இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அரவிந்த டி சில்வா

320
Aravinda de Silva

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நியமனம் செய்யப்பட்ட கிரிக்கெட் தொழில்நுட்பக் குழுவின் தலைவரான அரவிந்த டி சில்வா, இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டினை விருத்தி செய்வதற்கான எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ”News First” செய்திச் சேவைக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். 

குறித்த நேர்காணலில் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகளின் தொகுப்பு

இந்த தொழில்நுட்பக் குழு மூலம் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டில் மீள்பிரவேசிப்பது ஏன்? 

எனக்கு எப்போதும் சவால்கள் பிடிக்கும். நான் இலங்கை கிரிக்கெட்டுக்காக கடந்த காலங்களில் பணி புரிந்திருக்கின்றேன். அதோடு, பல குழுக்களிலும் காணப்பட்டிருக்கின்றேன். ஆனால், இந்த முக்கிய சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவி தேவையாக இருக்கின்றது என கருதுகின்றேன். 

>> அபார சதங்களால் மைதானத்தை அலங்கரித்த மெதிவ்ஸ், சந்திமால்

தற்போதைய நிலைமைகளை கருதும் போதும், வீரர்கள் எதிர்நோக்கும் விடயங்களையும் நோக்கும் போதும், இந்த விளையாட்டின் போக்கினை கருதும் போதும் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவும் நோக்கத்தில் நான் இந்த குழுவில் இணைய தீர்மானித்தேன். கிரிக்கெட் விளையாட்டின் விருத்திக்காக அதன் அடிப்படையில் இருந்து யாராவது நீண்டகாலத்திட்டம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என நான் நினைத்தேன். இவ்வாறான   விடயங்களே, நான் இந்தக் குழுவில் இடம்பெற காரணமாகின.  

இந்தக் குழு மூலம் எந்தவகையான சிறப்பு பதவிகள் உங்களுக்கும், உங்களது குழு அங்கத்தவர்களுக்கும் கிடைத்திருக்கின்றன.

எமக்கு கிடைத்துள்ள கட்டளை, கிரிக்கெட் விடயங்களை முழுமையாக பார்க்கும் படி குறிப்பிட்டிருக்கின்றது. ஒரு அணியாக நாம் எந்த விடயங்களை உண்மையாக சரி செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவிருக்கின்றோம். நாம் அடிப்படை மட்டத்தில் இருந்து தேசிய மட்டம் வரையில் விடயங்களை கவனிக்கவுள்ளோம். ஒரு கட்டமைப்பு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. ஆனால், நேரமும் விடயங்களும் மாறுகின்ற போது நாங்கள் எங்களை  மாற்றவோ அல்லது மாற்றங்களுக்கு இசைவாகவோ இல்லை. எனவே, நாம் மாற்றம் ஏற்பட வேண்டிய இடங்களை விளங்கிக் கொள்ள முயற்சி செய்வதோடு தற்போதைய கட்டமைப்பில் மாற்றங்கள் தேவைப்படும் இடத்திற்கு மாற்றங்களை கொண்டுவருவோம். 

உங்களது குழு இலங்கை கிரிக்கெட் யாப்பிலும், உள்ளூர் கிரிக்கெட் கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதில் தொடர்புபட்டிருக்கின்றதா?

நாங்கள் இரண்டு இடங்களிலும் ஆலோசனைகளை வழங்குகின்றோம். நாம் உண்மையாக 5 மாகாணங்கள் பங்குபெறுகின்ற மாகாண கிரிக்கெட் தொடர் ஒன்றினை ஸ்தாபிக்க முற்படுகின்றோம். இந்த திட்டம் 2003ஆம் ஆண்டு நான் ஓய்வு பெற்றதில் இருந்து அமுல்படுத்த முயற்சித்த ஒன்று. தற்போது ஆண்டுகள் சென்ற நிலையில் பலர் கழக கிரிக்கெட்டினை பாதுகாப்பதாக கூறி இந்த எண்ணக்கருவினை நம்ப மறுக்கின்றனர். 

கழக கிரிக்கெட்டும் முக்கியமானதுதான் ஏனெனில் பாடசாலை கிரிக்கெட் முடிந்தவுடன் கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய அடித்தளம் கழக கிரிக்கெட் தான். எனவே, நாம் கழக கிரிக்கெட்டிற்கு எந்த தீங்கும் செய்ய விரும்பவில்லை. ஆனால், மக்களுக்கு இந்த கழகங்களின் கழக கிரிக்கெட்டும், மாகாணத்துடன் தொடர்புட்ட கிரிக்கெட் வீரர்கள் உயர்தரத்திலான கிரிக்கெட் போட்டிகள் ஆடுவதினுடைய முக்கியத்துவமும் விளங்குவதில்லை.

உதாரணமாக நீங்கள் அவுஸ்திரேலியாவினை நோக்கினால் அங்கே பிராந்திய அணிகள் உயர்நிலையில் இருப்பதனையும், பிராந்தியம் ஒன்றுக்குள் நிறைய கழகங்கள் இருப்பதனையும் அவதானிக்க முடியும். அங்கே அவர்கள் பல கழக அணிகளில் இருந்தே பிராந்திய அணி ஒன்றினை உருவாக்குகின்றனர். அப்படியான ஒரு தொடர் ஒன்றினை நாம் இலங்கையில் உருவாக்க முடியும். இந்த எண்ணக்கரு தற்போது மக்களுக்கு குழப்பமாக இருந்த போதும், இதனை எதிர்காலத்தில் நிஜமாக்குவதற்கு நாம் அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். 

