34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து நான்காவது நாளாகவும் இன்று (04) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றன.
இதில் 17 நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன், போட்டிகளின் முடிவில் 10 புதிய போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் ஏழு சாதனைகள் சுவட்டு நிகழ்ச்சிகளிலும், மூன்று சாதனைகள் மைதான நிகழ்ச்சியிலும் நிலைநாட்டப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஒரே நாளில் 3 இரட்டைச் சாதனைகள்; வட மாகாணத்துக்கு மேலும் 3 பதக்கங்கள்
இன்று காலை நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் ஹென்தொட்ட விஜயவர்தன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க (9.86 செக்.) மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் ஓட்டப் போட்டியில் நுகேகொடை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த சனெல்லா செனவிரத்ன (10.80 செக்.), ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர். இவ்விரண்டு வீரர்களும், நேற்று நடைபெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை மெய்வல்லுனரில் மத்திய தூரப் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற வலள ஏ ரத்னாயக்க கல்லூரி வீரர்களைப் பின்தள்ளி, அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை நிலைநாட்டியிருந்தனர்.
இதில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் அம்பாந்தோட்டை சூரியவெவ தேசிய பாடசாலையைச் சேர்ந்த தினூஷ சமிதிக்க டி சில்வா ஒரு நிமிடம் 54.74 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, 2001 ஆம் ஆண்டு வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த மனோஜ் புஷ்பகுமாரவினால் (ஒரு நிமிடம் 56.03 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 7 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
அதே பாடசாலையைச் சேர்ந்த பினாதி மல்ஷா உதய குமாரி, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் 2 நிமிடங்களும் 16.19 செக்கன்களில் கடந்தார்.
இதேநேரம், முதல் மூன்று தினங்களில் வட மகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள், மைதான நிகழ்ச்சிகளில் பதக்கங்களை வென்றதைப் போல இன்றைய தினமும் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்தனர்.
டக்சிதா, தனுசங்கவிக்கு பதக்கங்கள்
18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த வட மாகாண வீராங்கனைகளுக்கு இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.
தேசிய விளையாட்டு விழா கயிறு இழுத்தலில் ஊவா, மேல் மாகாணங்கள் சம்பியன்
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற 56 ஆவது தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் என். டக்சிதா, 3.00 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இது இவ்வாறிருக்க, இப்போட்டிப் பிரிவில் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 3.01 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சந்திரசேகரன் ஹெரினா முதல் சுற்றுடன் வெளியேறினார்.
இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டெட் கல்லூரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா அவ்ஷதி விக்ரமசேகர, 3.10 மீற்றர் உயரம் தாவி, புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முன்னதாக, 2013 ஆம் ஆண்டு வலள ஏ ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த எச். கே தர்மரத்ன என்ற மாணவியால் (3.11 மீற்றர்) நிலைநாட்டிய சாதனையை சுமார் 5 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.
அத்துடன், கடந்த மாதம் நடைபெற்ற சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்ட அவர், 3.00 மீற்றர் உயரத்தை தாவி தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், யாழ். அளவெட்டி அருணோதயாவைச் சேர்ந்த பி. தனுசங்கவி 2.90 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். இவர் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முதல் தடவையாக பதக்கமொன்றினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அபிஷாந்துக்கு வெள்ளிப் பதக்கம்
18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த டி. அபிஷாந்த், 41.44 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற 56 ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்கேற்றிருந்த அபிஷாந்த், 38.68 மீற்றர் தூரத்தை எறிந்து 5 ஆவது இடத்தையும், 20 வயதுக்கு உட்பட்ட சம்மட்டி எறிதலில் 35.59 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தினையும் அவர் வென்றிருந்தார்.
குறித்த போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி மாணவன் அகலங்க விஜேசூரிய 42.10 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தையும், சிலாபம் புனித மரியாள் ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த நிபுன் திருக்ஷன் பெரேரா 41.38 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பாடசாலை மெய்வல்லுனரில் தங்கம் வென்று சாதனை படைத்த ரஸ்னி அஹமட்
அரவிந்தனுக்கு 2ஆவது பதக்கம்
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த பதுளை சரஸ்வதி தேசிய பாடசாலையைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன், புதிய வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். போட்டியை அவர் ஒரு நிமிடமும் 54.89 செக்கன்களில் கடந்தார்.
