இந்திய அணியுடன் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெஸ்டயார் குக், புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று (11) நிறைவுக்கு வந்திருந்தது. குறிப்பிட்ட இந்த இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி தொடரை 4-1 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தொடர் நிறைவுக்குவர புதிய டெஸ்ட் தரவரிசையை ஐசிசி இன்று (12) வெளியிட்டது.
சர்வதேச அரங்கிலிருந்து வெற்றியுடன் விடைபெற்றார் அலெஸ்டயர் குக்
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதி..
இதில், இறுதி டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 71 மற்றும் 147 ஓட்டங்களை குவித்த அலெஸ்டயார் குக் தரவரிசையில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளார். இறுதிப் போட்டியில் அணியின் வெற்றிக்கு காரணமாகியிருந்த இவர் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார். இவ்வாறு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 21வது இடத்திலிருந்து 11 இடங்கள் முன்னேறி, 10வது இடத்தை பிடித்துக்கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் போது டெஸ்ட் தரவரிசையில் 10வது இடத்தை பெற்றிருந்த அலெஸ்டயார் குக், இங்கிலாந்து அணி சார்பில் தரவரிசையில் அதிகூடிய பெறுபேற்றுடன் விடைபெற்ற மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் வெல்லி ஹெம்மோண்ட் 5வது இடத்துடனும், ஜெப் போய்கோட் எட்டாவது இடத்துடனும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்தனர். தற்போது இவர்களுக்கு அடுத்த இடத்தை குக் பெற்றுள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் இறுதி இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் தடுமாறியிருந்த இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இறுதி இன்னிங்ஸில் டக்-அவுட் ஆகி வெளியேறியிருந்த இவர், ஸ்டீவ் ஸ்மித்துடன் (929) ஒரு புள்ளி முன்னிலையில் முதலிடத்தை பிடித்தார். இவருடன் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், சதத்துடன் (125) தொடரை நிறைவுசெய்து, தரவரிசையில் 4வது இடத்தையும், ஜோஸ் பட்லர் 9 இடங்கள் முன்னேறி 23வது இடத்தையும், மொஹின் அலி 5 இடங்கள் முன்னேறி 43வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆசிய கிண்ணப் போட்டிகளின் பிறகு ஓய்வு பெற மாட்டேன் என்கிறார் மாலிங்க
தனக்கு வயதானாலும் உடற்தகுதி குறித்து மிகுந்த…
தொடரின் இறுதி இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டத்தில் தங்களது பலத்தை நிரூபித்த இந்திய அணியின் லோகேஸ் ராஹுல் (149 ஓட்டங்கள்) 19 இடங்கள் முன்னேறி 19வது இடத்திலும், அறிமுக சதத்தை விளாசிய ரிஷாப் பாண்ட் (115 ஓட்டங்கள்) 63 இடங்கள் முன்னேற்றத்துடன் 111வது இடத்திலும் உள்ளனர். அத்துடன் இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை வலுப்படுத்திய ரவீந்திர ஜடேஜா (86 ஓட்டங்கள்) துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் 58வது இடத்தையும் (12 இடங்கள் முன்னேற்றம்), சகலதுறை வீரர்கள் வரிசையில் ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்களை பொருத்தவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற கிலேன் மெக்ராத்தின் சாதனையை முறியடித்த ஜேம்ஸ் அண்டர்சன் (564 விக்கெட்டுகள்) 899 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இவருடன் பென் ஸ்டோக்ஸ் 27வது இடத்துக்கும், அடில் ரஷீட் 44வது இடத்துக்கும், இளம் வீரர் டொம் கரன் 51வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
டெஸ்ட் தொடரை 4-1 என கைப்பற்றிய இங்கிலாந்து அணி சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், இந்திய அணி 8 புள்ளிகளை இழந்து தொடர்ந்தும் முதலிடத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டுள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<