புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், உலக பதினொருவர் அணிக்கும் இடையில் நாளை (31) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள விசேட T20 போட்டியிலிருந்து விரல் உபாதை காரணமாக உலக பதினொருவர் அணியின் தலைவர் இயர் மோர்கன் விலகியிருக்கின்றார்.
உலக பதினொருவர் அணியில் முகமது ஷமி, ஆடில் ரஷீத் இணைப்பு
புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக, மேற்கிந்திய…
இங்கிலாந்து வீரர் மோர்கன் தற்போது விலகியிருப்பதனால், இந்த விசேட T20 போட்டியில் உலக பதினொருவர் அணியினை பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை வீரர் சஹீட் அப்ரிடி வழிநடாத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, உலக பதினொருவர் அணியில் வெற்றிடமாகியிருக்கும் மோர்கனின் இடத்தினை அவரது சக அணி வீரரான சேம் பில்லிங்ஸ் நிரப்புவார் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
இங்கிலாந்து அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான தலைவரான இயன் மோர்கனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற உள்ளூர் ஒரு நாள் தொடரொன்றில் பங்கேற்றிருந்த வேளையில் வலதுகையின் மோதிர விரலில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த காயத்தில் இருந்து அவர் குணமாக சில நாட்கள் எடுக்கும் என்பதனாலேயே அவருக்கு மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் விளையாட முடியாமல் போயிருக்கின்றது.
இதேவேளை, மோர்கன் இங்கிலாந்து அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி எடின்பேர்க்கில் நடைபெறும் ஒரு நாள் போட்டிக்கு முன்னர் இந்த விரல் உபாதையிலிருந்து பூரண சுகத்தினைப் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மோர்கனின் இங்கிலாந்து அணி ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியினை அடுத்து அவுஸ்திரேலியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றது.
உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா
லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய…
மேலும், உலக பதினொருவர் அணியினை 14 பேர் கொண்ட குழாமாக விரிவுபடுத்த, இங்கிலாந்து வீரர்களான சேம் குர்ரான், டைமால் மில்ஸ் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இந்த விசேட T20 போட்டி கடந்த ஆண்டு கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா மற்றும் மரியா புயல்களினால் பாதிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகளின் ஐந்து கிரிக்கெட் மைதானங்களினை புணரமைப்புச் செய்வதற்காகவும் அங்கே ஏனைய கிரிக்கெட் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்காகவும் நடாத்தப்படுகின்றது.
இந்த T20 போட்டியில் விளையாடும் சஹீட் அப்ரிடி அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மறுபிரவேசம் மேற்கொள்ள திட்டங்கள் வைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற T20 உலக சம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியிருந்த அப்ரிடி கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வினை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோர்கனுக்கு முன்னதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் சகீப் அல் ஹசன் மற்றும் இந்தியாவின் இளம் சகலதுறை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உலக பதினொருவர் அணியிலிருந்து சொந்தக் காரணங்கள் சிலதை காட்டி விலகியிருந்ததோடு, இவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களும் அணிக்குள் இணைக்கப்பட்டிருந்தனர்.
உலக பதினொருவர் குழாம்
சஹீட் அப்ரிடி (தலைவர்), தினேஷ் கார்த்திக், மிச்செல் மெக்லனகன், திசர பெரேரா, ராஷித் கான், லூக் ரோன்ச்சி, சொஹைப் மலிக், தமிம் இக்பால், சந்தீப் லமிச்சானே, ஆதில் ரஷீத், மொஹமட் சமி, சேம் பில்லிங்ஸ், சேம் குர்ரான், டைமால் மில்ஸ்
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<