இலங்கையின் மெய்வல்லுனர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கி அதனை நிலைபெறச் செய்து வருகின்ற இலங்கை இராணுவம், வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வீரர்களுக்கும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் ஜொலிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்கி வருகின்றது.
இந்நிலையில், இராணுவத்தில் உள்ள படைப்பிரிவுகளுக்கிடையில் நடத்தப்படுகின்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 20ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது. இதில் 13 போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
ஆசிய பரீட்சார்த்த மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்த இலங்கையர்கள்
இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்.. முன்னதாக பெண்களுக்கான 1,500 …
இதேவேளை, கடந்த காலங்களைப் போல இம்முறை போட்டித் தொடரிலும் இலங்கை இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப்படுத்தியிருந்ததுடன், அதிலும் கிழக்கு மாகாண வீரர்களும் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
100 மீற்றரில் அஷ்ரப்புக்கு 3ஆவது தங்கம்
வருடத்தின் அதி வேகமான இராணுவ தொண்டர் படையணி வீரரைத் தெரிவு செய்கின்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொத்துவிலைச் சேர்ந்தவரும், இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டவருமான மொஹமட் அஷ்ரப், 10.72 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்த அஷ்ரப், 2015இல் வெள்ளிப் பதக்கத்தையும், 2016இல் வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். எனினும், இம்முறை போட்டித் தொடரில் மீண்டும் முதலிடம் பெற்று இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனரில் ஹெட்ரிக் தங்கம் வென்று அசத்தினார்.
கெமுனு ஹேவா படைப்பிரிவைச் சேர்ந்த டி.கே விஜேரத்ன, போட்டியை 10.79 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், இராணுவ இலேசாயுத காலற் படைப் பிரிவைச் சேர்ந்த சுமேஷ் விக்ரமசிங்க, 10.80 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஆஸிக் மீண்டும் அபாரம்
இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்திய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஸிக் ஆண்களுக்கான பரிதி வட்டம் எறிதலில் 42.28 மீற்றர் தூரம் எறிந்து இராணுவ தொண்ட படையணி மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாகவும் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
ஜகார்த்தா மெய்வல்லுனர் தொடரில் இலங்கைக்கு 3 தங்கப் பதக்கங்கள்
இந்தோனேஷியாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு …
எனினும், கடந்த 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இராணுவ தொண்ட படையணி மெய்வல்லுனர் போட்டிகளில் பரிதி வட்டம் எறிதலில் ஆஷிக் வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 43.05 மீற்றர் தூரத்தை எறிந்த ஆஷிக், இராணுவ மெய்வல்லுனர் போட்டிகளில் தொடர்ச்சியாக 2ஆவது தடவையாக தங்கப் பதக்கத்தினை வென்று அசத்தியிருந்தார்.
இதேவேளை, இராணுவ இலேசாயுத காலற் படைப் பிரிவைச் சேர்ந்த ஏ.பி.டி ஜயதிலக 41.18 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும், இராணுவ பொறியியல் படைப் பிரிவைச் சேர்ந்த டி சில்வா 39.72 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
முப்பாய்ச்சலில் சப்ரினுக்கு முதல் தங்கம்
ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட சப்ரின் அஹமட், 15.64 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தொண்டர் படையணி மெய்வல்லுனரில் முதற்தடவையாக தங்கப் பதக்கம் வென்றார்.
2015 முதல் இப்போட்டித் தொடரில் பங்குபற்றி வருகின்ற சப்ரின், குறித்த வருடத்தில் முப்பாய்ச்சலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதனைத்தொடர்ந்து 2016இல் முப்பாய்ச்சல் மற்றும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களையும் அவர் பெற்றுக்கொண்டார்.
எனினும், கடந்த வருடம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டித் தொடரில் சுகயீனத்துக்கு மத்தியில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட அவர் 15.55 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில், 15.57 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் சேர்ந்த அதீத கருணாசிங்க வெள்ளிப் பதக்கத்தையும், 14.94 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த இராணுவ பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ஜி.எம் ஆரியரத்ன வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதேநேரம், இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட ரஜாஸ்கான், 21.63 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 3000 மீற்றரில் கலந்துகொண்ட எஸ். சந்திரதாசன் போட்டியை 9 நிமிடங்கள் 23.6 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையம் வென்றனர்.
அறிமுக வீரர் அசாமுக்கு வெள்ளிப் பதக்கம்
இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைப் பிரிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 அம்ச போட்டிகளில்(டெகல்தன்) கலந்துகொண்ட மொஹமட் அசாம், தனது அறிமுகப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூரைச் சேர்ந்த மொஹமட் அசாம், நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். இதில் பாடசாலை மட்டத்தில் மாத்திரமல்லாது மாகாண மட்டத்திலும் சுவட்டு, மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த அவர், முப்பாய்ச்சல் போட்டியில் மாகாண மட்டத்தில் பல வெற்றிகளை பதிவுசெய்து வந்தார்.
இறுதியாக கடந்த 2016இல் நடைபெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் கலந்துகொண்ட அசாம், குறித்த போட்டியில் 13.88 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து புதிய மாகாண சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனையடுத்து இவ்வருடத்திலிருந்து இலங்கை இராணுவத்துடன் இணைந்துகொண்ட அவர் முதற்தடவையாக 10 அம்ச போட்டிகளில் கலந்துகொண்டிருந்தார். இதில் 100 மீற்றர்(2ஆவது இடம்), நீளம் பாய்தல்(முதலிடம்), குண்டு போடுதல்(2ஆவது இடம்), ஈட்டி எறிதல்(3ஆவது இடம்), 1500 மீற்றர்(3ஆவது இடம்), பரிதி வட்டம், கோலூன்றிப் பாய்தல், 400 மீற்றர், சட்டவேலி ஓட்டம் மற்றும் உயரம் பாய்தல்(4ஆவது) இடங்களைப் பெற்று 5832 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
ஆசிய விளையாட்டு விழா முன்னோடிப் போட்டிகளில் 24 இலங்கையர்
இந்தோனேஷிய தலைநகரம் ஜகார்த்தாவில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள …
இதில் 6325 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த எம்.ஆர் லக்மால் தங்கப் பதக்கத்தையும், 585 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட இராணுவ சிங்க படைப்பிரிவைச் சேர்ந்த குருசிங்க வெண்கலப் பதக்கதையும் வென்றனர்.
13 போட்டி சாதனைகள் முறியடிப்பு
விறுவிறுப்பாகவும், போட்டித் தன்மையுடனும் கடந்த 3 தினங்களாக தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் 600இற்கும் அதிகமான வீரர்கள் 48 விளையாட்டு போட்டிகளுக்காக பங்குபற்றியிருந்தனர். இதில் 13 போட்டி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
இதில், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.78 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிகழ்த்திய இராணுவ மின்சார மற்றும் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த கிரேஷன் தனன்ஞய சிறந்த வீரருக்கான விருதையும், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.72 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டி சாதனை நிகழ்த்திய 5ஆவது இராணுவ மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த உபமாலிகா ரத்னகுமாரி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் தட்டிச் சென்றனர்.
இதேநேரம், 284 புள்ளிகளை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொண்ட இராணுவ இயந்திரவியல் மற்றும் பொறியியல் படைப்பிரிவு ஆண்கள் சம்பியனாகவும், 264 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட 5ஆவது இராணுவ மகளிர் படைப் பிரிவு பெண்கள் சம்பியனாகவும் தெரிவாகினர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவினால் வெற்றியீட்டிய வீர, வீராங்கனைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.