எதிர்வரும் 2022இல் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா மற்றும் ஆசிய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வீரர்களின் உயர் ஆற்றல் பயிற்சிகளுக்காக மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக தொழில்சார் வீரர்களை உருவாக்கி, சர்வதேச மட்டத்தில் பதக்கங்களை வெல்கின்ற திறமை படைத்தவர்களாக அவர்களை பலப்படுத்துவதே இதன் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
>சர்வதேச மட்டத்தில் வெற்றி பெறும் மெய்வல்லுனர்களுக்கு மில்லியன் தொகை பரிசு
இதன்படி, குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வைபவம் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரியவின் தலைமையில் கடந்த 15ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தில் மெய்வல்லுனர், குத்துச்சண்டை, பளுதூக்கல், நீச்சல், ஜுடோ, பெட்மிண்டன், விசேட தேவைகள் கொண்ட பரா வீரர்கள் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களைச் சேர்ந்த 60 வீர, வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அவர்களது பயிற்சிகளை முன்னெடுப்பதற்கு தேசிய விளையாட்டு நிதியத்தினால் ஒவ்வொரு வீரருக்கும் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும்.
அதுமாத்திரமின்றி, குறித்த வீரர்களுக்கு மிக விரைவில் மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா பெறுமதியான போஷாக்கு கொடுப்பனவொன்றை வழங்குவதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
>>தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு
மறுபுறத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் உயர் ஆற்றல் பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பயிற்சியாளர்களுக்கும் அந்த வீரர்கள் பதக்கங்களை வெல்கின்ற போது ஒரு ஊக்கத் தொகையை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த வேலைத்திட்டமானது 2030ஆம் ஆண்டு வரை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மஹேல ஜயவர்தன தலைமையிலான தேசிய விளையாட்டுப் பேரவையின் ஆலொசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கபட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<