இன்னுமொரு வெற்றிக்கு வழிகாட்டிய சங்காவின் அரைச்சதம்

1929
Another 50 for Sanga in CPL
Photo by Ashley Allen/Sportsfile

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் டி20 போட்டிகள் தொடரின் 20ஆவது போட்டி நேற்று ஜமேக்காவில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் சங்கா விளையாடும் ஜமேக்கா தளவாஹஸ் அணி பார்படாஸ் ட்ரிடென்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பார்படாஸ் ட்ரிடென்ஸ் அணி ஜமேக்கா தளவாஹஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்புவிடுத்தது.

மழை காரணமாக போட்டி தாமதமாகவே ஆரம்பித்தது. இதனால் போட்டி 18 ஓவர்களைக் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜமேக்கா தளவாஹஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்றது.  ஜமேக்கா தளவாஹஸ் அணி சார்பாக சத்விக் வோல்டன் மிக அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 97 ஓட்டங்களையும், இலங்கை அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கரா மீண்டும் ஒரு முறை அற்புதமாக விளையாடி 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 50 ஓட்டங்களையும் பெற இறுதி நேரத்தில் களம் புகுந்த ரோமன் பவல் 14 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 34 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமல் பெற்றார். பார்படாஸ் ட்ரிடென்ஸ் அணியின் பந்துவீச்சில் ரவி ரம்போல் மற்றும் டேவிட் வயிஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பின் 108 பந்துகளில் 196 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய பார்படாஸ் ட்ரிடென்ஸ் அணி 17.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதன் மூலம் போட்டியில் சங்கா விளையாடும் ஜமேக்கா தளவாஹஸ் அணி  டக்வத் லுவிஸ் முறையில் 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. பார்படாஸ் ட்ரிடென்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் நிகோலஸ் பூரன் 25 பந்துகளில் ஓரொரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்களாக 51 ஓட்டங்களையும், தலைவர் கிரோன் பொலார்ட் 11 பந்துகளில் 16 ஓட்டங்களையும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அஹமத் ஷேசாத் 13 பந்துகளில் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஜமேக்கா தளவாஹஸ் அணியின் பந்து வீச்சில் டேல் ஸ்டெயின் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளையும் டிம்ரோய் அலென் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக மிக அபாரமாக விளையாடி 54 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 97 ஓட்டங்களைப் பெற்ற சத்விக் வோல்டன் தெரிவு செய்யப்பட்டார்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்