அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு, துடுப்பாட்ட வீராங்கனையான அலீஷா ஹேலி, கிரிக்கெட் பந்தினை (கடினப்பந்து) மிக உயரத்திலிருந்து பிடியெடுத்தவர் என்ற கிண்ணஸ் உலக சாதனையை நேற்றைய தினம் (21) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நிகழ்த்தியுள்ளார்.
சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை மகளிர்
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக மூன்று ஐசிசி…..
அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரை பிரபலப்படுத்தும் முகமாக 28 வயதான அலீஷா ஹேலி, இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஆளில்லா விமானத்தின் (Drone) மூலமாக 80 மீற்றர் உயரத்திலிருந்து தரைக்கு செலுத்தப்பட்ட பந்தை, ஆரம்ப பயிற்சியின் போது தவறவிட்ட போதும், மூன்றாவது முறை இலாவகமாக பிடித்த அலீஷா ஹேலி, கிண்ணஸ் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் கிரிக்கெட் பந்தினை மிக உயரத்திலிருந்து பிடித்தவர் என்ற சாதனையை ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கிரிஸ்டன் பௌம்கார்ட்னர் தன் வசப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2016ம் ஆண்டு கிரிக்கெட் பந்தினை 62 மீற்றர் உயரத்திலிருந்து பிடியெடுத்து சாதனை படைத்திருந்தார்.
எனினும் கிரிஸ்டன் பௌம்கார்ட்னருக்கு முன்னர் இந்த சாதனையை இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நஷீர் ஹுசைன் படைத்திருந்தார். நஷீர் ஹுசைன் கிரிக்கெட் பந்தினை 49 மீற்றர் உயரத்திலிருந்து பிடியெடுத்து சாதனை படைத்திருந்தார். அதில், நஷீர் ஹுசைன் தனது மூன்றாவது முயற்சியில் 121 (400 அடி) மீற்றர் தூரத்திலிருந்து ஆளில்லா விமானம் மூலம் வீசப்பட்ட பந்தினையும் பிடியெடுக்க முயற்சி செய்திருந்தார்.
எவ்வாறாயினும், தற்போது அலீஷா ஹேலி 80 மீற்றர், அதாவது 263 அடி உயரத்திலிருந்து எறியப்பட்ட பந்தினை பிடியெடுத்து, இதற்கு முன்னர் இருந்த சாதனைகளை முறியடித்துள்ளார். முதல் இருந்த சாதனையை விட இவர், மேலதிகமாக 18 மீற்றர் உயரத்திலிருந்து பந்தை பிடியெடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அலீஷா ஹேலியின் இந்த சாதனையானது, சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இணைந்து, ஐசிசி மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரை விளம்பரப்படுத்தும் முகமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்வரும் மகளிர் T20I உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, அதிகமான இரசிகர்களை மைதானத்து அழைத்து வந்து உலக சாதனையை நிகழ்த்தும் முகமாகவே இந்த விளம்பரப்படுத்தல்கள் நடைபெற்று வருகின்றன.
கலிபோர்னியாவில் 1999ம் ஆண்டு நடைபெற்ற பிபா மகளிர் உலகக் கிண்ணத் கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியை பார்வையிட 90,185 இரசிகர்கள் வருகை தந்திருந்தனர். இந்த சாதனையை முறியடிக்கும் முகமாகவே ஐசிசி மற்றும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா விளம்பரப்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<