ஒரே நாளில் 3 இரட்டைச் சாதனைகள்; வட மாகாணத்துக்கு மேலும் 3 பதக்கங்கள்

354

34 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் இன்று (03) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தன.

பாடசாலை மெய்வல்லுனரில் தங்கம் வென்று சாதனை படைத்த ரஸ்னி அஹமட்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 2018ஆம் ஆண்டுக்கான அதிவேக..

இதில் 41 நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன், மைதானம் மற்றும் சுவட்டு நிகழ்ச்சிகளில் 12 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டிருந்தன. முதல் நாளன்று 3 போட்டி சாதனைகளும், இரண்டாவது நாளில் 10 போட்டிச் சாதனைகளும் முறியடிக்கப்பட்ட நிலையில், போட்டிகளின் மூன்றாவது நாள் நிறைவில் மொத்தம் 29 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். அத்துடன், ஒரு போட்டிச் சாதனை சமப்படுத்தப்பட்டது.

ஹிருஷ, ருமேஷ் இரட்டைச் சாதனை

போட்டிகளின் 3 ஆவது நாளான இன்று நடைபெற்ற மைதான நிகழ்ச்சிகளில் 3 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பாணந்துறை லைசியம் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த நலீமா லஹிருனி டி சொய்ஸா 1.53 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டிச் சாதனை படைத்தார்.

16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ஹிரூஷ ஹஷேன் (7.04 மீற்றர்) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

அதனையடுத்து, சுமார் 3 மணி நேர இடைவெளியின் பிறகு நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றியிருந்த ஹிரூஷ ஹஷேன், 22.53 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2ஆவது இடத்தைப் பெற்ற ஹிரூஷ, இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஹெட்ரிக் பதக்கம் வென்ற முதல் வீரராக இடம்பெற்றார்.

இதேநேரம், நேற்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த ருமேஷ் தரங்க, இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 66.49 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, இம்முறை அகில இலங்கை விளையாட்டு விழாவில் இரட்டைச் சாதனைகளுடன் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது வீரராக அவர் இடம்பிடித்தார்.

இதேவேளை, புனித பேதுரு கல்லூரிக்காக தேசிய மட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று வருகின்ற ஹிரூஷ ஹஷேன் மற்றும் ருமேஷ் தரங்க ஆகிய வீரர்கள், கடந்த மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற சேர் ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டிகளில் புதிய போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கத்தினை வென்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>> பாடசாலைகள் மெய்வல்லுனர் இரண்டாம் நாளில் மேலும் 11 சாதனைகள் முறியடிப்பு

ஹெட்ரிக் சாதனை படைத்த காவிந்தி

பாடசாலை அரங்கில் 200 மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற நாவல ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த காவிந்தி சன்ஞசனா எதிரிசிங்க, இன்று காலை நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 56.91 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனை படைத்தார். முன்னதாக கடந்த வருடம்  நிலைநாட்டிய சாதனையை அவரே முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் தகுதிச் சுற்றுப் போட்டியை 25.68 செக்கன்களில் நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனை படைத்த காவிந்தி சஞ்சனா, இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் இறுதிப் போட்டியில் சொந்த சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியை நிறைவுசெய்ய 25.47 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, 2002ஆம் ஆண்டு தொலங்கமுவ மத்திய கல்லூரியைச் சேர்ந்த சி. ஜயமான்ன மாணவியால் (26.00 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

இதன்படி, ஒரே நாளில் இரண்டு சாதனைகளை 2 மணித்தியாலங்களில் இவர் நிலைநாட்டியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

சுவட்டு நிகழ்ச்சிகளில் 13 சாதனைகள்

அதேபோன்று சுவட்டு நிகழ்ச்சிகளிலும் 13 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த தெஹான் சன்ஜுல விஜேசூரிய (13.59 செக்.), 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிலாபம் விஜய கட்டுபொத்த மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷசினி பாக்யா (14.00 செக்.), 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஹென்தொட்ட விஜயவர்தன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க (11.89 செக்.), 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சனெல்லா செனவிரத்ன (12.95 செக்.), ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

