இலங்கை கால்பந்து அணியின் இரண்டாவது கட்ட பயிற்சிகளிலிருந்து, கொழும்பு கால்பந்து கழக அணியின் மத்திய கள வீரர் அஹமட் சஸ்னி விவகுவதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
இலங்கை கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் அமிர் அலாஜிக் தெரிவு செய்த 22 பேர் அடங்கிய இலங்கை கால்பந்து குழாம், இந்த ஆண்டு ஆரம்பத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது.
>> இலங்கையில் ஆரம்பமாகவுள்ள சுப்பர் லீக் கால்பந்து தொடர்
ஜனவரி 3ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதிவரை முதற்கட்ட பயிற்சிகள் நடைபெற்றன. இந்நிலையில், இரண்டாவது கட்ட பயிற்சிகள் ஜனவரி 26ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையிலேயே அஹமட் சஸ்னி குறித்த குழாத்தில் இருந்து விலகியுள்ளார்.
அஹமட் சஸ்னி தனிப்பட்ட காரணங்களுக்காக பயிற்சிகளிலிருந்து விலகுகின்றார் என அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அமிர் அலாஜிக் தெரிவித்துள்ளார். இந்த விடயம் இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஸ்னி குழாத்திலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்தின் ரிஸ்கான் பைசர் குழாத்தில் இணைக்கப்படவுள்ளார். இவருக்கு PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர், அவர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த பயிற்சிக் குழாமின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் (Waiting List) ரிஸ்கான் பைசர் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இற்கு முன்னர், குறித்த பயிற்சிக் குழாமில் இருந்து உபாதை காரணமாக ரஹ்மான் வெளியேற, அவரது இடத்திற்கு மொஹமட் முஸ்தாக் இணைக்கப்பட்டார். பின்னர், சுந்தரராஜ் நிரேஷ் வெளியேறியதன் பின்னர் இளம் வீரர் அசேல மதுஷான் குழாத்தில் இணைக்கப்பட்டார்.
கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை கால்பந்து அணி உலகக் கிண்ண மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிகாண் தொடரில் விளையாடவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. எனவே, பயிற்சிகளை மீள ஆரம்பிக்கும் இலங்கை கால்பந்து அணி, இந்த தகுதிகாண் தொடரினை கருத்திற் கொண்டு செயற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பயிற்சிகளுக்காக தெரிவு செய்யப்பட்டள்ள வீரர்கள் விபரம்
சுஜான் பெரேரா, ப்ரபாத் ருவன் அறுனசிறி, ஆர்.பி. தனுஷ்க, நுவான் கிம்ஹான, ஷலன சமீர, அப்துல் பாஸித், மதுஷான் பெர்னாண்டோ, ஜூட் சுபன், ஷரித்த ரத்னாயக்க, சமோத் டில்ஷான், ரிஸ்கான் பைசர், அசிகுர் ரஹ்மான், மொஹமட் சபீர் ரசூனியா, மொஹமட் முஸ்தாக், யூ.எஸ்.டி. தனுஷ்க, சர்வான் ஜோஹர், கவிந்து இஷான், சுபுன் தனன்ஜய விஜயசிங்க, அசேல மதுஷான், றிப்கான் மொஹமட், அஹமட் வஸிம் ராஸிக், ஹர்ஷ பெர்னாண்டோ
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<