தினேஷ் வீரரத்னவின் இறுதி நேர ட்ரையுடன், டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் 2ஆம் சுற்றில் பொலிஸ் அணியை 15-13 என்ற புள்ளிகள் அடிப்படையில் விமானப்படை அணி வென்றது.
ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இரண்டு அணிகளும் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் சிறப்பாக விளையாடின. போட்டியின் முதற் பாதியில் பொலிஸ் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், விமானப்படை அணியானது இறுதி நேர அசத்தலின் மூலம் வெற்றிபெற்றது.
22ஆவது நிமிடத்தில் விமானப்படை அணியின் ப்ளை ஹாப் நிலை வீரர் நுவன் பெரேரா மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, விமானப்படை அணியானது 14 வீரர்களுடன் விளையாடியது. இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட பொலிஸ் அணியானது முதலாவது புள்ளியை பெற்றுக்கொண்டது. பெனால்டி வாய்ப்பின் மூலம் வெற்றிகரமாக கம்பங்களின் நடுவே உதைத்து ராஜித சன்சோனி பொலிஸ் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் அணி 03 – விமானப்படை அணி 00)
பொலிஸ் அணி மேலும் ஒரு ட்ரை வைத்து 8 புள்ளிகளால் முன்னிலை கொண்டது. விமானப்படை அணி செய்த தவறினால், விமானப்படையின் 10 மீட்டர் எல்லைக்குள் லைன் அவுட் பெற்றுக்கொண்ட பொலிஸ் அணியானது மொஹமட் அப்சல் மூலமாக தமது முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. (பொலிஸ் அணி 08 – விமானப்படை அணி 00)
விமானப்படை அணியானது முதற்பாதியின் இறுதி கட்டத்தில் புள்ளிகளை பெற முயற்சித்த பொழுதும் அவை சிறு தவறுகளால் தவறவிடப்பட்டது. அவ்வாறே பொலிஸ் அணிக்கும் மேலதிகமாக 3 புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பிருந்த பொழுதும் ராஜித சன்சோனி உதையை தவறவிட்டதால் அவ் வாய்ப்பை தவறவிட்டது.
முதற் பாதி: பொலிஸ் விளையாட்டு கழகம் 08 – விமானப்படை விளையாட்டு கழகம் 00
இரண்டாம் பாதியானது முதற் பாதிக்கு நேர் எதிராக அமைந்தது. விமானப்படை அணியானது சிறப்பாக விளையாடிய பொழுதும், மீண்டும் ஒரு முறை பொலிஸ் அணியே புள்ளிகளை பெற்றது. விமானப்படைக்கு அழுத்தம் கொடுத்து ரொமேஷ் ஆச்சரிகே மூலமாக ட்ரை வைத்தது. எனினும் இம்முறையும் உதையை தவறவிட்டது. (பொலிஸ் அணி 13 – விமானப்படை அணி 00)
42 நிமிடங்கள் முடிந்த நிலையில் பொலிஸ் அணியானது 13 புள்ளிகளால் முன்னிலை பெற்றுகாணப்பட்டது. எனினும் போட்டியை விட்டுக்கொடுக்காத விமானப்படை அணியானது கடினமாக போராடியது. பொலிஸ் அணி வீரர்கள் ஓப் சைட் காணப்பட்டதற்காக விமானப்படைக்கு பெனால்டி வழங்கப்பட்டது. உடனடியாக செயற்பட்ட விமானப்படை அணியானது ஒரு சில கட்டங்களின் பின்னர் சுபுன் மதுசங்க மூலமாக முதல் ட்ரையை பெற்றுக்கொண்டது. நுவன் பெரேரா உதையை வெற்றிகரமாக உதைத்தார். (பொலிஸ் அணி 13 – விமானப்படை அணி 07)
விமானப்படை அணியானது 7 நிமிடங்களின் பின்னர் மீண்டும் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 40 மீட்டர் தொலைவில் இருந்து வெற்றிகரமாக பெனால்டி உதையை உதைத்து நுவன் விமானப்படைக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (பொலிஸ் அணி 13 – விமானப்படை அணி 10)
விமானப்படை அணியானது தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பொழுதிலும் பொலிஸ் அணி அதை சாமர்த்தியமாக தடுத்தது. எனினும் 77ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியானது தவறொன்றை செய்து விமானப்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பொன்றை வழங்கியது. ஆனாலும் நுவன் இம்முறை உதையை தவறவிட்டார்.
தொடர்ந்து போராடிய விமானப்படை அணியானது இறுதி நிமிடத்தில் ட்ரை வைத்து வெற்றியை தமதாக்கியது. பொலிஸ் அணியிடம் காணப்பட்ட பந்தை தமது பக்கம் திருப்பி, அற்புதமாக பந்தை பரிமாறி தினேஷ் வீரரத்ன மூலமாக வெற்றி ட்ரையை விமானப்படை அணி வைத்தது.
முழு நேரம்: பொலிஸ் விளையாட்டு கழகம் 13 – விமானப்படை விளையாட்டு கழகம் 15
ThePapare.com போட்டியின் சிறந்த வீரர் – ரனீஷ செனவிரத்ன (பொலிஸ் விளையாட்டு கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
விமானப்படை விளையாட்டு கழகம் – சுபுன் மதுசங்க 1T, நுவன் பெரேரா 1P 1C, தினேஷ் வீரரத்ன 1T
பொலிஸ் விளையாட்டு கழகம் – மொஹமட் அப்சல் 1T, ரொமேஷ் ஆச்சரிகே 1T, ராஜித சன்சோனி 1C