இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.
“நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் தசை இன்னும் சரியாகவில்லை. அத்துடன், மெதிவ்ஸ் பூரண உடல் தகுதியினை பெறாதவிடத்து வரும் IPL போட்டிகளிலும் விளையாடமாட்டேன் என்று என்னிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் இடம்பெறவுள்ள சம்பியன்ஷிப் கிண்ண தொடரில் அவரை விளையாட வைப்பதே எமது அடுத்த பெரிய இலக்கு” என்று குருசிங்க கருத்து தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்றிருந்த T-20 தொடரில் தொடைத்தசை உபாதைக்குள்ளாகியிருந்த மெதிவ்ஸ் பங்களாதேஷ் உடனான T-20 தொடரில் தேக ஆரோக்கியம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதனால், பங்களாதேஷ் உடனான ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடர் மற்றும் அவுஸ்திரேலிய அணியுடான T-20 தொடர் ஆகியவற்றில் இலங்கை அணியின் தலைவர் பங்குபற்றியிருக்கவில்லை.
“இத்தொடர்களில் பங்குபெற்ற முடியாமல் போயிருப்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் பங்குபெற்ற முடியாமல் இருந்திருப்பினும் T20 தொடரினை எதிர்பார்த்திருந்தேன். ஆனால், உடற்பயிற்சி வல்லுனர்கள் நான் தேறுவதற்கு இன்னும் சில காலம் தேவை எனக்கூறியுள்ளனர். திட்டமிட்டபடி திங்கட்கிழமை பந்து வீச்சு பயிற்சிகளில் ஈடுபடவிருந்தேன். எனினும் அது சரியான முறையில் அமைந்திருக்கவில்லை“ என்று மெதிவ்ஸ் தெரிவித்திருந்தார்.