டயலொக் ரக்பி லீக் 7ஆம் வார முதல் போட்டியில், 2ஆம் பாதியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் 22-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் விமானப்படை அணியை கடற்படை அணி வென்றது.
இதுவரையில் ஹெவலொக் அணியிடம் தோல்வியுற்ற நிலையில் கடற்படை அணியானது இப்போட்டிக்கு முகம் கொடுத்தது. பலம் மிக்க கடற்படை அணி இலகுவாக போட்டியை வெல்லும் என எதிர்பார்த்த பொழுதும், விமானப்படை அணியானது கடற்படை அணிக்கு முதல் பாதியில் கடும் சவால் கொடுத்தது. விமானப்படை அணியானது இம்முறை லீக்கில் ஏனைய அணிகளுக்கும் கடும் சவால் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதற் பாதியில் கடற்படை அணியே முதலில் புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. கடற்படை அணியின் முன் வரிசை வீரர்கள் விமானப்படை அணியின் தடையை தகர்த்தி முன் நகர, காஞ்சன பெரேரா கடற்படை அணி சார்பாக ட்ரை வைத்தார். எனினும் திலின வீரசிங்க தனது முதல் வாய்ப்பில் கம்பத்தினூடு உதைக்கத் தவறினார். (கடற்படை 05 – விமானப்படை 00)
சில நிமிடங்களுக்கு பின்னர் விமானப்படை அணியானது தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது. விமானப்படை வீரர் சரித் செனவிரத்ன 23 மீட்டர் தூரத்தில் இருந்து பெனால்டி உதையை வெற்றிகரமாக உதைத்து விமானப்படை அணிக்கு புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (கடற்படை 05 – விமானப்படை 03)
அதிலிருந்து தொடர்ந்து விமானப்படை அணிக்கு புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் மோசமான விளையாட்டு மற்றும் சிறிய தவறுகளினால் அவ்வாய்ப்புகளை தவறவிட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் விமானப்படை அணி ட்ரை கோட்டிற்கு அருகே வந்த பொழுதும், சரித் செனவிரத்ன பந்தை நழுவவிட்டதால் ட்ரை வைக்கும் வாய்ப்பை பறிகொடுத்தது.
முதற் பாதி : கடற்படை அணி 05 – விமானப்படை அணி 03
இரண்டாம் பாதியில் களம் இறங்கிய கடற்படை அணியானது ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் 10 மீட்டர் தூரத்தில் லைன் அவுட் பெற்றுக்கொண்ட கடற்படை அணியானது, தமது முன் வரிசை வீரர்களின் பலத்தை உபயோகித்து ட்ரை கோட்டை கடந்தது. துலாஞ்சன விஜேசிங்க இம்முறை ட்ரை வைக்க திலின வீரசிங்க வெற்றிகரமாக உதைந்தார். (கடற்படை 12 – விமானப்படை 03)
விமானப்படை அணியின் சரித் செனவிரத்ன தமக்கு கிடைத்த 2ஆவது பெனால்டி வாய்ப்பில் உதையை கம்பத்தின் நடுவே உதைக்க தவறினார். எனினும் கடற்படை அணியின் திலின வீரசிங்க பெனால்டி வாய்ப்பை வெற்றிகரமாக உதைத்து கடற்படை அணிக்கு மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார். (கடற்படை 15 – விமானப்படை 03)
72ஆவது நிமிடத்தில் மீண்டும் கடற்படை அணியானது ட்ரை வைத்தது. இம்முறை சத்யா ரணதுங்க 3 விமானப்படை வீரர்களைக் கடந்து சென்று ட்ரை வைத்து அசத்தினார். திலின இவ்உதையையும் தவறவிடவில்லை. (கடற்படை 22 – விமானப்படை 03)
இரண்டாம் பாதியில் எவ்வளவு முயன்றும் விமானப்படை அணியினால் அதிக புள்ளிகளை குவிக்க முடியவில்லை. இறுதி நிமிடத்தில் விமானப்படை அணியின் பராக்கிரம ரத்நாயக்க தமது அணிக்கு ஆறுதல் ட்ரை ஒன்றை வைத்தார். (கடற்படை 22 – விமானப்படை 08)
கடற்படை அணியானது வெற்றிபெற்ற பொழுதும் இப்போட்டியில் போனஸ் புள்ளிகளை பெற்றுக்கொள்ளத் தவறியது. இது அவர்களை தரவரிசையில் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
விமானப்படை அணியானது நேர்த்தியான விளையாட்டை விளையாடிய பொழுதும் ஒரு சில தவறுகளினால் வெற்றிபெறும் வாய்ப்பை தவறவிட்டது. அவர்களது ஸ்க்ரம் ஹாப் நிலை வீரர் அசோக் விஜேகுமார் போட்டியில் விளையாடாமை அவர்களுக்கு பெரும் பலவீனமாய் அமைந்தது.
முழு நேரம் : கடற்படை 22 – விமானப்படை 08
புள்ளிகள் பெற்றோர்
கடற்படை அணி
ட்ரை – துலாஞ்சன விஜேசிங்க, சத்யா ரணதுங்க, காஞ்சன பெரேரா
பெனால்டி – திலின வீரசிங்க
கொன்வெர்சன் – திலின வீரசிங்க (2)
விமானப்படை அணி
ட்ரை – பராக்கிரம ரத்நாயக்க
பெனால்டி – சரித் செனவிரத்ன