மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தை வென்றார் அமில

238

இலங்கை உடற்கட்டுமஸ்தான மற்றும் திடகாத்திர சம்மேளனம் 70ஆவது தடவையாக ஏற்பாடு செய்த தேசிய உடற்கட்டுமஸ்தான போட்டியில் 2017ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டத்தை இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வை.ஜி அமில பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படுகின்ற பிரதான உடற்கட்டுமஸ்தான போட்டியாக விளங்குகின்ற மிஸ்டர் ஸ்ரீலங்கா போட்டித் தொடரில் சிரேஷ்ட பிரிவுக்கான போட்டிகள் 55, 60, 65, 70, 75, 80, 85 மற்றும் 90 ஆகிய எடைப்பிரிவிலும், 21 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட பிரிவு, மூத்த வீரர்களுக்கான மாஸ்டர்ஸ் பிரிவு மற்றும் பெண்களுக்கான உடற்கட்டுமஸ்தான போட்டிகளும் இம்முறை போட்டித் தொடரில் முக்கிய அங்கம் வகித்தன.

இதன்படி, மூன்று பிரதான பிரிவுகளாக நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியாஸ்திரிகள் மட மண்டபத்தில் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 150 இற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து சுமார் 30 வீரர்களும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய விளையாட்டு விழா பளுதூக்கலில் 11 இலங்கை வீரர்கள்

மலரவிருக்கும் 2018ஆம் ஆண்டின் முற்பகுதியில்..

இந்நிலையில், சிரேஷ்ட பிரிவுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வை.ஜி அமிலவும், 2ஆவது இடத்தை இராணுவத்தைச் சேர்ந்த ஏ.ஏ சம்பத் மற்றும் 3ஆவது இடத்தை இலங்கை கடற்படையைச் சேர்ந்த டி.எஸ் டயஸும் பெற்றுக்கொண்டனர்.

இதனைவிட 21 வயதுக்கு உட்பட்ட கனிஷ்ட பிரிவினருக்கான பகிரங்க போட்டியில் சம்பியன் பட்டத்தை இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த எம். ராம்குமார் பெற்றுக்கொண்டதுடன், மூத்த வீரர்களுக்கான பிரிவில் சம்பியன் பட்டத்தை நீர்கொழும்பு பவர் டெக் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த நிஷாந்த குமார பெற்றுக்கொண்டார். 2ஆவது இடத்தை உனவடுன பிட்னஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எல்.எச்.வி லக்ஷிதவும், 3ஆவது இடத்தை பிட்னெஸ் எரீனா விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த தசுன் சஜிந்தவும் பெற்றுக்கொண்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் சம்மேளனத்தின் தலைவர் வொரன்ட் கித்சிறி பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.