இவ்வருடத்திற்கான முதல் நீச்சல் போட்டி நிகழ்வாக 5km திறந்த வெளி கடல் நீச்சல் (Open Sea Swim) சம்பியன்ஷிப் போட்டிகள் இடம்பெற்றன. 6 ஆவது வருடமாக இடம்பெறும் இப்போட்டியின் ஆடவர் பிரிவில் இலங்கை இராணுவப்படையின் விமல் குமார வெற்றியை பெற்றுக் கொண்டார்.
இம்மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை காலி முகத்திடலில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவிற்கான போட்டிகள் இடம்பெற்றதுடன், இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் முப்படையினரையும் பாடசாலைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
சுவாரஷ்யமாக நிறைவு பெற்ற ஆண்களுக்கான போட்டியில் விமல் குமார 1:04:11 என்ற நேரத்தில் போட்டியை நிறைவு செய்திருந்தார். இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட புனித ஜோசப் கல்லூரியின் எஷான் சோவிஸ் (1:04:12) அவருக்கு நிகராக பலத்த சவாலொன்றை வழங்கியிருந்ததுடன், அவரை விட ஒரு வினாடி பின்னிலையில் குறித்த தூரத்தை நிறைவு செய்தார்.
மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை இராணுவப்படையின் D.M. குணசேன மற்றும் M.A. இந்துவர ஆகியோர் பெற்றுக் கொண்டனர். முதல் நான்கு இடங்களை பெற்றுக் கொண்ட வீரர்களும் பத்து வினாடிகள் வித்தியாசத்தில் போட்டியை நிறைவு செய்ததுடன், ஐந்தாம் இடத்தை பெற்ற வீரர் அவர்களை விட 2 நிமிடங்கள் பின்தங்கியிருந்தார்.
போட்டியில் பங்குபற்றிய அதிகளவு வீரர்கள் இராணுவப்படையை சார்ந்தவர்களாக காணப்பட்டதுடன், இதன் மூலம் இராணுவ அணி மொத்தமாக 67 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை சுவீகரித்தது. லயன் நீச்சல் கழகம் 23 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது.
மகளிர் பிரிவில் கடற்படையின் விஜேரத்ன வெற்றி
இதேவேளை மகளிருக்கான போட்டியில் இலங்கை கடற்படையின் R.W.M. விஜேரத்ன 1:09:57 என்ற நேரத்தில் போட்டியை நிறைவு செய்து வெற்றியை தனதாக்கிக் கொண்டார். போட்டியின் இரண்டாம் இடத்தை அம்பலங்கொட தர்மாசோக கல்லூரியின் S.K. பியன்கா பெற்றுக் கொண்டார்.
ஆடவர் பிரிவில் முதல் முறையாக 59 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்த போதிலும், மகளிர் பிரிவில் வெறும் 9 வீராங்கனைகளே பங்குபற்றியிருந்தமை ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
கடற்படையின் விஜேரத்ன தனி நபராக முதல் இடத்தை வென்ற போதிலும், மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 23 புள்ளிகளை பெற்ற இராணுவப்படை அணி முதலிடத்தையும் 22 புள்ளிகளுடன் மஹாமாயா பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டன.
இவ்விளையாட்டு நிகழ்வுடன் இவ்வருடத்திற்கான நீர்சார் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. இதேவேளை 10km திறந்த வெளி கடல் நீச்சல் போட்டி இன்னும் இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளது.