இந்நாட்டின் விளையாட்டு துறைக்கு எதிர்கால நட்சத்திர வீரர்களை உருவாக்கும் நோக்கில் கல்வி அமைச்சின் பூரண மேற்பார்வையின் கீழ் வருடாந்தம் இடம்பெற்றுவரும் பாடசாலைகளின் ஒலிம்பிக் விழா என்றழைக்கப்படுகின்ற ”அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா நிகழ்வுகள் இம்முறை கொழும்பை மையப்படுத்தி எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
கிராமப்புறங்களில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறமைகளை தேசிய மட்டத்தில் மிளிரச் செய்யும் நோக்கில் 1984ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகம் செய்யப்பட்ட இப்பாடசாலைகள் விளையாட்டு விழா, இம்முறை 33ஆவது தடவையாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
43 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி முடிவுகள்
விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து…
இவ்வருட விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வாக தேசிய ரீதியான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளன.
பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சுமார் 39,700 பாடசாலை மாணவர்கள் மற்றும் 2,700 நடுவர்கள் கலந்துகொள்ளவுள்ள இம்முறை விளையாட்டு விழாவில், குழு நிலை மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் உள்ளிட்ட 28 வகையான விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளன. அதேபோன்று, முதற்தடவையாக கடற்கரை கரப்பந்தாட்டம், எழுவர் ரக்பி போட்டிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதன்படி, 12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் பாடசாலை மாணவர்கள் இம்முறை தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மெய்வல்லுனர் போட்டிகள் 17ஆம் திகதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. இதில் நாட்டில் உள்ள அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த சுமார் 6,300 பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே, 33ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் எதிர்வரும் 2ஆம் திகதி மாலை 2 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு – றோயல் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும், இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்திலும் நடபெறவுள்ளன.
புதிய ஒளியினைத் தேடி பாகிஸ்தானுடன் மோதும் இலங்கை அணி
எனினும் இலங்கையை விட மோசமான வரலாற்றினைக் கொண்ட கிரிக்கெட் அணிகள்…
அத்துடன், இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவின் ஒலிம்பிக் சுடரை, கொழும்பு புனித பேதுரு கல்லூரியின் நீச்சல் வீரரும், தெற்காசிய மற்றும் ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான அகலங்க பீரிஸ் மற்றும் ஆசிய போட்டிகளில் முப்பாய்ச்சளில் தங்கப் பதக்கம் வென்ற திருக்குடும்ப கன்னியர் மடத்தைச் சேர்ந்த வீராங்கனை ஹிசினி ப்ரபோதா ஆகியோரால் எடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(27) மாலை கொழும்பில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் முக்கிய அதிகாரிகள், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிற்கான அனுசரணையாளர்களான நெஸ்ட்லே நிறுவனம், ப்ரிமா நிறுவனம் மற்றும் இலங்கை வங்கி என்பவற்றின் முக்கிய அதிகாரிகள் உட்பட பல ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இம்முறை விளையாட்டு விழாவுக்கு 55 மில்லியன் ரூபா பணத்தை அமைச்சு ஒதுக்கியுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்கான அனைத்து செலவுகளையும் கல்வி அமைச்சு பொறுப்பேற்றுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
”கடந்த காலங்களில் இலங்கையின் விளையாட்டுத்துறைக்கு நட்சத்திர வீரர்களை பெற்றுக்கொடுத்த கௌரவம் கல்வி அமைச்சை மட்டுமே சாரும். அது மாத்திமின்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின்படி ஆரம்பிக்கப்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் மூலம் கிராமப்புறங்களில் இலை மறை காயாக உள்ள பாடசாலை மட்ட வீரர்களை இனங்கண்டு தேசிய மட்டத்திற்கும், அதன்பிறகு சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு செல்வதே எமது இலக்காகும்.
எனவே, இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற கோட்ட மட்ட மற்றும் வலய மட்ட போட்டிகளில் கலந்துகொண்ட 22 இலட்சம் மாணவர்களில் இருந்து இறுதிக் கட்டத்திற்கு 39,700 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களை கௌரவிக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்றார்.
இறுதி நிமிட கோலினால் ஸாஹிராவை வீழ்த்திய புனித பத்திரிசியார் கல்லூரி
ஸாஹிராவிற்கு கிடைத்த ப்ரீ கிக்கினை மொஹமட் ரஷீட் நேரடியாக கோலினை நோக்கி…
இம்முறை கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் எழுவர் ரக்பி போட்டிகளை இணைத்துக் கொண்டுள்ளதைப்போல, அடுத்த வருடம் நடைபெறவுள்ள விளையாட்டு விழாவில் கடினப் பந்து கிரிக்கெட்டையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விளையாட்டுத்துறையில் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்டு தொழில் எதுவும் இல்லாமல் இருக்கின்ற வீரர்களை பாடசாலை விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக 3,850 பேர் இப்பதவிக்காக நியமிக்கப்படவுள்ளதுடன், இதற்கான வர்த்தமான அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பல மெய்வல்லுனர் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க