SSC விளையாட்டு மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஆனந்த மற்றும் நாலந்த கல்லூரிகளுக்கு இடையிலான 43ஆவது பெரும் சமரில் கொழும்பு, நாலந்த கல்லூரி இரண்டு விக்கெட்டுகளால் வெற்றியை சுவீகரித்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆனந்த கல்லூரி அணித் தலைவர் கவிஷ்க அஞ்சுல முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய அவ்வணி 25 ஓட்டங்களை பெறுவதற்கு முன்தாகவே இரண்டு விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் வீழ்ந்தது. எனினும், அதனை தொடர்ந்து களமிறங்கிய சம்மு அஷான் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கவிந்து கிம்ஹான் ஆகியோர் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். சிறப்பாக துடுப்பாடிய கவிந்து கிம்ஹான் 31 ஓட்டங்களால் பங்களிப்பு செய்தார்.
கவிந்துவின் ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய அசெல் சிகெரா மற்றும் சம்மு அஷான் ஆகியோர் இணைந்து நான்காவது விக்கெட்டுக்காக 103 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர். சிறப்பாக துடுப்பாடிய அசெல் சிகெரா 42 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அதே நேரம் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சம்மு அஷான் 8 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 96 ஓட்டங்களை அணி சார்பாக பதிவு செய்தார்.
[rev_slider dfcc728]
.
அதேநேரம் அணித் தலைவர் கவிஷ்க அஞ்சுல 38 ஓட்டங்களை குவித்தார், அந்த வகையில் கொழும்பு ஆனந்த கல்லூரி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 257 ஓட்டங்களை பதிவு செய்து கொண்டது. பந்து வீச்சில் திறமைகளை வெளிப்படுத்திய கொழும்பு நாலந்த கல்லூரி சார்பாக கழன பெரேரா, மலிங்க அமரசிங்க மற்றும் அசெல் குலதுங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை தங்களுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.
அதனையடுத்து 257 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நாலந்த கல்லூரி முதல் விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களை பெற்று சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது. சிறப்பாக துடுப்பாடிய தசுன் செனவிரத்ன 7 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 32 ஓட்டங்களை பெற்ற அதேவேளை அவிஷ்க பெரேரா 25 ஓட்டங்களை குவித்தார்.
இவ்விரு துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய மலிங்க அமரசிங்க 67 ஓட்டங்களை விளாசி அணியின் அதிக பட்ச ஓட்டங்களாக பதிவு செய்தார். எனினும், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆனந்த கல்லூரி, நாலந்த கல்லூரிக்கு நெருக்கடி அளித்தது.
எனினும், அதிக அழுத்தத்தின் மத்தியில், கசுன் சந்தருவன் ஆனந்த கல்லூரியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் இறுதி வரை போராடி வெற்றி இலக்கை அடைய உதவினார்.
இறுதி ஓவரில் 6 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் முதல் 5 பந்துகளுக்கு நான்கு ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற இறுதிப் பந்தில் இரண்டு ஓட்டங்கள் பெற வேண்டிய நிலை காணப்பட்டது. இறுதிப் பந்தை அதிரடியாக வீசிய சம்மு அஷானின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கசுன் சந்தருவன் அதனை தவறவிட்ட போதிலும், விக்கெட் காப்பாளர் பந்தினை தவறவிட்டதால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நாலந்த கல்லூரி இரண்டு ஓட்டங்களை பெற்று வெற்றியை சுவீகரித்தது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் கொழும்பு, ஆனந்த கல்லூரியை நாலந்த கல்லூரி வெற்றியீட்டிய முதல் தடவை இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
ஆனந்த கல்லூரி, கொழும்பு : 257/8 (50) – சம்மு அஷான் 96, அசெல் சிகெரா 42, கவிஷ்க அஞ்சுல 38, கவிந்து கிம்ஹான் 31, கழன பெரேரா 2/45, மலிங்க அமரசிங்க 2/62, அசெல் குலதுங்க 2/45
நாலந்த கல்லூரி, கொழும்பு : 258/8 (50) – மலிங்க அமரசிங்க 67, கசுன் சந்தருவன் 57*, தசுன் செனவிரத்ன 32, அவிஷ்க பெரேரா 25, சம்மு அஷான் 2/49, அசேல் சிகெரா 2/51