டயலொக் ரக்பி லீக் 13ஆவது வாரத்தில் மற்றுமொரு போட்டியிலும் தோல்வியுற்று CH & FC அணியானது தொடர் தோல்விகளை சந்தித்தது. ரத்மலான விமானப்படை மைதானத்தில் நடைபெற்ற, விமானப்படை விளையாட்டு கழகத்துடனான போட்டியில் 53-17 என்ற புள்ளிகள் அடிப்படையில் CH & FC அணி தோல்வியை சந்தித்தது.
போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சரி சமமாகவே விளையாடியது. எனினும் முதற்பாதி நிறைவடையும் பொழுது விமானப்படை அணியானது முன்னிலையில் காணப்பட்டது. போட்டியின் முதலாவது புள்ளியை விமானப்படை அணியே பெற்றுக்கொண்டது. CH & FC அணி செய்த தவறிற்கு பெனால்டியை வென்ற விமானப்படை அணியானது, லைன் அவுட் மூலம் பந்தை பெற்று, சில பந்து பரிமாறல்களின் பின்னர் சந்தருவன் அதிகாரி மூலம் ட்ரை வைத்தது. கயந்த இத்தமல்கொட வெற்றிகரமாக உதைத்து மேலதிகமாக 2 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (CH & FC 00 – விமானப்படை 07)
இதற்கு CH & FC அணியானது அற்புதமான ட்ரையின் மூலம் பதிலடி கொடுத்தது. கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலம் கம்பத்தினை நோக்கி உதைத்தாலும், விஷ்வ தெனித் வெற்றிகரமாக உதைக்க தவறினார். அதிஷ்டவசமாக விமானப்படை அணி வீரர் ட்ரை கோட்டின் உள்ளே பந்தை தவறவிட, CH & FC அணிக்கு 5 மீட்டர் ஸ்க்ரம் வாய்ப்பு கிடைத்தது. சில கட்டங்களின் பின்னனர் திமல் ஜயசிங்க CH & FC அணி சார்பாக ட்ரை வைக்க விஷ்வ வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 07 – விமானப்படை 07)
அதுவரையில் CH & FC அணியானது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அதன் பிறகு தனது வழமையான மோசமான விளையாட்டை வெளிப்படுத்த ஆரம்பித்தது. கிகான் ஹேவகே மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட, விமானப்படை அணியானது பபசரா ஹேவகே மூலமாக ட்ரை வைத்தது. பிரமோத் வீரசிங்க ட்ரை கோடு வரை ஓடிச் சென்று ஹேவகேவிற்கு பந்தை ஓப் லோர்ட் செய்தார். (CH & FC 07 – விமானப்படை 12)
விமானப்படை அணியானது தொடர்ந்து இன்னொரு ட்ரையும் வைத்து அசத்தியது. CH & FC அணியின் லைன் அவுட்டில் இருந்து பந்தை பெற்ற விமானப்படை அணியானது கௌஷால் மனுப்பிரிய மூலமாக ட்ரை வைத்தது. கயந்த இம்முறை கொன்வெர்சன் உதையை வெற்றிகரமாக உதைத்தார். (CH & FC 07 – விமானப்படை 19)
CH & FC அணியானது மீண்டும் ஒரு முறை அற்புதமான ட்ரையின் மூலம் நம்பிக்கை கொடுத்தது. 40 மீட்டர் தூரத்தில் இருந்து கடினமாக உதைத்த CH & FC அணியானது திமல் மூலமாக ட்ரை வைத்தது. விஷ்வ கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். எனினும் முதற்பாதி நிறைவடையும் முன்னர் பபசரா ஹேவகே மூலம் மற்றுமொரு ட்ரை வைத்து, விமானப்படை அணியானது வலுவான நிலையில் முதற்பாதியை நிறைவு செய்தது.
முதல் பாதி: CH & FC விளையாட்டு கழகம் 12 – விமானப்படை விளையாட்டு கழகம் 26
இரண்டாம் பாதி ஆரம்பித்த உடனே விமானப்படை அணியானது ட்ரை வைத்தது. CH & FC அணியானது தமது 2 மீட்டர் எல்லையினுள் பந்தை நழுவ விட்டது. வாய்ப்பை பயன்படுத்தி விமானப்படை அணியானது சாரக வெரெல்ல மூலமாக ட்ரை வைத்தது. இத்தமல்கொட வெற்றிகரமாக கம்பத்தினுள் உதைத்தார். (CH & FC 12 – விமானப்படை 33)
சிறிது நேரம் கழித்து விமானப்படை அணியின் சந்தருவன் அதிகாரி தனது 2ஆவது ட்ரையை வைத்தார். லகிருவிடம் இருந்து பந்தை பெற்றுக்கொண்ட அதிகாரி ட்ரை வாய்த்த பொழுதும் கயந்த கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (CH & FC 12 – விமானப்படை 38)
CH & FC அணியானது, மற்றுமொரு சிறப்பான ட்ரை வைத்தது. இம்முறை ரோகித ராஜபக்ஷவின் உதவியுடன், ரெயான் பெர்னாண்டோ ட்ரை வைத்தார். (CH & FC 17 – விமானப்படை 38)
இறுதி 25 நிமிடங்களும் விமானப்படை அணிக்கு சாதகமாகவே அமைந்தது. 62ஆவது நிமிடத்தில் கௌஷால் மனுப்ரிய தனது இரண்டாவது ட்ரையை விமானப்படை அணி சார்பாக வைத்தார். மேலும் 69ஆவது நிமிடத்தில் உடனடியாக பெனால்டியை பெற்றுக்கொண்ட சாரக வெரெல்ல ட்ரை வைத்தார். விமானப்படை அணியின் 9ஆவது ட்ரையை தினேஷ் வீரரத்ன 78ஆவது நிமிடத்தில் வைத்தார். எனினும் கொன்வெர்சன் உதை வெற்றிகரமாக அமையவில்லை.
முழு நேரம்: CH & FC விளையாட்டு கழகம் 17 – விமானப்படை விளையாட்டு கழகம் 53
CH & FC அணியானது மீண்டுமொருமுறை தமது திறமையை வெளிக்காட்ட தவறியது. எனினும் பல தோல்விகளின் பின்னரும், விட்டுக்கொடுக்காமல் போராடும் CH & FC அணியின் முயற்சி பாராட்டத்தக்கது. மறுமுனையில் சென்ற வாரம் கண்டி கழகத்திடம் தோல்வியுற்றதன் பின்னர் விமானப்படை அணியானது மீண்டும் எழுந்தது. இன்னும் ஒரு போட்டி எஞ்சி இருக்கும் நிலையில், தரவிசையில் விமானப்படை அணியானது 4ஆவது இடத்தில் காணப்படுகின்றது.
ThePapare போட்டியின் சிறந்த வீரர் – சாரக வெரேல்ல (விமானப்படை விளையாட்டு கழகம்)
புள்ளிகள் பெற்றோர்
CH & FC விளையாட்டு கழகம் – திமல் ஜெயசிங்க 2T, ரெயான் பெர்னாண்டோ 1T, விஸ்வ தினெத் 1C
விமானப்படை விளையாட்டு கழகம் – சந்தருவன் அதிகாரி 2T, சாரக வெரல்ல 2T, கௌஷால் மனுப்பிரிய 2T, பபசர ஹேவகே 2T, தினேஷ் வீரரத்ன 1T, கயந்த இத்தமல்கொட 4C