இலங்கை விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற டயலொக் சுபர் லீக் 2016இன் இரண்டாவது போட்டியில்  இலங்கை விமானப்படை அணியுடனான போட்டியை ஹெவலொக் கழகம் 29-5 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியினை ஹெவலொக் அணியின் துலாஜ் பெரேரா தொடங்கி வைத்தார். ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஹெவலொக் அணிக்கு வீரர்களிடம் காணப்பட்ட சிறிய தவறுகளினால் போட்டியில் முன்செல்ல முடியாமற் போனது. எனினும் 13ம் இலக்க வெளி நடுக்கள வீரர் நிஷான் பெரேரா சிறப்பாக செயற்பட்டு ‘ட்ரை’யினை வைத்தார். (விமானப்படை 00-07 ஹெவலொக்)

விமானப்படை அணி சளைக்காமல் விளையாடி அவர்கள் சார்பில் ட்ரையினை வைத்து புள்ளி வித்தியாசத்தை மட்டுப்படுத்தினர். 10 மீற்றர் தூரத்திலிருந்து விமானப்படை அணியின் திலின பண்டார அணிக்கான ட்ரையினை பெற்றுக்கொடுத்தார். எனினும் கன்வர்ஷன் உதை தவறவிடப்பட்டது. (விமானப்படை 05-07 ஹெவலொக்)

அடுத்து வந்த சில நிமிடங்களில் விமானப்படை அணி சிறப்பாக செயற்பட்டாலும் அவர்களால் புள்ளிகளில் மாற்றம் எதையும் கொண்டுவர முடியவில்லை. போக்கிற்கு மாறாக ஹெவலொக் அணியின் ஷாரோ பெர்னாண்டோ ட்ரை வைத்து ஹெவலொக் அணியை மேலும் முன்னிலை பெறச் செய்தார். கம்பங்களுக்கிடையிலான கன்வர்ஷன் உதையை துலாஜ் இலகுவாக அடித்தார். (விமானப்படை 05-14 ஹெவலொக்)

மேலும் துலாஜ் கிடைத்த பெனால்ட்டி உதையை அடித்து முதல் பாதி முடிய முன் மேலும் 3 புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

முதற் பாதி: விமானப்படை 05-17 ஹெவலொக்

போட்டியின் இரண்டாவது பாதியை விமானப்படையின் சரித் செனவிரத்ன  ஆரம்பித்து வைத்தார். இரண்டு அணிகளும் தமது எல்லைக்கு வந்த பந்தினை உதைத்து அடுத்த எல்லைக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டின.

ஹெவலொக் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை ஹிரந்த பெரேரா ”உடனடி விளையாட்டு” (quick tap) மூலம் ட்ரை ஆக்கினார். அவரது லாவகமான  விளையாட்டிற்கு முன்னால் விமானப்படை வீரர்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. (விமானப்படை 05-22 ஹெவலொக்)

போட்டியின் இரண்டாவது பாதியின் நடுப்பகுதியில் ஹெவலொக் அணியின் ஷெஹான் டயஸ் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டு 10 நிமிடங்களுக்கு வெளியேற்றப்பட்டார். எனினும் அதனால் கிடைத்த சந்தர்ப்பத்தை விமானப்படை வீரர்கள் சரிவரப் பயன்படுத்தவில்லை. ஹிரந்த பெரேரா தனது இரண்டாவது ட்ரையினை இதன்போது பெற்று ஹெவலொக் அணியை மேலும் வலுப்படுத்தினார். துலாஜ் பெரேரா கன்வர்ஷன் உதையை சரியாக அடித்தார். (விமானப்படை 05-29 ஹெவலொக்)

ஆட்டத்தின் இறுதி பத்து நிமிடங்களில் இரு அணிகளாலும் புள்ளிகள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

முழு நேரம்: விமானப்படை 05-29 ஹெவலொக்

போட்டி நடுவர் – பிரியந்த குணரத்ன

Thepapare.com சிறப்பாட்டக்காரர்: துஷ்மந்த பிரியதர்ஷன (ஹெவலொக் கழகம்)

புள்ளி விபரம்

விமானப்படை:

ட்ரை- திலின பண்டார

ஹெவலொக்:

ட்ரை- நிஷான் பெரேரா, ஷாரோ பெர்னான்டோ, ஹிரந்த பெரேரா (2)

கன்வர்ஷன்- துலாஜ் பெரேரா (3)

பெனால்டி- துலாஜ் பெரேரா