சுகததாச விளையாட்டரங்கின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான குத்தகை (டெண்டர்) ஏலத்தில் விடப்பட்டிருந்த நிலையில், அதில் தோல்வியுற்ற ஏலதாரர் ஒருவர் கொள்முதல் முறையீட்டு ஆணையத்திடம் (PBA) குத்தகை ஏலம் விடப்பட்ட விதம் தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை அளித்துள்ளார். இதனால் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளன.
மீண்டும் பொலிவு பெறும் சுகததாச விளையாட்டரங்கு பெப்ரவரியில் பாவனைக்கு
சுகததாச விளையாட்டு அரங்கை புனரமைப்பு செய்து, அடுத்த வருடம் பெப்ரவரி..
குத்தகையில் தோல்வியடைந்த ஏலதாரர் ஒருவரின் முறைப்பாட்டினால் இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. குத்தகையானது வெற்றிபெற்ற ஏலதாரருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் முறையீட்டு ஆணையம் குறித்த முறைப்பாட்டினை பரிசீலனை செய்த பின்னர் பின்வரும் மூன்று தீர்ப்புக்களில் ஒன்றை வழங்கலாம்.
- மீண்டும் குத்தகையை ஏலம் விடுதல்
- தோல்வியுற்ற ஏலதாரருக்கு குத்தகையை வழங்குதல்
- வெற்றிபெற்ற ஏலதாரருக்கு குத்தகையை வழங்குதல்
ஆசிய தடகள சம்பியன்ஷிப் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வில் கருத்து வெளியிட்டிருந்த விளையாட்டுத்துறை அமைச்சரான தயாசிறி ஜயசேகர, சுகததாச விளையாட்டரங்கின் செயற்கை இழை ஓடுபாதையை திருத்தியமைத்து நவம்பர் மாதமளவில் விளையாட்டு வீரர்களின் பாவனைக்கு அதனை வழங்குவதாக உறுதியளித்திருந்தார். எனவே இது தொடர்பில் மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள ThePapare.com ஆகிய நாம் விளையாட்டு அமைச்சரை தொடர்பு கொண்டிருந்தோம்.
முறைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, “ஆம், ஏலம் தொடர்பில் எமக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்திருந்ததுடன், வழமையான நடைமுறை போன்றே நாம் அம் முறைப்பாட்டை கொள்முதல் முறையீட்டு ஆணையத்திற்கு வழங்கியுள்ளோம்,” என்றார். குறித்த முறைப்பாடு காரணமாக திருத்த நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுமா என நாம் வினவிய போது, “பெரும்பாலும் தாமதம் ஏற்படாது. நாம் குத்தகையை சரியான முறையிலேயே வழங்கியிருந்தோம். எனவே முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் வெற்றிபெற்ற ஏலதாரருக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்படும் பட்சத்தில் தாமதம் ஏற்படாது. எனினும் தோல்வியுற்ற ஏலதாரருக்கு குத்தகை வழங்கப்பட்டால் அல்லது புதிதாக ஏலம் நடத்தப்பட்டால் தாமதம் ஏற்படக்கூடும்,” எனத் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. எனவே அவ்வருடமானது இலங்கை வீர வீராங்கனைகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோருக்கு மிகவும் முக்கியமான வருடமாகும்.
கடந்த விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தொடர்களில் இலங்கை வீரர்கள் சிறப்பான முறையில் திறமையை வெளிக்காட்டியிருந்த காரணத்தினால் எதிர்வரும் போட்டிகளின் போதும் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவே காணப்படும். எனினும் ஆசிய மற்றும் சர்வேதேச மட்டத்தில் வெற்றிகளை சுவீகரிக்க வேண்டுமாயின் திறமை மட்டுமன்றி சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளும் காணப்பட வேண்டியமை அவசியமாகும்.
>> பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் 28 இலங்கை வீரர்கள் பங்கேற்பு
இலங்கையில் தொடர்ந்தும் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் திறமை, ஈடுபாடு, அர்ப்பணிப்பு என்பன அதிகாரிகளின் முறையற்ற செயல்பாடுகளினால் வீணடிக்கப்பட்டு வருகின்றமை மிகவும் வேதனைக்குரியது. தாய்நாட்டிற்கு பெருமை தேடித் தரும் வீரர்களுக்கு அடிமட்ட வசதிகளை அளிக்காமல் இருப்பதானது எவ்விதத்திலும் ஏற்கக்கூடியது அல்ல.
இலங்கையின் ஏனைய செயற்கை இழை ஓடுபாதையான தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தின் ஓடுபாதை தற்போது படுமோசமான நிலையில் காணப்படுவதுடன் ஓட்ட வீரர்களுக்கு ஆபத்தான ஓடுபாதையாகவே உள்ளது. எனவே ThePapare.com ஆகிய நாம் சுகததாச மைதானத்தில் இடம்பெறும் சீர்திருத்த நடவடிக்கைகளை உன்னிப்புடன் அவதானித்து வர கடமைப்பட்டுள்ளோம்.