உலகக் கிண்ணத்திலிருந்து முழுமையாக வெளியேறும் அதிரடி வீரர் அன்ரூ ரசல்

478
PHOTO - GETTY IMAGES

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அன்ரூ ரசல், காயம் காரணமாக 2019ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.  

சாதனைகளுடனே இலங்கை இங்கிலாந்துக்கு எதிராக வெற்றியை பதிவு செய்தது

கடந்த 21ஆம் திகதி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிர்ச்சியான…….

இந்த உலகக் கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 4 போட்டிகளில் ஆடியிருந்த 31 வயதான அன்ரூ ரசல் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்த அளவு சோபிக்காது போனாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

எனினும், அன்ரூ ரசல் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தான் விளையாடிய போட்டிகளில் முழங்கால் உபாதை ஒன்றினால் அவஸ்தைக்கு உள்ளாகியிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. இந்த உபாதையிலிருந்து அவர் மீள முடியாத நிலையிலேயே உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கின்றார். 

உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாக தமது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், அன்ரூ ரசல் இல்லாமல் போவது   மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பாரிய இழப்பாக மாறியிருக்கின்றது. 

இதேநேரம், அன்ரூ ரசலின் இடத்தினை மேற்கிந்திய தீவுகள் அணியில் பிரதியீடு செய்ய 26 வயதான துடுப்பாட்ட வீரர் சுனீல் அம்பிரிஸிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வீரர்களுக்கு மஹேல கூறும் அறிவுரை

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 2017ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிய சுனீல் அம்பிரிஸ் இதுவரையில் ஆறு ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்ற போதிலும் அண்மையில் அயர்லாந்தில் இடம்பெற்று முடிந்த முக்கோண ஒருநாள் தொடரின் போட்டி ஒன்றில் 148 ஓட்டங்கள் பெற்று திறமையினை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு சுனீல் அம்பிரிஸ் ஒருநாள் போட்டிகளில் 105.33 என்கிற சிறந்த துடுப்பாட்ட சராசரியினையும் கொண்டிருக்கின்றார். 

இந்த உலகக் கிண்ணத் தொடரில் அடுத்ததாக இந்திய அணியுடன் விளையாடவுள்ள போட்டிக்கு முன்னர் அன்ரூ ரசலின் பிரதியீடான சுனீல் அம்பிரிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேற்கிந்திய தீவுகள் இந்திய அணியுடன் மோதும் உலகக் கிண்ணப் போட்டி மன்செஸ்டர் நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை (27) நடைபெறுகின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<