தமது சொந்த மண்ணில், இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளில், அஞ்சலோ மெதிவ்ஸ் விளையாடமாட்டர் என இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நேற்று (25) உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை அணித்தலைவர் மெதிவ்ஸ், ஜொஹன்னஸ்பேர்கில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான இரண்டாவது T-20 போட்டியில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக அப்போட்டியுடன் நாடு திரும்பியதோடு, அதனையடுத்து நடைபெற்ற அவுஸ்திரேலியா உடனான T-20 தொடரிலும் பங்கேற்று இருக்கவில்லை.
“நான் நேற்று இரவு வைத்தியர்களை சந்தித்து அவர்கள் வழங்கிய ஆலோசனைகளிற்கு அமைவாக (இத்தொடரில் விளையாட முடியாமைக்கு) வருந்துகின்றேன். நான் நாடு திரும்பியதிலிருந்து கொழும்பில் உள்ள வைத்தியர் குழாம், இங்கிலாந்தினை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர் உடன் கலந்துரையாடி மேலும் நான்கு வாரங்களிற்கு எனது நிலைமையினை பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். எனினும், டெஸ்ட் தொடரினை அடுத்து இருக்கும் ஒரு நாள் தொடரில், ஏதாவது ஒரு போட்டியில் எனது மீள்வருகையை எதிர்பார்க்க முடியும் என எதிர்பார்க்கின்றேன். ஆனால், எனது மருந்து உள்ளெடுக்கும் நடவடிக்கையினை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது. அத்துடன் நானும் (உடல் தேற) என்னால் முடியுமானவற்றை செய்து வருகின்றேன். “
என Cricbuzz இணையத்தளத்திற்கு மெதிவ்ஸ் தனது உடல்நலம் பற்றி வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
டெஸ்ட் தொடரில், இலங்கை அணியினை ரங்கன ஹேரத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரின் பெயரும் தலைமை பொறுப்பிற்கு பரிந்துரை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடத்தின் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெற்ற ஜிம்பாப்வே அணியுடான டெஸ்ட் போட்டியில் உடலின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட உபாதைகள் காரணமாக மெதிவ்ஸ் அத்தொடரில் விளையாடியிருக்கவில்லை, அது ரங்கன ஹேரத்தை இலங்கை டெஸ்ட் குழாமிற்கு அணித் தலைவராக தெரிவுசெய்ய காரணமாய் அமைந்திருந்தது. அத்துடன், தலைவர் பதவிக்கு பெயர் சிபாரிசு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இதுவரை இலங்கை அணியின் டெஸ்ட் தலைவராக பொறுப்பேற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.