குல்தீப் யாதவ், டிம் சீபெர்ட், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், சஹீன் அப்ரிடி, அண்டில் பெஹ்லுக்வாயோ மற்றும் கிரிஸ் மொரிஸ் ஆகியோர் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியதன் மூலம் வீரர்களின் டி20 சர்வதேச தரவரிசையில் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு தொடர்கள் நிறைவிலும் அணிகள் மற்றும் அணி வீரர்களின் அடைவு மட்டங்களை மூவகையான போட்டிகளுக்குமாக தனித்தனியாக தரவரிசை மூலம் கணிப்பிட்டு வருகின்றது. அதன்படி இந்திய – நியூஸிலாந்து, நோபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பாகிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டி20 சர்வதேச தொடர் நிறைவுற்றதன் பின்னரான தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (11) வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஓட்ட இயந்திரமாக உருவெடுத்து வரும் பெதும் நிஸ்ஸங்க
அதன் அடிப்படையில் புதிய அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்காவுடனான தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்திருந்தாலும், தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இருந்தாலும் அவர்கள் அடைந்த தொடர் தோல்வியின் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு 4 புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை பாகிஸ்தான் அணிக்கு 3 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது. தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த புள்ளிகள் மூலம் தற்போது அவ்வணி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்திய அணி நியூஸிலாந்துடனான டி20 சர்வதேச தொடரை 2-1 என்ற அடிப்படையில் இழந்திருந்தாலும், தொடர்ந்தும் இரண்டாமிடத்திலேயே உள்ளது. இருந்தாலும் அவர்கள் அடைந்த தொடர் தோல்வியின் மூலம் நியூஸிலாந்து அணிக்கு 4 புள்ளிகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை, இந்திய அணிக்கு 2 புள்ளிகள் குறைவடைந்திருக்கின்றது. இருந்தாலும் நியூஸிலாந்து அணியின் புள்ளி அதிகரிப்பானது தரவரிசையில் மாற்றத்தை ஏற்படுத்திவில்லை. தொடர்ந்தும் நியூஸிலாந்து அணி ஆறாமிடத்தில் உள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்துடனான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய நேபாள அணி 17 புள்ளிகளை மேலதிகமாக பெற்று தரவரிசையில் 18ஆவது இடத்தில் இருந்து 43 புள்ளிகளுடன் தற்போது 14ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறித்த தொடரை இழந்த ஐக்கிய அரபு இராச்சிய அணி 7 புள்ளிகளை இழந்து 14ஆவது இடத்திலிருந்து 43 புள்ளிகளுடன் 15ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
நான்கு சிரேஷ்ட வீரர்களுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் முக்கிய சந்திப்பு
அணிகளின் புதிய டி20 சர்வதேச தரப்படுத்தல்
- பாகிஸ்தான் – 135 புள்ளிகள்
- இந்தியா – 124 புள்ளிகள்
- தென்னாபிரிக்கா – 118 புள்ளிகள்
- இங்கிலாந்து – 118 புள்ளிகள்
- அவுஸ்திரேலியா – 117 புள்ளிகள்
- நியூஸிலாந்து – 116 புள்ளிகள்
- மேற்கிந்திய தீவுகள் – 101 புள்ளிகள்
- ஆப்கானிஸ்தான் – 92 புள்ளிகள்
- இலங்கை – 87 புள்ளிகள்
- பங்களாதேஷ் – 77 புள்ளிகள்
- ஸ்கொட்லாந்து – 62 புள்ளிகள்
- ஜிம்பாப்வே – 55 புள்ளிகள்
- நெதர்லாந்து – 50 புள்ளிகள்
- நேபாளம் – 43 புள்ளிகள்
- ஐக்கிய அரபு இராச்சியம் – 43 புள்ளிகள்
- ஹொங்கொங் – 42 புள்ளிகள்
- ஓமான் – 39 புள்ளிகள்
- அயர்லாந்து – 34 புள்ளிகள்
வீரர்களின் தரவரிசை
நடைபெற்றுமுடிந்த தொடர்களின் அடிப்படையில் பந்துவீச்சாளர்களின் புதிய தரவரிசையின்படி இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் 728 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறி வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை நிறைவுற்ற தொடரிலிருந்து பதிவு செய்துள்ளார். முதலிடத்தில் தொடர்ந்தும் ரஷீட் கான் நீடிக்கின்றார்.
பாகிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளரான இமாட் வஸீம் 705 புள்ளிகளை பெற்று 5 இடங்கள் முன்னேறி தற்போது 4ஆவது இடத்தை அடைந்துள்ளார். நியூஸிலாந்து வீரர் மிட்செல் சேன்ட்னர் 4 இடங்கள் முன்னேறி 638 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
குர்னால் பாண்டியா 434 புள்ளிகளுடன் 39 இடங்கள் முன்னேறி முதல் தடவையான 58 எனும் உச்ச இடத்தை அடைந்துள்ளார். நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 7 இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் 380 புள்ளிகளை பெற்று டி20 சர்வதேச தரவரிசையில் வாழ்நாள் அதிகபட்ச புள்ளிகளை பெற்றுள்ளார். கிறிஸ் மொரிஸ் 7 இடங்கள் முன்னேறி 591 புள்ளிகளுடன் 21ஆவது இடத்தை அடைந்துள்ளார். அவ்வணியின் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளரான அண்டில் பெஹ்லுக்வாயோ 15 இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தை அடைந்து வாழ்நாளில் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான இளம் வீரர் சஹீன் அப்ரிடி 28 இடங்கள் முன்னேறி 48ஆவது இடத்தை அடைந்து வாழ்நாளில் அதி உச்ச நிலையை அடைந்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வேகப்பந்துவீச்சாளரான மொஹமட் நவீட் 3 இடங்கள் முன்னேறி 628 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தை அடைந்துள்ளார். நேபாள வேகப்பந்துவீச்சாளர் சொம்பல் காமி 22 இடங்கள் முன்னேறி 70ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் அணி வீரர் பாபர் அஸாம் எந்தவிதமான அசைவுகளும் இன்றி 885 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுகின்றார். இந்திய வீரர் ரோஹிட் சர்மா 3 இடங்கள் முன்னேறி 698 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தை அடைந்துள்ளார். சிகர் தவான் ஒரு இடம் முன்னேறி 671 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
கேன் வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி 12ஆவது இடத்தையும், ரோஸ் டெய்லர் 7 இடங்கள் முன்னேறி 51ஆவது இடத்தையும் அடைந்துள்ளனர். மேலும் நியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளரான டிம் சீபெர்ட் 87 நிலைகள் முன்னேறி தற்போது 83ஆவது இடத்தில் வாழ்நாளில் அதிஉச்ச நிலையை அடைந்துள்ளார்.
நியூசிலாந்து அணியிலிருந்து வெளியேறவுள்ள கிரைக் மெக்மிலன்
தென்னாபிரிக்க வீரர்களான பாப் டு ப்ளெஸிஸ் 3 இடங்கள் முன்னேறி 617 புள்ளிகளுடன் 17ஆவது இடத்தையும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 31 இடங்கள் முன்னேறி 493 புள்ளிகளுடன் 42ஆவது இடத்தையும அடைந்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஹூஸைன் தலத் 19 இடங்கள் முன்னேறி 56ஆவது இடத்தை அடைந்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சிய வீரரான ஸைமன் அன்வர் 2 இடங்கள் முன்னேறி 643 புள்ளிகளுடன் 15ஆவது இடத்தை அடைந்துள்ளார்.
சகலதுறை வீரர்களின் தரவரிசையில் முதல் 10 இடங்கக்குள் எந்தவொரு அசைவுகளும் இடம்பெறவில்லை. கிளேன் மெக்ஸ்வெல் 362 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். இலங்கை அணியின் சகலதுறை வீரர் திஸர பெரேரா தொடர்ந்தும் 5ஆவது இடத்தில் உள்ளார்.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க