கண்டி பல்லேகலேயில் இன்றைய தினம் நடைபெற்ற கண்டி கிங்க்ஸ்வூட் மற்றும் தர்மராஜ கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரி 44 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தர்மராஜ கல்லூரியின் அணித் தலைவர் தேஷான் குணசிங்க முதலில் கிங்க்ஸ்வூட் கல்லூரியை துடுப்படுமாறு பணித்தார். அந்த வகையில் முதலில் களமிறங்கிய கிங்க்ஸ்வூட் கல்லூரி குறித்த 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ஓட்டங்களை பதிவு செய்தது.
அவ்வணி சார்பாக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய யசோத் கவிந்த 76 ஓட்டங்களையும் விமுக்தி விஜேசிறிவர்தன 69 ஓட்டங்களையும் குவித்து அணியை வலுப்படுத்தினர். அதேநேரம் கண்டி, கிங்க்ஸ்வூட் அணியின் ஓட்டங்களை கட்டுப்படுத்திய சகல துறை ஆட்டக்காரர் நிவந்த ஹேரத் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதனையடுத்து 244 ஓட்டங்களை இலக்காக கொண்டு களமிறங்கிய தர்மராஜ கல்லூரி, கிங்க்ஸ்வூட் அணியின் அதிரடி பந்து வீச்சில் சிக்குண்டு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பதிவு செய்தது.
நிதானமாக துடுப்பாடிய கவிந்த திலகரத்ன 44 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து செல்ல ஓட்டங்களை பெறுவதில் தர்மராஜ கல்லூரி தடுமாறியது. எனினும், இறுதி வரை தனித்து நின்று போராடிய சசிந்த சேனநாயக ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களை பெற்று களத்தில் இருந்தார்.
அந்த வகையில் 50 ஓவர்கள் நிறைவில் தர்மராஜ கல்லூரி 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால் 44 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
போட்டியின் சுருக்கம்
கிங்க்ஸ்வூட் கல்லூரி, கண்டி – 244/8 (50) – யசோத் கவிந்த 76, விமுக்தி விஜேசிறிவர்தன 69, நிவந்த ஹேரத் 4/33
தர்மராஜா கல்லூரி, கண்டி – 200/8 (50) – கவிந்த திலகரத்ன 44, சசிந்த சேனநாயக்க 39*, தேஷான் குணசிங்க 34, கிஹான் விதாரண 35, சௌம்ய பியசேன 3/37
முடிவு – கண்டி கிங்க்ஸ்வூட் கல்லூரி 44 ஓட்டங்களால் வெற்றி