இங்கே, உயர்பீடத்தில் இருக்கும் அதிகாரத்தினை பரவலாக்குவது மிக முக்கியமானது. உங்களுக்கு சக்தி அனைத்தையும் ஒரு இடத்தில் வைத்திருக்கும் போது பிரச்சினை உருவாகும். ஆனால், அதனை நீங்கள் நாடு பூராகவும் 5 நிலையங்களை உருவாக்கி அதிகாரப் பரவலாக்கம் செய்யும் போது அடிமட்டப் பிரச்சினைகளை அந்தந்த நிலையங்களில் பார்த்து சரி செய்ய முடியும். 

முன்மொழியப்பட்ட மாகாண கிரிக்கெட் தொடர் தொடர்பில் கூற முடியுமா?  

எமது யோசனை இருக்கும் 24 கழகங்களையும் 5 மாகாணங்களுக்கு கொடுப்பதாகும். உதாரணமாக 4 கழகங்கள் ஒரு மாகாணத்திற்கு இருக்கின்றது எனக் கருதுவோம். இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட மாகாணம் ஒன்றுக்கு வீரர்களை தெரிவு செய்வது வீரர்கள் தாம் இருக்கும் 4 கழகங்களுக்காக வெளிப்படுத்தும் ஆட்டத்தின் அடிப்படையிலேயே. அதேநேரம், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட்ட பின்னர், 4 கழகங்களும் குறிப்பிட்ட மாகாணத்தினால் பராமரிக்கப்படும். 

>> Video – IPL ஏலத்தில் முதல்தடவையாக இடம்பிடித்த யாழ். வீரர்..!

இன்னும் நாம் 22 மாவட்டங்களையும் மாகாணங்களுக்காக பிரித்துக் கொடுக்க முடியும். இதன் மூலம் நாடுபூராகவும் நாம் அதிகாரப்பரவலாக்கம் செய்து அதிக கவனத்தினை செலுத்த முடியும். மாகாண அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் நான்கு நாட்கள் கொண்ட முதல்தரப் போட்டிகளும், ஏனைய இரண்டு வகைப் போட்டிகளும் அடங்கும். நாம் எமது முதல்தரப் போட்டித்தொடர் திட்டம் மூலம் வீரர்கள் பொருளாதார ரீதியில் உறுதியாக செல்வதற்கு தேவையாக இருக்கும் வழி ஒன்றினையும் உருவாக்க முயல்கின்றோம். 

நிறைய வீரர்கள் ஒரு பருவகாலத்திற்கு 20 மில்லியன் ரூபாய் பணத்தினை உழைப்பதற்காக நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலிய போட்டிகளிலும், கவுண்டி தொடர்களிலும் விளையாடுகின்றனர். இந்தப் பணம் கிட்டத்தட்ட 10000 அமெரிக்க டொலர்களாகும். எமது கிரிக்கெட் சபைக்கு இந்தப் பணத்தினை 120 வீரர்களுக்கு கொடுக்க முடியும் என்பது உறுதியான விடயம். நீங்கள் நாட்டில் சிறந்த 200 கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்து அவர்களில் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய பணம் 15000 டொலர்களாக இருப்பினும், உங்களுக்கு 3 மில்லியன் டொலர்கள் கொடுக்க முடியுமாக இருக்க வேண்டும். அப்படியான ஒரு நிதித்திட்டம் இந்த வீரர்களை வெளிநாடுகளுக்கு செல்ல வைக்காமல் இருப்பதற்கு அமுல்படுத்தப்பட வேண்டும்.

>> இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக சமிந்த வாஸ்

பாடசாலை கிரிக்கெட்டுக்கான உங்களது திட்டங்கள் என்ன?

நீங்கள் பாடசாலை கிரிக்கெட்டினை நோக்கினால் இங்கே 28,000 தொடக்கம் 30,000 வீரர்கள் வரை 13 வயதுப் பிரிவில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் ஆடுகின்றனர். ஆனால், 19 வயதுப் பிரிவினை நோக்கும் போது வெறும் 9,000 வீரர்களே கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். 

எனவே, 19 வயதுப் பிரிவில் போது எண்ணிக்கையில் பாரிய குறைவு ஏற்படுவதனை அவதானிக்க முடியுமாக உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் தங்களது வாழ்வில் உறுதியான தீர்மானங்களை மேற்கொண்டு, வேறு ஒரு துறையில் தங்களுக்கென ஒரு தொழிலை உருவாக்க முனைவதாகும். 

எனவே, நாம் ஒரு இளம் கிரிக்கெட் வீரரை பார்க்கும் போது இந்தப் பிரச்சினையை  இனம்கண்டு பிடித்து அவர் உயர்தரத்திலான கிரிக்கெட் ஆடும் வரையில் ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு அவர்கள் கிரிக்கெட் ஆடும் போது அவர்களது கல்வியில் கவனம் செலுத்த உதவ வேண்டும். இதனை செய்ய நாம் வீரர்களுக்கு உதவும் ஒரு திட்டத்தினை உருவாக்க வேண்டும். 

நான் இதற்காக ஒரு விளையாட்டுப் பல்கலைக்கழகத்தினை ஸ்தாபிக்க வேண்டும் என நினைக்கின்றேன். அங்கே, வீரர்கள் கிரிக்கெட்டுக்காக தங்களை தயார்படுத்தி, மாலை நேரங்களில் தங்களது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். இதன் மூலம் அவர்களுக்கு கிரிக்கெட்டினையும், கல்வியினையும் ஒன்றாகக் கொண்டு செல்ல முடியும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<