அம்பத்தி ராயுடுவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை

401
Image Courtesy - CricketCountry.com

இந்திய அணி வீரர் அம்பத்தி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீசுவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடைவிதித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலிய நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருதரப்பு சுற்றுப்பயணம் ஒன்றில் ஆஸி. கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடியிருந்தது.

துடுப்பாட்டத்தில் செய்த தவறே தோல்விக்கு காரணம் என்கிறார் சந்திமால்

அவுஸ்திரேலிய பந்துவீச்சார்களுக்கு எதிராக எமது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக்…

இதில் இந்திய அணியின் ஒருநாள் குழாமில் துடுப்பாட்ட வீரரும், பகுதிநேர பந்துவீச்சாளருமான அம்பத்தி ராயுடு இடம்பெற்றிருந்தார். இரு அணிகளுக்கும் இடையில் கடந்த 12 ஆம் திகதி சிட்னியில் நடைபெற்றிருந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இவர் விளையாடியிருந்தார்.

குறித்த போட்டியில் முதலில் ஆஸி. அணி துடுப்பெடுத்தாடியிருந்தது. இதன் போது இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியினால் அம்பத்தி ராயுடு பந்து வீசுவதற்காக அழைக்கப்பட்டு 2 ஓவர்கள் பந்துவீசியிருந்தார்.

இவர் குறித்த போட்டியில் பந்துவீசியதன் பின்னர் இவரின் பந்துவீச்சு  குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. இவரின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார்களும் பல திசையிலிருந்து எழுந்தன. இவருடைய பந்துவீச்சானது சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய நியதிகளுக்கு மாற்றமாக 15 பாகைக்கு மேல் சென்று வீசப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த புகார்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது இவரின் பந்துவீச்சை பரிசோதனைக்குட்படுத்த எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஆஜராகுமாறு அறிவிப்பு விடுத்திருந்தது. அத்துடன் குறித்த 14 நாட்களுக்குள் அவருக்கு தொடர்ந்து பந்துவீசவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில் இவருக்கு வழங்கப்பட்டிருந்த 14 நாட்கள் கொண்ட கால அவகாசமானது நேற்றுடன் (27) நிறைவுக்கு வந்திருந்தது. குறித்த நாட்களுக்குள் இவர் தனது பந்துவீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது இவரை அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் பந்துவீச இன்றிலிருந்து தடை விதித்துள்ளது.

இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட் தவிர்ந்த ஏனைய லீக் தொடர்களில் இவரால் பந்துவீச முடியும். இவர் தனது பந்துவீச்சு பாணியை மாற்றிய பின்னர் மறு பரிசோதனைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இவர் ஒரு பகுதிநேர பந்துவீச்சாளர் என்ற காரணத்தினால் இவரின் தடை இந்திய அணிக்கு பாரியளவான தாக்கத்தை ஏற்படுத்தாது.

33 வயதான அம்பத்தி ராயுடு இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மூலமாக இந்திய தேசிய அணிக்குள் 2013ஆம் ஆண்டு தடம் பதித்திருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இதுவரையில் அறிமுகம் பெறாவிட்டிருந்தாலும், 50 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 6 டி20 சர்வதேச போட்டிகள் உள்ளடங்களாக மொத்தமாக 56 சர்வதேச போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளில் அணித்தலைவரினால் அழைக்கப்படும் நேரத்தில் மாத்திரம் பகுதிநேர பந்துவீச்சாளராக பந்துவீசி 3 ஒருநாள் விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

முழுநேர துடுப்பாட்ட வீரரான இவர் 50 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 3 சதங்கள், 9 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக மொத்தமாக 1571 ஓட்டங்களை குவித்துள்ளார். அத்துடன் நேற்று (28) நடைபெற்றிருந்த நியூஸிலாந்து அணியுடனான மூன்றாவது போட்டியில் நிதானமாக துடுப்பெடுத்தாடி 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று அணியின் வெற்றியில் ஒரு பங்காளராக மாறியிருந்தார்.

துடுப்பாட்டத்தில் செய்த தவறே தோல்விக்கு காரணம் என்கிறார் சந்திமால்

அவுஸ்திரேலிய பந்துவீச்சார்களுக்கு எதிராக எமது துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களைக்…

ஐ.பி.எல் போட்டிகளில் கடந்த வருட பருவகாலத்திற்கு முன்னர் தொடர்ச்சியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவந்த இவர் கடந்த வருடம் முதல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றார்.

இதேவேளை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இதே குற்றச்சாட்டில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்துகொண்டிருந்த அகில தனஞ்சய பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் இவரின் பந்துவீச்சு 15 பாகையை விட மேலதிகமாக உள்ளதனால் சர்வதேச போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டிருந்தது.

அகில தனஞ்சய முழுநேர பந்துவீச்சாளராக காணப்பட்டதன் காரணமாக இவரின் தடை இலங்கை அணியின் வெற்றியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க