அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றவுள்ள அனைத்து இலங்கை வீரர்களுக்கும் நாளாந்தம் 40 அமெரிக்க டொலர் கொடுப்பனவும், 10 ஆயிரம் டொலர் விசேட கொடுப்பனவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய, இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இலங்கையிலிருந்து எட்டு வீரர்கள் பங்கேற்பு?
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த மாதம் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்படி, இம்முறை ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கு இதுவரை ஐந்து வீரர்கள் மாத்திரம் இலங்கையில் இருந்து தகுதிபெற்றுள்ளார்கள். இதில் மெதில்டா கார்ல்சன் (குதிரைச் சவாரி), மில்கா கிஹானி (ஜிம்னாஸ்டிக்), டெஹானி எகொடவெல (குறிபார்த்து சுடுதல்), நிலூக கருணாரத்ன (பெட்மிண்டன்) மற்றும் சாமர நுவன் (ஜுடோ) ஆகிய ஐந்து வீரர்களும் இம்முறை இலங்கை சார்பாக ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில், வரலாற்றில் முதல்தடவையாக ஒலிம்பிக் செல்லும் இலங்கை வீரர்கள் அனைவருக்கும் 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களும், அதற்கு மேலதிகமாக நாளாந்தம் 40 அமெரிக்க டொலர்களும் விசேட கொடுப்பனவாக விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தமட்டில் டெஸ்ட் மற்றும் T20 போட்டியொன்றில் விளையாடினால் வீரரொருவருக்கு கிடைக்கின்ற கொடுப்பனவை ஒத்ததாக இந்த உதவித்தொகை அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
SLCயின் அனுசரணையை புறக்கணித்த தேசிய ஒலிம்பிக் சங்கம்
அதேநேரம், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இலங்கையின் வீர வீராங்கனைகளுக்காக வணிக வகுப்பு விமான சேவை வசதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயிற்றுவிப்பாளர்களுக்கு, 5 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் நாளாந்தம் 40 டொலர் கொடுப்பனவு வழங்குவதற்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே, இவ்வாறு ஒலிம்பிக்கில் பங்குபெற தகுதிபெற்ற வீரர்களுக்கு உதவித்தொகை வழங்குவது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்,
”இதுவரை, ஐந்து வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர், மேலும் மூன்று அல்லது நான்கு பேர் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஒலிம்பிக் செல்லும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் 10,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையும், மேலதிகமாக நாளாந்தம் 40 அமெரிக்க டொலர் கொடுப்பனவும் வழங்க முடிவு செய்துள்ளோம்.
அதேபோல, ஒரு பயிற்சியாளருக்கு 5,000 அமெரிக்க டொலர்கள் உதவித்தொகையுடன், ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர் கொடுப்பனவும் வழங்க முடிவு செய்துள்ளோம்.
ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற விளையாட்டு வீரர்களின் உயர் மதிப்பு மற்றும் விளையாட்டுக்காக அவர்கள் செய்த அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சினால் இவ்வாறு உதவித்தொகை ஒன்றை வழங்குவதற்கு முடிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்” என அவர் தெரிவித்தார்.
பொன்டேரா நிறுவனத்தால் 60 வீரர்களுக்கு ஊட்டச்சத்து பொதிகள்
ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவது என்பது ஒரு வீரர் அடையக்கூடிய மிகப்பெரிய சாதனையாகும். அவர்களின் திறமைகளை இவ்வாறு தான் நாங்கள் பாராட்ட வேண்டும். ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான வசதிகளை வழங்குமாறு நான் ஏற்கனவே விளையாட்டுத்துறை அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளேன்“ எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, இம்முறை ஒலிம்பிக்கில் வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், அதிகாரிகள் என 27 பேர் பங்குபற்றவுள்ளதுடன், இவர்களுக்காக 38 மில்லியன் ரூபா நிதி விளையாட்டுத்துறை அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் விசேட அழைப்பாளர்களாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது தனிப்பட்ட செலவில் ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்று ஆரம்ப விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவார் என விளையாட்டுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க …