RCB அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் 

396

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் புதிய பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான அண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த சஞ்சய் பங்கர் மற்றும் இயக்குனர் மைக் ஹெசன் ஆகியோரின் ஒப்பந்தங்கள் நீட்டிக்கப்படாத நிலையில், அந்த அணியின் ஏழாவது பயிற்சியாளராக அண்டி பிளவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லாத அணிகளுள் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 3 தடவைகள் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆனால் கடந்த ஆண்டு IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் பிளே-ஓப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு சம்பியன் பட்டத்தை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் பங்கரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பரில் முடிவடைய உள்ள நிலையில், அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்குவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக RCB அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை RCB அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தனது புதிய ஒப்பந்தம் குறித்து அண்டி பிளவர் கருத்து தெரிவிக்கையில்,

”நான் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைவதை நினைத்து பெருமை கொள்கிறேன். 2024ஆம் ஆண்டு IPL தொடரில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன். நான் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, மீண்டும் டு பிளெசியுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாங்கள் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளது சிறப்பானதாக இருக்கப் போகிறது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான அண்டி பிளவர் IPL போட்டிகளில் லக்னொவ் சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<