கொல்கத்தா அணியில் உள்ள அமெரிக்க வீரருக்கு உபாதை

365
Ali Khan
Image Courtesy - espncricinfo

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமெரிக்க கிரிக்கெட் வீரர் அலி கான் உபாதைக்கு முகங்கொடுத்துள்ள போதும், குழாத்துடன் தொடர்ந்து இணைந்திருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

>> ஹெட்ரிக் தோல்வியுடன் அபராதத்தையும் பெற்ற ஸ்மித்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைந்த பின்னர், சிறு உபாதைக்கு முகங்கொடுத்திருந்த அலி கான், அந்த அணியின் எந்த போட்டிகளிலும் இதுவரை விளையாடவில்லை. ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சிகளில் தொடர்ந்தும் இவர் ஈடுபட்டுவந்தார். எனினும், துரதிஷ்டவசமாக உபாதைக்கு முகங்கொடுத்த இவர், தற்போது சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இந்தநிலையில், அலி கானின் உபாதை குணமடையாத நிலையில், அவர் இந்த பருவகாலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என ஐ.பி.எல். நிர்வகாம் நேற்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனாலும், உபாதையை உறுதிப்படுத்தியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அலி கான் தொடர்ந்தும் அணியுடன் இணைந்திருப்பார் என சுட்டிக்காட்டியுள்ளது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நொட்டிங்கம்ஷையர் அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஹெரி கார்னி தோற்பட்டை உபாதை காரணமாக ஐ.பி.எல். தொடரிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக அலி கான் இணைக்கப்பட்டார்.

>> Video – தடுமாற்றம் காணும் இலங்கை – பங்களாதேஷ் தொடர் |Sports RoundUp – Epi 134

அத்துடன், ஐ.பி.எல். தொடரில் இணைக்கப்பட்ட முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையையும் அலி கான் பெற்றுக்கொண்டார். அலி கான் 2018ம் ஆண்டு க்ளோபல் T20 லீக் தொடரில் சிறப்பாக பிரகாசித்திருந்த நிலையில், அதே ஆண்டு டுவைன் ப்ராவோ தலைமையிலான ட்ரைன்பகோ நைட் ரைடர்ஸ் அணியில் கரீபியன் ப்ரீமியர் லீக்கில் விளையாடினார். 

கரீபியன் ப்ரீமியர் லீக்கில் 2018ம் ஆண்டு விளையாடியிருந்த இவர், 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அத்துடன், குறித்த தொடரில் விளையாடிய அனைத்து வேகப் பந்துவீச்சாளர்களில் அதிகூடிய விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரராகவும் இருந்தார்.

இதேவேளை, அலி கான்  இந்த ஆண்டு CPL தொடரில் விளையாடி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்ததுடன், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் மற்றும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போன்றவற்றில் விளையாடியுள்ளார். அதேநேரம், ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள இவர், 36 T20 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<