்கான பருவகாலத்தில் எந்தவொரு போட்டியிலும் தோல்வியுறாது பிரீமியர் லீக் சம்பியனாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு (2006 இல்), வெங்கரின் ஆளுகையில் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆர்செனல் அணி பார்சிலோனா கால்பந்து கழகத்திடம் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், ஆர்செனல் அணி 2006ஆம் ஆண்டின் பின்னர் மூன்று FA கிண்ணங்களை மாத்திரமே வென்றிருக்கின்றது. இவை மாத்திரமே அவ்வணியினால் 2006 ஆம் ஆண்டின் பின்னர் வென்ற கிண்ணங்களாக அமைகின்றது. அத்தோடு, அண்மைய காலங்களில் சம்பியன்ஸ் லீக் தொடரிலும் ஆர்செனல் அணி மோசமான பதிவை காட்டியிருக்கின்றது. இப்படியாக சம்பியன்ஸ் லீக் தொடரில் நல்ல பதிவுகளை காட்டாததும் வெங்கர் பதவி விலக காரணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
லா லிகாவில் தோல்வியுறாத அணியாக பார்சிலோனா சாதனை
வெங்கர் பதவி விலகியது பற்றி கருத்து தெரிவித்திருந்த ஆர்செனல் கழகத்தின் பங்குதாரர்களில் ஒருவரான ஸ்டேன் ரொயேன்கே, “இது நான் விளையாட்டில் கடக்கும் வருடங்களில் மிக மோசமான நாட்கள்“ என கூறியிருந்தார்.
எர்சின் வெங்கர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஆர்செனல் அணிக்கு புதிய முகாமையாளராக பொருஸ்சியா டோர்ட்மென்ட் (Borussia Dortmund) கழகத்தின் முன்னாள் முகாமையாளர் தோமஸ் டச்சல் (Thomas Tuchel) அல்லது ஆர்செனல் கழகத்தின் முன்னாள் மத்தியகள வீரர் பேட்ரிக் வியரா (Patrick Vieira) ஆகிய இருவரில் ஒருவர் வர அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது.
இவர்கள் தவிர ஜேர்மன் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் முகாமையாளர் ஜோச்சிம் லோவ் (Joachim Löw) மற்றும் ரியல் மெட்ரிட், AC மிலான், செல்சி அணிகளின் முன்னாள் முகாமையாளர் கார்லோ என்சலோட்டி (Carlo Ancelotti) ஆகியோரும் ஆர்செனல் அணியின் புதிய முகாமையாளராக இணைய ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகின்றது.