இரண்டாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்ட வீரரினை இணைக்கும் பங்களாதேஷ்

3
ANAMUL HAQUE

பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டிக்கான பங்களாதேஷ் குழாத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அனாமுல் ஹக் இணைக்கப்பட்டுள்ளார்.  

>>தோல்வியுறாத அணியாக லீக் போட்டிகளை நிறைவு செய்த இலங்கை A கிரிக்கெட் அணி<<

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணியானது அங்கே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று (23) நிறைவுக்கு வந்த நிலையில் அந்தப் போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை அடைந்திருக்கின்றது.  

விடயங்கள் இவ்வாறு காணப்பட சொந்த மண்ணில் நடைபெறும் தொடரினை தக்க வைக்கும் நோக்கில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது 15 பேர் அடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தமது வீரர்கள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.  

அறிவிக்கப்பட்டிருக்கும் பங்களாதேஷ் குழாத்தில் முதல் டெஸ்டில் ஆடிய அதே அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் முக்கிய மாற்றமாக சுமார் 3 வருட இடைவெளியின் பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அனாமுல் ஹக் பங்களாதேஷ் அணிக்காக ஆடும் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார். 32 வயது நிரம்பிய அனாமுல் ஹக் பங்களாதேஷ் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறந்த பதிவுகளை வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

மறுமுனையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய நாஹிட் ரனாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டு அவருக்குப் பதிலாக அறிமுக சுழல்வீரர் தன்வீர் இஸ்லாம் உள்வாங்கப்பட்டிருக்கின்றார். இதேவேளை முன்வரிசை துடுப்பாட்ட வீரரான ஷாகிர் ஹொசைனிற்கு இரண்டாவது டெஸ்டில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.  

பங்களாதேஷ் ஜிம்பாப்வே அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 27ஆம் திகதி சட்டோக்ரமில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் 

நஷ்முல் ஹொசைன் (தலைவர்), மஹ்முதுல் ஹசன், சாட்மன் இஸ்லாம், அனாமுல் ஹக், மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம், ஜாகேர் அலி, மெஹிதி ஹஸன் மிராஸ், தய்ஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், தன்வீர் இஸ்லாம், ஹசன் மஹ்மூட், சையத் காலேத் அஹ்மட், தன்சிம் ஹஸன் 

>>மேலும் கிரிக்கெட் செய்திளைப் படிக்க<<