சீனாவின் ஹாங்சுவில் நடைபெற்றுவரும் 19ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் புதிய இலங்கை சாதனை படைத்துள்ளார்.
திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் (Backstroke) 2ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட அவர், 26.01 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து தனது சொந்த இலங்கை சாதனையை முறியடித்து அசத்தினார்.
>> ஆசிய விளையாட்டு விழாவின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மற்றும் தேசிய கனிஷ்ட நீச்சல் போட்டித் தொடரில் ஆண்களுக்கான 50 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியை 26.12 செக்கன்களில் நிறைவு செய்த அகலங்க பீரிஸ் இலங்கை சாதனையை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம், கடந்த 2 ஆண்டுகளில் ஆண்களுக்கான 50 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் இலங்கை சாதனையை 4 தடவைகள் அவர் முறியடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
எவ்வாறாயினும், நடைபெற்ற குறித்த போட்டியில் 4ஆவது இடத்தைப் பிடித்த அகலங்க, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.
இதனிடையே, இம்முறை ஆசிய விளையாட்டு விழா இலங்கை நீச்சல் அணியில் அகலங்க பீரிஸ், மெத்யூ அபேசிங்க மற்றும் கங்கா செனவிரத்ன ஆகிய 3 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<