டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் CR & FC கழகம் மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கிடையிலான போட்டியில் CR & FC கழகமானது ஒரு புள்ளியால் வெற்றிபெற்றது.
Visit the Dialog Rugby 2016/17 HUB for more
கொழும்பு ரேஸ் கோஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பிரபல CR & FC ரக்பி கழகம் மற்றும் இராணுவ அணிகளானது தனது முதல் போட்டியில் பங்குபற்றின. சென்ற வருடம் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இவ்வருடம் பலம் பெற்ற பல வீரர்களை உள்ளடக்கிய நிலையில் CR & FC கழகம் அனைவரினதும் எதிர்பார்ப்பை பெற்று இருந்தது.
மறுமுனையில் பிரபல வீரர்களை இராணுவ அணி உள்ளடக்காவிடினும் CR & FC அணிக்கு பலத்த சவாலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. போட்டிக்கு மழையின் தடங்கள் ஏற்படாததால் நியமித்த நேரத்தில் போட்டி ஆரம்பித்தது.
ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக சென்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் கடினமாக மோதிக்கொண்டன. CR & FC கழகம் பலம் வாய்ந்த சில வீரர்களைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் போது மறு முனையில் இராணுவ அணியானது நேர்த்தியான விளையாட்டின் மூலம் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இராணுவ அணியானது CR & FC அணிக்கு அழுத்தம் கொடுத்து ட்ரை வைக்கும் எல்லைக் கோட்டை நெருங்கினாலும் அதனால் ட்ரை வைக்க முடியவில்லை.
இராணுவ அணிக்கு கடும் போட்டி கொடுத்த CR & FC கழகம் தரிந்த ரத்வத்த மூலமாக முதலாவது ட்ரையைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணியின் பலம் பெற்ற வீரரான ஒமல்க, இராணுவ அணி வீரர்களை ஊடறுத்து சென்று தரிந்த ரத்வத்தையிடம் பந்தை கொடுத்தார். பின்னர் சிறப்பாக செயற்பட்ட கண்டி திரித்துவக் கல்லூரியை சேர்ந்த வீரர்களான தரிந்த ரத்வத்த மற்றும் சஷான் மொகமட் பந்தை சிறப்பாக பரிமாறிக்கொண்டனர். இறுதியில் தரிந்த ரத்வத்த இலகுவாக ட்ரை கோட்டை அடைந்தார். CR & FC வீரர் ரீசா முபாரக் கம்பங்களினூடே பந்தை உதைய, CR & FC கழகம் 7 புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் காணப்பட்டது.
தனது போராட்டத்தை கை விடாத இராணுவ அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை தவறவிடாத இராணுவ அணியானது கம்பங்களின் ஊடே உதைத்து 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இரண்டு அணிகளும் ட்ரை வைக்க முயற்சி செய்த போதிலும் பயனளிக்கவில்லை.
முதற் பாதி : CR & FC 07 – 03 இராணுவ அணி
இரண்டாம் பாதியிலும் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளில் இரண்டு அணிகளும் ஈடுபட்டன. இராணுவ அணி உதைத்த பந்தை சரியாகப் பிடிக்க CR & FC வீரர் தவறியதால் அதன் மூலம் கிடைத்த பந்தை சிறப்பாக பெற்றுக்கொண்ட இராணுவ அணியின் அஷான் பண்டார வேகமாக ஓடி சென்று இரங்க ஆரியபாலவிற்கு பந்தை பரிமாற்ற, ஆரியபால இலகுவாக ட்ரை வைத்தார். ஷானாக குமார உதையை தவறவிடாதலால், இராணுவ அணி போட்டியில் முதன் முதலில் 3 புள்ளிகளால் முன்னிலை அடைந்தது.
