அகில தனஞ்சயவுக்கு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை

4075

இலங்கை அணியின் இளம் சுழல் வீரரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணி முறையற்ற விதத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டதனை அடுத்து அவர் சர்வதேசப் கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) தடை விதித்துள்ளது.

அகில தனஞ்சயவின் பந்துவீச்சுப்பாணியினை பரிசோதித்த போது அவர் அனுமதிக்கப்பட்ட 15 பாகை கோண அளவினை விட நீண்ட கோணத்தில் பந்துவீசுவது கண்டறியப்பட்டிருந்தது. இதனாலேயே, அகில தனஞ்சய முறையற்ற விதத்தில் பந்துவீசுவது உறுதியாகி அவர் சர்வதேசப் போட்டிகளில் பந்துவீசும் வாய்ப்பினையும் இழந்திருக்கின்றார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் சரம் 11.1 ஆனது இந்த விடயத்தினை கூறுகின்றது.

பந்துவீச்சு பரிசோதனைக்காக பிரிஸ்பேன் செல்லும் அகில தனஞ்சய

“வீரர் ஒருவரின் பந்துவீச்சுப்பாணி முறையற்றதாக இருக்கும் பட்சத்தில் குறித்த வீரரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச எந்த தேசிய அணியும் பயன்படுத்தக்கூடாது. எனினும், தேசிய கிரிக்கெட் சபைகள்/அணிகள் தங்களது சொந்த விருப்பில் குறித்த வீரரை உள்ளூர் தொடர்களில் பயன்படுத்த முடியும்.“

இதன் அடிப்படையில் அகில தனஞ்சயவுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாத போதிலும் இலங்கை கிரிக்கெட் சபை தங்களது விதிமுறைகளுக்கு அமைவாக நடாத்தும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கு இயலுமாக இருக்கும்.

அகில தனஞ்சய இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் காலியில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் முறையற்ற விதத்தில் பந்துவீசுவதாக முதல் தடவையாக சந்தேகிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தனது பந்துவீச்சுப்பாணி குறித்து உறுதியான முடிவு ஒன்றினைப் பெற்றுக்கொள்ள அகில தனஞ்சய அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு கடந்த மாதம் 23 ஆம் திகதி பயணமாகியிருந்தார். இதன் முடிவுகளின் மூலமே அகிலவின் பந்துவீச்சுப்பாணியில் தவறு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அகில தனஞ்சயவுக்கு இப்போது தடைவிதிக்கப்பட்ட போதிலும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக அவர் தனது பந்துவீச்சுப் பாணியினை மாற்றும் பட்சத்தில் அவரால் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<