அக்ஷர் பட்டேலை தொடர்ந்து தேவ்துத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்று

IPL 2021

292
Devdutt Padikkal
IPLT20.COM

IPL தொடரில் விளையாடவுள்ள றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தேவ்துத் படிக்கல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேவ்துத் படிக்கல் கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், தற்போது, தனிமைப்படுத்தலில் இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீண்டும் கேள்விக்குறியாகும் இலங்கை – பங்களாதேஷ் தொடர்?

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப்போட்டிக்காக தற்போது சென்னையில் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்தநிலையில், கடந்த பருவகாலத்தில் அதிக ஓட்டங்களை பெற்றிருந்த தேவ்துத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கான முதல் போட்டி எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேவ்துத் படிக்கல் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவ்துத் படிக்கல் கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அறிமகமாகியதுடன், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக ஓட்டங்களையும் பெற்றிருந்தார். அதுமாத்திரமின்றி, இம்முறை ஐ.பி.எல். தொடருக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற விஜய் ஹஷாரே கிண்ணத்தில் 7 போட்டிகளில் விளையாடி 147.40 என்ற சராசரியில் 737 ஓட்டங்களை குவித்திருந்தார். தற்போது, இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை அணிக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தேவ்துத் படிக்கல் தனிமைப்படுத்தலில் உள்ளதுடன், மும்பையில் தற்போது தீவிரம் அடைந்துள்ள கொவிட்-19 தொற்று காரணமாக ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் இந்திய கிரிக்கெட் சபை சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன. இதன்காரணமாக மும்பை மைதானத்துக்கு பதிலாக மாற்று மைதானம் ஒன்றை தெரிவுசெய்யவேண்டியது தொடர்பிலும் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

தேவ்துத் படிக்கல் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், நேற்றைய தினம் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்ஷர் பட்டேல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். தற்போது இவர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப்பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க