அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று முடிவடைந்த 42ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மொத்தமாக நான்கு தேசிய சாதனைகளும், இரண்டு போட்டி சாதனைகளும் முறியடிக்கப்பட்டன.
அதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரமும் தேசிய சாதனையொன்றை முறியடித்து யாழ்ப்பாணத்திற்கு மாத்திரமன்றி முழு வடக்கிற்கும் பெருமை சேர்த்துக் கொடுத்தார்.
வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்கேற்றிருந்த அனிதா, 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து கோலூன்றி பாய்தலில் புதிய தேசிய சாதனையை நிகழ்தினார். இவரது இந்த சாதனை முறியடிப்பு வடக்கில் விளையாட்டுத்துறை அபிவிருத்தியடைந்து வருவதற்கு ஒரு சிறந்த சான்றாகவும் அமைந்தது.
அது மட்டுமன்றி, இந்த சாதனை முறியடிப்பின் பின்னர் தற்பொழுது தேசிய மற்றும் சர்வதேச அளவில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் பேசும் மக்கள் வடக்கின் விளையாட்டுத்துறை குறித்தும் அனிதா குறித்தும் தேட ஆரம்பித்துள்ளனர்.
யார் இந்த அனிதா?
தனது ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் மேற்கொண்ட அனீதா, 13 வயதில் இருந்து தனது மெய்வல்லுனர் விளையாட்டுப் பயணத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து சிறந்த விளையாட்டு திறமை கொண்டிருந்த அவர், பின்னர் தனது கல்வியை தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியில் தொடர்ந்தார்.
கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தற்பொழுது தேசிய சாதனை நிகழ்த்தியுள்ள இவர், 13 வயதின் கீழ் மற்றும் 15 வயதின் கீழான பிரிவுகளில் போட்டியிட்ட போது 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், நீளம் பாய்தல் மற்றும் ஈட்டி எறிதல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார்.
பொதுவாக, சிறந்த விளையாட்டுத் திறமை உள்ளவர்கள் கல்வியிலும் சிறந்த முறையில் பிரகாசிப்பார்கள். அதேபோன்றுதான் அனிதாவும் அன்றிலிருந்தே கல்வி, விளையாட்டு இரண்டிலும் சிறந்த நிலையில் இருந்து வருகின்றார்.
அனிதா மாத்திரமன்றி, வடக்கின் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இவ்வாறு பல்திறன்களைக் கொண்டுள்ளனர். எனினும் அவர்கள் இன்னும் சமூகத்தின் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படாதவர்களாகவே இருந்து வருகின்றனர்.
கோலூன்றிப் பாய்தல் ஆரம்பம்
ஏனைய பல விளையாட்டுக்களில் ஈடுபட்டு வந்த அனிதாவின் சாதனைப் பயணம் 2012ஆம் ஆண்டு ஆரம்பமானது. முதல் முறையாக கோலூன்றிப் பாய்தல் போட்டி நிகழ்ச்சியில் 2012ஆம் அண்டு கலந்துகொண்ட அவர், அவ்வருடமே தேசிய மட்டப் போட்டிகளிலும் கலந்துகொண்டார். எனினும் அதன்போது, தேசிய மட்டத்தில் அவரால் எந்த வெற்றியையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
எவ்வாறிருப்பினும், முதல் வருடமே தேசிய மட்டப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அளவுக்கு தான் சென்றமையானது, தனக்கு இத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்பதை அவருக்கு அன்றே உணர்த்தியிருக்கும்.
எனினும் அதற்கு அடுத்த வருடமான 2013ஆம் ஆண்டே அவரது சாதனைகள் இடம்பெறத் தொடங்கின.
