அயர்லாந்து அணித் தலைமையில் அதிரடி மாற்றம்

379

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்ட அன்ட்ரூ பல்பைனி அப்பொறுப்பில் இருந்து விலகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயர்லாந்து கிரிக்கெட் சபை (Cricket Ireland) இந்த விடயத்தினை உத்தியோகபூர்வமாக உறுதி செய்திருப்பதோடு அயர்லாந்து அணியின் தற்காலிக தலைவராக போல் ஸ்டெர்லிங் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து வரலாறு படைத்த சமரி அதபத்து

கடந்த 2019ஆம் ஆண்டு அயர்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற பல்பைனி மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் அயர்லாந்தை 89 தடவைகள் வழிநடாத்தி இருக்கின்றார்.

எனினும் இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் அன்ட்ரூ பல்பைனி மூலம் வழிநடாத்தப்பட்ட அயர்லாந்து கிரிக்கெட் அணி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை இழந்ததோடு, தொடரின் குழுநிலைப் போட்டிகளிலும் ஒரேயொரு வெற்றியினை மாத்திரமே பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் நேபாளத்தினை வீழ்த்தி 7ஆம் இடத்தினை அயர்லாந்து பெற்றதன் பின்னர், தனது தலைவர் பொறுப்பில் இருந்து அன்ட்ரூ பல்பைனி இராஜினமா செய்வதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

”இதுவே (தலைவர் பொறுப்பினை திறக்க) சிறந்த தருணமாக கருதுகின்றேன். இது அணிக்கும் மிக முக்கியமானது. இனிவரும் காலங்களில் அணிக்கு என்னால் முயன்ற விடயங்களை வழங்கி சிறப்பாக செயற்படுவேன். இனிவரும் காலம் அணிக்கும் சிறந்ததாக அமையும் எனவும் எதிர்பார்க்கின்றேன்.”

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் வெளியேற்றம்

அதேநேரம் இதற்கு முன்னர் அயர்லாந்து கிரிக்கெட் அணியினை T20I போட்டிகளில் வழிநடாத்திய அனுபவம் கொண்டிருக்கும் போல் ஸ்டெர்லிங் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் வரை தற்காலிக தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அயர்லாந்து கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் பிரிவின் இயக்குனராக உள்ள ரிச்சர்ட் ஹோல்ட்ஸ்வோர்த், போல் ஸ்டேர்லிங்கின் தற்காலிக பதவி நிறைவுக்கு வந்த பின்னர் அயர்லாந்து கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் பல விடயங்களை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<