கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பிரிவும், மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்த அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளின் கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று புதிய வரலாறு படைத்தது.
அதேநேரம் ஆண்கள் பிரிவில் கொட்டாவ தர்மபால கல்லூரியும், பெண்கள் பிரிவில் ஹந்துங்கமுவ ஆரம்ப பாடசாலையும் சம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரம் 3, 4 மற்றும் தரம் 5 ஆகிய வகுப்புகளில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கிடையில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இவ்வருடத்துக்கான அகில இலங்கை பாடசாலைகள் சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகள் கண்டி போகம்பரை மைதானத்தில் கடந்த 03 மற்றும் 04ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியிலிருந்து தெரிவாகிய தரம் மூன்றைச் சேர்ந்த 1920 மாணவர்களும், தரம் நான்கைச் சேர்ந்த 2016 மாணவர்களும் கலந்துகொண்டனர்.
பாடசாலைகள் மட்ட சிறுவர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் நாளை ஆரம்பம்
இம்முறை போட்டித் தொடரில் மலையக பகுதிகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் பிரகாசித்திருந்ததுடன், சம்பியன் பட்டங்களையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, தரம் 3 மற்றும் தரம் 4 மாணவர்களுக்கான கலப்பு பிரிவில் நுவரெலியா அல்பியன் தமிழ் வித்தியாலயம் முறையே 226 மற்றும் 340 புள்ளிகளைப் பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது. இதில் ஹட்டன் கினிகத்தேன கனிஷ்ட வித்தியாலயம் தரம் 4 ஆண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தையும், தரம் 3 பெண்கள் பிரிவில் 2ஆவது இடத்தையும் வென்றது.
இதேநேரம், ஹட்டன் – அம்பகமுவ முன்னோடி வித்தியாலயம் தரம் 4 இற்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.
இதில் தரம் 3 ஆண்கள் பிரிவில் 281 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட கொட்டாவ தர்மபால கல்லூரியும், பெண்கள் பிரிவில் 258 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட ஹந்துங்கமுவ ஆரம்ப பாடசாலையும் முதலிடங்களைப் பெற்றுக்கொண்டன.
இதன்படி. கடந்த இரண்டு தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற இம்முறைப் போட்டித் தொடரில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதா கிருஷ்ணன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லகீ ஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கிவைத்தனர்.
இதேவேளை, அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட முன்னோட்டப் போட்டிகளில் தகுதிபெற்ற தரம் 5 மாணவர்களுக்கான இறுதிக் கட்டப் போட்டிகள் எதிர்வரும் 25ஆம் திகதி நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.