இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்துக்கான உள்ளூர் கழகங்களுக்கு இடையிலான ஒரு நாள் போட்டித் தொடரில் இன்றைய தினம் (17) ஒரேயொரு போட்டி நடைபெற்றது. இதில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறையிலும் பிரகாசித்த கொழும்பு கிரிக்கெட் கழகம், 150 ஓட்டங்களால் பதுரெலிய அணிக்கு எதிராக அபார வெற்றியீட்டியது.
கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பதுரெலிய கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை எதிரணிக்கு வழங்கியது.
இதன்படி முதலில் துடுப்பாடிய கொழும்பு அணி மெதுவான ஆரம்பத்தினை பெற்றுக் கொண்டதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதில் கொழும்பு அணிக்கு முதல் ஓவரிலேயே கவீன் பண்டார ஓட்டமின்றி LBW முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து டில்ஷான் முனவீர 6 பந்துகளுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 11 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இவ்விரண்டு விக்கெட்டுக்களையும் திலேஷ் குணவர்தன கைப்பற்றயிருந்தார்.
உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கும் மாலிங்கவின் மற்றுமொரு மைல்கல்
4 ஆவது விக்கெட்டிற்காக ஜோடி சேர்ந்த மாதவ வர்ணபுர மற்றும் ரொன் சந்திரகுப்த 119 ஓட்டங்களை பகிர்ந்திருந்த வேளை, மாதவ வர்ணபுர, 55 ஓட்டங்களுடன் அசங்க சில்வாவின் பந்தில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நிதானமாக துடுப்பாடி அரைச்சதம் கடந்திருந்த ரொன் சந்திரகுப்த அதிரடியாக விளையாடி, 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.
எனினும், அவ்வணிக்காக 6ஆவது இலக்கத்தில் களமிறங்கி அதிரடியாக துடுப்பெடுத்தாடிய, வனிந்து ஹசரங்க, 49 பந்துகளில் 87 ஓட்டங்களைப் பெற்று மேலும் வலுச்சேர்க்க, கொழும்பு அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் பதுரெலிய அணிக்காக இடதுகை மித வேகப் பந்துவீச்சாளரான திலேஷ் குணரத்ன 50 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தினார்.
பின்னர் 307 ஓட்டங்கள் என்ற கடின வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய பதுரெலிய அணி, ஆரம்பம் முதல் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
தொடர்ச்சியான முறையில் விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்த பதுரெலிய அணி, 37.2 ஓவர்களுக்கு மாத்திரம் முகங்கொடுத்து 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
கிரிக்கெட் உலகிற்கு மோசமான நடத்தைகளை வெளிக்காட்டிய பங்களாதஷ் வீரர்கள்
பதுரெலிய அணி சார்பாக 3ஆம் இலக்கத்தில் களமிறங்கி இறுதிவரை துடுப்பாட்டத்தில ஈடுபட்ட டில்ஹான் குரே, 76 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றக்கொண்டார்.
பந்துவீச்சில் கொழும்பு அணியின் லக்ஷான் சந்தகன் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்ததுடன், லஹிரு மதுஷங்க மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தமது அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
போட்டியின் சுருக்கம்
கொழும்பு கிரிக்கெட் கழகம் – 306/8 (50) – ரொன் சந்திரகுப்த 96, வனிந்து ஹசரங்க 87, மாதவ வர்ணபுர 55, திலேஷ் குணரத்ன 5/50
பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 156 (37.2) – டில்ஹான் குரே 76, லக்ஷான் சந்தகென் 3/41, லஹிரு கமகே 3/47, லஹிரு மதுஷங்க 2/18, வனிந்து ஹசரங்க 2/42
முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 150 ஓட்டங்களால் வெற்றி