இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி
இலங்கை கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் வீரர்களுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ‘அஸ்ரா செனகா’ தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது.
இதன் முதலாவது கட்ட தடுப்பூசியை நேற்றுமுன்தினம் (11) கொழும்பில் வைத்து செலுத்துவதற்கும், இரண்டாவது கட்ட தடுப்பூசியை இன்னும் இரண்டு மாதங்களில் செருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையின் தலைவர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் புதுமுக வீரர்
இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”அஸ்ரா செனகா தடுப்பூசி 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்துவது ஏற்புடையதல்ல என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதுமாத்திரமின்றி, இலங்கை கிரிக்கெட் அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள 30 வயதுக்குட்பட்டவர்களாக உள்ளனர்.
மறுபுறத்தில் இலங்கையைப் பொறுத்தமட்டில் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை அஸ்ரா செனகா தடுப்பூசி இன்னும் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் அஸ்ரா செனகா தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
எதுஎவ்வாறாயினும், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை வீரர்களுக்கு வேறொரு தடுப்பூசியினை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<