இதேநேரம் மத்திய தூரப் போட்டிகளில் ஒன்றான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் 3 போட்டிச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த துலேன் குலரத்ன (49.95 செக்.), 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நாவல ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த கவிந்தி சன்ஜனி எதிரிசிங்க (56.91 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த ருசிரு மல்ஷான் சில்வா (48.16 செக்.) ஆகிய வீரர்கள் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் திலூஷ காரியவசம் 14.21 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, 2015ஆம் ஆண்டு கலேவல மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஐ. மிலிந்த மாணவனால் (14.23 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

>> ”வடக்கின் கில்லாடி யார்?” இறுதிப் போட்டியில் இளவாலை யங் ஹென்றீசியன்ஸ்

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட டி. கௌஷல்யா, 14.86 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக, 2008ஆம் ஆண்டு இரத்தினபுரி பெர்ங்யூசன் உயர்தர பாடசாலையைச் சேர்ந்த இஷாரா சந்தீபனி மாணவியால் (15.27 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

அருணோதயாவுக்கு மேலும் இரு பதக்கங்கள்

மைதான நிகழ்ச்சிகளில் ஒன்றான கோலூன்றிப் பாய்தலில் பிரகாசித்திருந்த வட மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஓரு வெண்கலப் பதக்கத்தினை வென்றனர்.

இன்று காலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த எஸ். திஷாந்த், 4.35 மீற்றர் உயரத்தைத் தாவி வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முதற்தடவையாக பங்குபற்றிய எஸ். திஷாந்த், 3.50 மீற்றர் உயரம் தாவி தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த காலங்களில் நீளம் பாய்தல் மற்றும் சட்டவேலி ஓட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வந்த திஷாந்த், அக்கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் பயிற்றுவிப்பாளர் பிரதீபனின் வழிகாட்டலுடன் கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த மற்றுமொரு வீரரான வி. ருஷான் மற்றும் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் எஸ். ஜம்சன் ஆகியோர் 3.80 மீற்றர் உயரங்களைத் தாவி சம இடங்களைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதில் அருணோதயாவின் வி. ருஷான் முதல் தடவையாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் போட்டியிட்டு இருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், கடந்த மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவிய தெல்லிப்பளை மகாஜனாவின் எஸ். ஜம்சன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட நீர்கொழும்பு புனித ஜோசப் கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த மொஹமட் சைன், 13.33 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரிஹானுக்கு வெள்ளிப் பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான், 59.98 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்படி, இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.

2016ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்குபற்றி வந்த ரிஹான், 2016, 2017 ஆகிய வருடங்களில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். எனினும், கடந்த வருடம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

>> விராட் கோஹ்லியின் இணையத்தளத்தை ஊடுருவிய பங்களாதேஷ் ரசிகர்கள்

இந்த நிலையில், உயர்தரம் கற்பதற்காக இவ்வருடம் முதல் கிண்ணியா மத்திய கல்லூரியில் இணைந்துகொண்டு போட்டிகளில் அவர் பங்குபற்றியிருந்தார்.

ஹார்ட்லி வீரர்களுக்கு ஏமாற்றம்

மைதான நிகழ்ச்சிகளான குண்டு எறிதல், பரிதிவட்டம் எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி  தேசிய மட்ட வெற்றிகளைப் பெற்று வருகின்ற பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். மிதுன்ராஜ், இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 54.07 மீற்றர் தூரத்தை எறிந்து நான்காவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்.

முன்னதாக கடந்த மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட மிதுன்ராஜ், 57.60 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.

இது இவ்வாறிருக்க, போட்டிகளின் முதல் நாளில் பரிதிவட்டம் எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிதுன்ராஜ், நாளை (04) குண்டு எறிதல் போட்டியில் பங்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், ஹார்ட்லி கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்குகொண்ட எம். நிந்துஜன், 11.53 மீற்றர் தூரத்தை எறிந்து தனது அதிசிறந்த தூரத்தைப் பதிவுசெய்தார். எனினும், இறுதி எட்டு பேருக்கு தெரிவாகும் வாய்ப்பை அவர் பெற்றுக்கொள்ளவில்லை.

சபியாவுக்கு 2ஆவது பதக்கம்

20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், 24.98 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<