2013ஆம் ஆண்டு
அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3 மீட்டர்)
அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டி – ஈட்டி எறிதல் – 2ஆம் இடம் (31.82 மீட்டர்)
கனிஷ்ட தேசிய சம்பியன்சிப் போட்டிகள் – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (2.90 மீட்டர்)
சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3 மீட்டர்)
39ஆவது தேசிய விளையாட்டு விழா – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (2.80 மீட்டர்)
2014ஆம் ஆண்டு
அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் – (3.32 மீட்டர்) – போட்டிச் சாதனை முறியடிப்பு மற்றும் தேசிய சாதனை சமப்படுத்தல்)
கனிஷ்ட தேசிய சம்பியன்சிப் போட்டிகள் – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3 மீட்டர்)
சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3.20 மீட்டர்)
2015ஆம் ஆண்டு
அகில இலங்கை பாடசாலை மட்ட மெய்வல்லுனர் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3.20 மீட்டர்) (Colors award)
கனிஷ்ட தேசிய சம்பியன்சிப் போட்டிகள் – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3.10 மீட்டர்)
சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3.20 மீட்டர்)
41ஆவது தேசிய விளையாட்டு விழா – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3.25 மீட்டர்)
2016ஆம் ஆண்டு
கனிஷ்ட தேசிய சம்பியன்சிப் போட்டிகள் – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3 மீட்டர்)
சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3 மீட்டர்)
94ஆவது சிரேஷ்ட தேசிய சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – 2ஆம் இடம் (3.30 மீட்டர்)
சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3.35 மீட்டர்) – தேசிய சாதனை முறியடிப்பு
42ஆவது தேசிய விளையாட்டு விழா – கோலூன்றிப் பாய்தல் – முதலாம் இடம் (3.41 மீட்டர்) – தேசிய சாதனை முறியடிப்பு
அனிதா இவ்வருடம் இடம்பெற்ற சார் ஜோன் தர்பட் சம்பியன்சிப் போட்டி நிகழ்வின்போது 3.35 மீட்டர் உயரம் பாய்ந்து தேசிய சாதனையை ஏற்படுத்தியிருந்தார். எனினும் பின்னர் அந்த சாதனை ஹாஷிதா தில்ருக்க்ஷி (3.40 மீட்டர்) மூலம் இந்த வருடமே மற்றுமொரு போட்டி நிகழ்வின்போது முறியடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அண்மையில் இடம்பெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின்போது அனிதா 3.41 மீட்டர் உயரம் பாய்ந்து மீண்டும் தேசிய சாதனையை தன்வசப்படுத்தினார்.
சாதனைக்கு துணை நின்றவர்கள்
விளையாட்டில் ஒரு நீண்ட பயணத்தைக் கொண்டுள்ள அனிதாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் அவரது பயிற்சியாளர்களே. இவர் ஆரம்பத்தில் கமலமோகன் என்பவரிடம் பயிற்சிகளைப் பெற்று வந்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட பயிற்சியாளராக இருந்த ரமனனிடமும் அனிதா பயிற்சி பெற்றுள்ளார்.
எனினும் பிற்காலத்தில் அனிதாவின் பயிற்சியாளராக இருந்த சுபாஸ்கரன், அனிதாவின் வளர்ச்சிக்கு பாரியளவு பங்களிப்பு வழங்கியுள்ளார். இன்று அனிதா தேசிய சாதனை நிலைநாட்டி, இலங்கையில் உள்ள அனைவரும் வடக்கை திரும்பிப் பார்ப்பதற்கு வழி ஏற்படுத்தியதில் ஒரு பெரிய பங்கு பயிற்சியாளர் சுபாஸ்கரனுக்கும் உள்ளது.
பயிற்சியாளர் சுபாஸ்கரனைப் பொருத்தவரை, வலய மட்ட, மாவட்ட மட்ட, மாகாண மட்ட மற்றும் தேசிய மட்டத்தில் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பல வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கு முக்கிய காரணமாய் இருந்த ஒருவர். இவரது நீண்ட கால பயிற்றுவிப்பு சேவைக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாக எமக்கு அனிதாவின் சாதனையைக் குறிப்பிடலாம்.
அதேபோன்றுதான், அனிதாவின் பெற்றோர், குடும்பத்தினர் உட்பட பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவரது சாதனைக்கு பக்கபலமாகவும், உதவியாகவும் இருந்துள்ளனர்.
அதேபோன்று, எதிர்காலத்திலும் இவரது செயற்பாடுகளுக்கு குறித்த தரப்பினரின் பங்களிப்பு நிச்சயம் உதவியாய் இருக்கும்.