2015 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் பங்கேற்று வருகின்ற அரவிந்தன், கடந்த மே மாதம் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் 4 ஆவது இடத்தையும், அதற்கு முன் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
இது இவ்வாறிருக்க, இறுதியாக கடந்த மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற சேர். ஜோன் டார்படர் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரிலும் (ஒரு நிமிடமும் 55.65 செக்.) அவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நேற்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அரவிந்தன், 4 நிமிடங்கள் 01.18 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதே நேரம், குறித்த போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியின் இசுரு லக்ஷான் (ஒரு நிமி. 54.57 செக்.) தங்கப் பதக்கத்தையும், வலள ஏ ரத்னாயக்க கல்லூரியின் பிரதீப் குமார (ஒரு நிமிடம் 56.06 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.
உதயவானியை வீழ்த்திய ஹஸ்னா
கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற மூதூர் பட்டித்திடல் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி, இன்று மாலை நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 25.80 மீற்றர் தூரத்தை எறிந்து 5 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் (39.12 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்ற உதயானி, அதற்கு முன் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில், (34.92 மீற்றர்) 2 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும், குறித்த போட்டியில் பாணந்துறை அகமதி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ஹஸ்னா ஹிராசா டீன், 38.50 மீற்றர் தூரத்தை எறிந்து வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கப் பதக்கம் வென்ற ஹஸ்னா, மே மாதம் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 39.06 மீற்றர் தூரத்தை எறிந்து நான்காவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இறுதி வரை போராடியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த யாழ் ஏஞ்சல்
இதேநேரம், குறித்த போட்டியில் அம்பாந்தோட்டை வீரகெடிய ராஜபக்ஷ கல்லூரியைச் சேர்ந்த ஹசினி ஷெஹானா (38.35 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ். மதுஷானி (3680 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
சாதனையை தவறவிட்ட ஜெரமி
20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஜெரமி ஸ்டெனிஸ்லோஸ், 0.01 மீற்றரினால் 4 வருடங்கள் பழமையான (14.81 மீற்றர்) சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டார்.
குறித்த போட்டியில் அவர் 14.80 மீற்றர் தூரத்திற்குப் பாய்ந்து வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
பாடசாலை மெய்வல்லுனர் அரங்கில் முப்பாய்ச்சல் போட்டிகளில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஜெரமி, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி (14.79 மீற்றர்) தங்கப் பதக்கம் வென்று தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.
இதன்படி, கடந்த மே மாதம் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் பங்குகொண்ட ஜெரமி, 14.79 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.
மிதுன்ராஜுக்கு 2ஆவது தோல்வி
16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், 5 ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். போட்டியில் அவர் 14.26 மீற்றர் தூரத்தை எறிந்தார்.
இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட உபாதையுடன் குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட அவர், 14.55 மீற்றர் தூரத்தை எறிந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இதே போட்டியில் 14.07 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை மிதுன்ராஜ் வெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், தட்டெறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்ற மிதுன்ராஜ், போட்டிகளின் இரண்டாவது நாளன்று நடைபெற்ற தட்டெறதில் போட்டியில் 50.83 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 54.07 மீற்றர் தூரத்தை எறிந்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
ராங்பூர் அணிக்கு த்ரில் வெற்றிகளை பெற்றுத்தந்த திசரவுக்கு வாய்ப்பில்லை
இந்த நிலையில், 15.46 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் மாரசிங்க வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், 14.71 மீற்றர் தூரத்தை எறிந்த கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெவிந்து போகொடகே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
கடைசி நாள்
இது இவ்வாறிருக்க, தொடர்ந்து 4 நாட்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவந்த 34ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஐந்தாவதும், இறுதியுமான நாளான நாளை (5) 27 நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளது.
அத்துடன் நாளை மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பரிசளிப்பு நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<