இரண்டாம் பாதியில் இராணுவ அணி CR & FC அணிக்கு அழுத்தம் கொடுத்து வந்த பொழுது, ஆர். எண்ட் எப்.சி. அணி சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது. CR & FC . அணியின் தலைவர் ஷேன் சம்மந்தப்பெரும மற்றும் முன் வரிசை வீரரான சுபுன் வர்ணகுலசூரிய ஆகியோரின் உதவியுடன் எதிரியின் எல்லையை அடைந்த CR & FC அணி, சிறப்பாக பந்தை பரிமாற்றி ஓரப் பக்கமாக ட்ரை வைத்தது. ட்ரை மூலமாகக் கிடைக்கப்பெற்ற உதையை ரீசா முபாரக் தவறவிட்டார். எனினும் பின்னர் தனக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை தவறவிடாது 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார் ரீசா முபாரக்.
CR & FC அணி 15-10 என முன்னிலை கொண்டு விளையாடி வந்த நிலையில், நிலையான விளையாட்டினை CR & FC அணி வெளிக்காட்டியது. ப்லை ஹாப் தரிந்த ரத்வத்த தமக்கு கிடைத்த பந்தை சுயமாக எடுத்து செல்ல முனைந்த பொழுது, அவரின் கையில் இருந்து பந்தை தந்திரமாகப் பறித்த இராணுவ அணி வீரர் அஷான் பண்டார நீண்ட தூர ஓட்டத்தின் பின்னர் இராணுவ அணியின் சார்பாக இரண்டாவது ட்ரை வைத்தார். ஷானக குமார 2 புள்ளிகளை உதையின் மூலம் பெற்றுக்கொடுக்க இராணுவ அணி 17-15 என மீண்டும் முன்னிலை பெற்றது.
Photos: Army SC v CR & FC – Dialog Rugby League 2016/17 | #Match 4
அதன் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இராணுவ அணியானது இரண்டு இலகு வாய்ப்புகளை தவறவிட்டது. தமக்குக் கிடைத்த இரண்டு இலகு வாய்ப்புகளை தவறவிட்டார் இராணுவ அணி வீரர் தனுஷ்க்க தல்வத்த.
போட்டியை விட்டுக்கொடுக்காத இராணுவ அணியானது மீண்டும் மீண்டும் ட்ரை வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. இராணுவ அணி வீரரான ஆரியபால சிறப்பாக விளையாடிய பொழுதும் அவரால் இராணுவ அணி சார்பாகப் புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. போட்டி நிறைவு பெற 10 நிமிடங்களே இருக்கும் நிலையில் மோல் மூலமாக எதிரணியின் எல்லையை அடைந்த ஆர். எண்ட் எப்.சி அணியின் திலங்க பெரேரா, CR & FC அணி சார்பாக மிக முக்கிய ட்ரையை வைத்தார்.
மறுபடியும் தனது பழைய கழகமான CR & FC கழகத்திற்கு திரும்பிய ரீசா முபாரக் இப்போட்டியில் தனது திறமையை சிறப்பாக வெளிக்காட்டினார். இதனால் மறுபடியும் CR & FC அணிக்கு கிடைத்த பெனாலடி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய ரீசா முபாரக் மேலும் 3 புள்ளிகளை தமது அணி சார்பாக பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் CR & FC அணி 8 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுக்கொண்டது.
போட்டி நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சி இருக்கும் நிலையில் போட்டியை விட்டுக்கொடுக்க விரும்பாத இராணுவ அணியானது தமது தலைவர் மனோஜ் டி சில்வா மூலமாக ட்ரை வைத்து அசத்தியது. ஷானக பெரேரா மீண்டும் ஒரு முறை தேவையான 2 புள்ளிகளைப் பெற்றுகொடுத்தார்.
போட்டி நிறைவடைய 2 நிமிடங்களே எஞ்சி இருக்கும் நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் 1 புள்ளி மட்டுமே வித்தியாசமாகக் காணப்பட்டது. தாம் வெற்றிபெறத் தேவையான அந்த இரண்டு புள்ளிகளைத் தேடி இராணுவ அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருந்தாலும் இறுதி நிமிடத்தில் தமது வீரர் பந்தை கையாளுவதில் விட்ட தவறினால் இராணுவ அணி 1 புள்ளியால் தோல்வியுற்றது.
இராணுவ அணியின் இந்த ஆட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
WATCH THE REPLAY: Army SC taking on CR & FC in the Dialog Rugby League 2016/17 match