எமது கிரிக்கெட் வாழ்க்கையில் ஆட்ட நிர்ணயத்தில் ஒருபோதும் ஈடுப்பட்டதுமில்லை. அதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. நாட்டுக்காகவும், இலங்கை அணிக்காகவும் தூய்மையான விளையாட்டை நாம் விளையாடியுள்ளோம் என்ற திருப்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
அடுத்த உலகக்கிண்ணத்தின் துருப்புச்சீட்டு மெத்திவ்ஸ் – சங்கா
இங்கிலாந்தில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள …
முன்னாள் வீரர்களான அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால கடந்த சில தினங்களுக்கு முன் அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
குறித்த வீரர்கள் இருவருமே முதன்முதலில் ஆட்டநிர்ணய சதி குற்றச்சாட்டை எதிர்கொண்டவர்கள் என தெரிவித்திருந்த அவர், குப்தா என்பவரிடமிருந்து தலா 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும், அந்தக் காலப்பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் இடம்பெறவில்லை என எங்கள் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், பெற்றோலிய வளத்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோர் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இதன்போது அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் எப்போதும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள். கிரிக்கெட்டுக்காக எதையும் செய்வோம். எமது நாட்டில் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளோம். இதற்காக தொடர்ந்து பாடுபடுவோம். நாங்கள் விளையாடிய காலத்தில் அதிகளவிலான ரசிகர்கள் கிரிக்கெட் போட்டிகளைக் காண மைதானத்துக்கு வந்து எமக்கு ஆதரவளித்து எங்களை உற்சாகப்படுத்தியிருந்தார்கள். அதற்கு காரணம் கிரிக்கெட் நிர்வாகத்தில் அப்போது சூதாட்டக்காரர்கள் இருக்கவில்லை. வீரர்கள், நிர்வாகிகள் என அனைவரும் நாட்டுக்காக சேவை செய்தார்கள்.
ஆனால், இன்று சூதாட்டக்காரர்கள் கிரிக்கெட்டை நிர்வகிக்கின்றனர். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் யாப்பு விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதுகுறித்து நான் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலமாக பல தடவைகள் அறிவித்துள்ளேன்” என தெரிவித்தார்.
அன்ரோ ரசலின் சகலதுறை பிரகாசிப்பால் மேற்கிந்திய தீவுகளுக்கு இலகு வெற்றி
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (01) செயிண்ட் கிட்ஸ் …
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
”ஆனாலும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவின் குற்றச்சாட்டை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 1994ஆம் ஆண்டு லக் நவ் தொடரின் போது நாம் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு எம்மீது சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை நடத்தியது. எனினும், அந்த விசாரணை மிக விரைவில் நிறைவுக்கு வந்ததுடன், நாங்கள் நிரபராதிகள் என தீர்ப்பும் வழங்கப்பட்டது. அதன்பிறகும் நாம் நேர்மையாக கிரிக்கெட் விளையாடி வந்தோம்.
எனினும், 1991ஆம் ஆண்டு எம்.கே குப்தா என்ற இந்திய முகவரை நாம் சந்தித்ததாகவும் அவர் மூலமாக ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்து எம்மை அவமதிக்கும் வகையில் திலங்க சுமதிபால குற்றம் சுமத்தியுள்ளார். குப்தா என்ற நபர் எமக்கு யார் என்றே தெரியாது. ஆனால் நாம் விளையாடிய காலத்திலும் எம்மை பலரும் வந்து சந்தித்தனர். ஆனால் அவர்களை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. எவ்வாறாயினும், நாங்கள் ஆட்டநிர்ணயத்தில் ஒருபோதும் ஈடுபடவில்லை.
அவ்வாறு ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டால் 15 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்காக அல்ல. 15 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர்களுக்காக 1996 உலகக் கிண்ண போட்டியின் இறுதி ஆட்டத்தில் நாம் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டிருப்போம். ஆனால், எமக்கு அப்படியான எண்ணம்கூட துளியேனும் இருக்கவில்லை. நாங்கள் சுமார் 20 வருடங்கள் நாட்டுக்காக விளையாடியுள்ளோம். நான் கிரிக்கெட்டை ஆரம்பிக்கும் போது எமக்கும் எந்தவொரு கொடுப்பனவும் வழங்கவில்லை. டெஸ்ட் போட்டியொன்றுக்காக நாளொன்று 250 ரூபா பணம் வழங்கப்பட்டது. எனவே, பணத்துக்காக கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால் தான் 1996 உலகக் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க முடிந்தது.
எனவே, சூதாட்டக்காரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எம்மை அழிக்க வேண்டும், எம்மை கிரிக்கெட்டில் இருந்து துரத்த வேண்டும் என்பதற்காக திலங்க சுமதிபால இவ்வாறான பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்” என அவர் தெரிவித்தார்.
இதேநேரம், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அரவிந்த டி சில்வா கருத்து வெளியிடுகையில், ”நாங்கள் ஒருபோதும் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதில்லை. நான் ஒருபோதும் பணத்துக்காக விளையாடியது கிடையாது. அர்ஜுன கூறியது போல 1991ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்டநிர்ணய சதியில் நாங்கள் தொடர்புபடவில்லை என உண்மை வெளியாகியது. ஆனால் அந்த சம்பவத்தை தற்போது ஏன் பேசியிருக்கின்றார் என்பது புரியாத புதிராக உள்ளது. ஆனால் அரசியல் மேடைகளில் சொல்லப்படுகின்ற இந்த மாதிரியான பொய் பிரச்சாரங்கள ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவேன்.
ஆனால் அந்த ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் எனக்கு எந்தவொரு மனவேதனையும் ஏற்படவில்லை. இவ்வாறான செய்திகளை அடிக்கடி கேட்டு கேட்டு பழகிவிட்டோம். இலங்கை கிரி;க்கெட்டின் தெரிவுக் குழுவின் தலைவராக செயற்படுமாறு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 2016ஆம் ஆண்டு நான் இரண்டு மாதகாலம் கடமையாற்றினேன். அதற்காக எனக்கு 3 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஊதியமும் கிடைத்தது. அதனை ஏற்கமறுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி இலாகாவில் மீண்டும் கையளித்தேன். எனவே, நான் யாருக்கும் ஆமாம் சாமி போடுபவன் அல்லன் எனவும் அரவிந்த டி சில்வா இதன்போது தெரிவித்தார்.
அதேபோல நான் அதிகளவில் நேசிக்கும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக யாருடனும் இணைந்து சேவையாற்றத் தயாராக உள்ளேன். அது அர்ஜுனவா? திலங்கவா? என்பது முக்கியமில்லை எனவும் தெரிவித்தார்.