நெஸ்லே லங்கா நிறுவனத்தின் மைலோ அனுசரணையுடன் 2ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை பாடசாலைகள் அஞ்சலோட்டப் போட்டிகள் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை முதற்தடவையாக யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்வி அமைச்சும், இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் சம்மேளனமும் இணைந்து நடாத்துகின்ற இம்முறைப் போட்டித் தொடரில் நாடளாவிய ரீதியிலிருந்து 164 ஆண்கள் பாடசாலைகளும், 138 பெண்கள் பாடசாலைகளும் (302 பாடசாலைகள்) கலந்துகொள்ளவுள்ளன.
முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி
முதல் இடத்தைப் பறிகொடுத்த அஷ்ரப் : நிமாலிக்கு அதிர்ச்சித் தோல்வி..
பாடசாலைகள் விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய தொடராக 1984ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வந்த இப்போட்டித் தொடர் தவிர்க்க முடியாத காரணத்தால் 2004ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. எனினும், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் முயற்சியால் கடந்த வருடம் கண்டியில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கிடையில் சமத்துவம், அணியாக வேலை செய்தல், சகோதரத்துவம், கூட்டுறவு, நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் நோக்கில் இம்முறை யாழ். மண்ணில் இப்போட்டிகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12, 14, 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளின் கீழ் ஆண், பெண் என இரு பாலாருக்கும் நடாத்தப்படவுள்ள இம்முறை போட்டித் தொடரில் 38 அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 5,100 மாணவர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் 4x100, 4x200, 4x400 மற்றும் 4x800 வரையான அஞ்சலோட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான 4x50 அஞ்சலோட்டப் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.
இந்நிலையில், முதற்தடவையாக கலப்பு பாடசாலைகளுக்கான போட்டிகளை நடாத்துவதற்கும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் வெற்றிபெறும் அணிகளின் புள்ளிகளும் ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த தொடரின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.