அகில இலங்கை ரீதியிலான பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுத் தொடரின் நான்காவதும் இறுதியான கட்டம் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நேற்று (13ஆம் திகதி) ஆரம்பமானது.
இத்தொடர் இம்மாதம் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெறும். 9 மாகாணங்கள் மற்றும் 24 மாவட்டங்களிலிருந்தும் தெரிவாகிய சுமார் 5,000 வீர வீராங்கனைகள் இத்தொடரில் பங்குபற்றுகின்றனர்.
சிறப்பானதொரு ஆரம்ப வைபவத்துடன் இப்போட்டித்தொடர் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்தைத் தொடர்ந்து வீரர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும், விளையாட்டுத் தொடரின் பந்தமேற்றல் நிகழ்வும் நடந்தேறியது. ஆரம்ப வைபவத்தின் இறுதிக் கட்டமாக நடுவர்கள் மற்றும் வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தனது சிறப்புரையை ஆற்றினார்.
முதல் நாள் போட்டியின் புகைப்படங்கள்
போட்டியின் முதல் நாளிற்காக 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் ஈட்டி எறிதல், 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் கோலுன்றிப் பாய்தல், 15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் நீளம் பாய்தல், 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் தட்டெறிதல், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவின் உயரம் பாய்தல் மற்றும் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் குண்டெறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தாலும் போதிய வெளிச்சமின்மை காரணமாக பல போட்டிகள் பிற்போடப்பட்டன.
போட்டியின் முதல் பதக்கங்கள் 21 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவின் குண்டெறிதல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் மேல் மாகாண வீரர்களே கைப்பற்றியமை சிறப்பம்சமாகும். அதில் 14.42 மீட்டர்கள் வீசிய மதுஷங்க தங்கம் வெல்ல, 13.8 மீட்டர் மற்றும் 13.2 மீற்றர் வீசிய சமில் மற்றும் சமித் மதுஷங்கவிற்கு முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் கிடைக்கப்பெற்றன.
15 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் நீளம் பாய்தல் போட்டியில் கேட்வே கல்லூரியின் சந்தீபா ஹெண்டர்சன் தங்கம் வென்றார். மேலும் மத்திய கல்லூரியின் சந்தனி ரணசிங்க வெள்ளி பதக்கத்தையும், கொழும்பு மகளிர் கல்லூரியின் சியானா விக்ரமசிங்க வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ஏனைய அனைத்துப் போட்டிகளும் அடுத்த நாளுக்கு மாற்றப்பட்டன. இரண்டாம் நாள் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றன.