தடகளத்தில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் உலக சாதனை படைத்திருப்பவர் அமெரிக்க வீரர் அரைஸ் மெரிட். கடந்த 2012ஆம் ஆண்டு 110 மீட்டர் தடை ஓட்டத்தில் 12.80 வினாடிகளில் இலக்கைக் கடந்ததே உலக சாதனையாக உள்ளது.
2012ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரான அரைஸ் மெரிட் அடுத்த மாதம் 5ஆம் திகதி தொடங்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒலிம்பிக் போட்டிக்கான அமெரிக்க அணித்தேர்வில் சோபிக்கத் தவறினார். யுஜின் நகரில் நேற்று முன்தினம் நடந்த தகுதிகான் போட்டியில் முதல் 3 இடத்துக்குள் வருபவர் மட்டுமே அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் 13.22 வினாடிகளில் இலக்கை எட்டிய அரைஸ் மெரிட் 4ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டதால், ஒலிம்பிக் அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்தார்.
30 வயதான அரைஸ் மெரிட் கடந்த செப்டம்பர் மாதம், தனது சகோதரியிடம் இருந்து சிறுநீரகத்தைத் தானமாகப் பெற்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அவரால் போட்டிக்கு முழு அளவில் தயாராக முடியவில்லை. அரைஸ் மெரிட் கூறுகையில், “2ஆவது அல்லது 3ஆவது இடத்திற்கு வந்திருப்பதாக நினைத்தேன். ஆனால் 4ஆவது இடத்தைப் பெற்றதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன்” என்றார்.