அனிதாவின் சாதனை வடக்கின் விளையாட்டு வளர்ச்சிக்கு ஒரு ஆதாரம்
30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் வட மாகாண இளைஞர், யுவதிகள் தேசிய அளவிலான விளையாட்டுக்களில் பிரகாசிப்பதற்கு ஒரு பாரிய தடையாக இருந்தது. அது மட்டுமன்றி வடக்கின் இலைமறை காய்கலாய் இருந்த அதிகமானவர்களுக்கு, தமது திறமையை நாட்டிற்கு காண்பிக்க கடந்த பல தசாப்தங்கள் இடமளிக்கவே இல்லை.
யுத்தம் இடம்பெற்ற போழுது வடக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்டமை மிகவும் குறைவு. மாறாக ஒரு விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றால், மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே அதில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு நிலைமை இருந்தது.
தனது சிறு காலத்தில் அனிதாவும் இவ்வாறான சவால்களுக்கு முகம்கொடுத்த ஒருவர். எனினும் அவ்வாறான சவால்களைக் கண்டு தனது விளையாட்டுக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. அனைத்து தடைகளையும் தாண்டி, இன்று இந்த தேசிய சாதனையை நிலைநாட்டி உள்ளமைக்கு அவரது மன தைரியமும், தன்னம்பிக்கையும் ஒரு ஆயுதமாக இருந்துள்ளது என்றே கூற வேண்டும்.
அனிதாவின் இந்த சாதனை, வடக்கின் விளையாட்டு அபிவிருத்தியை மாத்திரம் எடுத்துக் காட்டாமல், எதிர்காலத்தில் இன்னும் பல சாதனையாளர்கள் வடக்கில் இருந்து உருவாவதற்கான ஆரம்ப கட்டம் இது என்பதையும் உணர்த்துகின்றது.
அணிதாவின் எதிர்காலம் என்ன?
தேசிய சாதனை படைத்துள்ள அனிதா, தற்பொழுது விளையாட்டு விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவத் துறைக்கான பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளார். எனவே, அவரது எதிர்காலம் மிகவும் ஒளிமயமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
அனிதாவின் அடுத்த கட்டம், தனது உயர் கல்வியை தொடர்ந்துகொண்டே விளையாட்டிலும் ஈடுபடுவதாகும். எனினும் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்டு, அதில் சாதனை படைக்க வேண்டும் என்பதே அவரது கனவாக உள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் ஒலிம்பிக் உட்பட பல வகையான சர்வதேச மட்ட போட்டிகளில் கலந்துகொண்டுள்ளவர்களைப் பார்த்தால், அவர்கள் அனைவருக்கும் அனிதாவைப் போன்றதொரு விளையாட்டுப் பயணம் இருக்கின்றது. தேசிய அளவில் சாதனை படைத்தவர்களே, பிற்காலத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டிற்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளனர்.
அவ்வாறான ஒரு பயணத்தை தானும் மேற்கொண்டு இலங்கைக்கு பெருமையை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் தனது பெயரை உச்சரிக்கும் ஆசையோடு உள்ளார் அனிதா ஜெகதீஸ்வரம். எனினும் அதற்காக, இவ்வளவு காலமும் செய்த முயற்சிகளை விட பாரிய முயற்சிகளை இதன் பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதை அனிதாவும், அவரது பயிற்சியாளரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.
இவ்வளவு காலமும் இருந்ததைப் போல் இன்றி, இன்னும் பல உயர்ந்த மட்ட பயிற்சிகள் மற்றும் உடல், உள ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே அனிதாவினால் சர்வதேச மட்டத்தில் சாதிக்க முடியும். எனவே இவரது சர்வதேச சாதனைக் கனவுகளுக்கு பல தரப்பினரதும் உதவிகள் நிச்சயம் தேவைப்படுகின்றன. ஆகவே, இவ்வாறு யாழ் மண்ணில் இருந்து உருவாகியுள்ள தேசிய சாதனை சொந்தக்காரிக்கு உதவிகளைப் புரிவது பலரதும் கடமையாக இருக்கின்றது.
நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ள இவர் எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்திலும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று Thepapare.com சார்பாக அனிதாவை நாமும் வாழ்த்துகின்றோம்.