பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்

158
ICC Twitter

ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் அணி 25 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி துடுப்பாடக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதும், மொஹமட் நபி மற்றும் அஸ்கர் ஆப்கானின் மத்தியவரிசை இணைப்பாட்டத்தால், 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து, 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முத்தரப்பு டி20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வெற்றி

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும்….

மொஹமட் சய்புதீன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்திய போதும், மொஹமட் நபி இறுதிவரை போராடி வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர், 54 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றக்கொடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக அஸ்கர் ஆப்கான் 37 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, மொஹமட் சய்புதீன் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், சகிப் அல் ஹசன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டதுடன், சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணியின் சார்பில் களமிறங்கிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் முஜீப் உர் ரஹ்மானின் பந்துவீச்சினை எதிர்கொள்ளமுடியாமல் தடுமாறிய நிலையில், மஹமதுல்லாஹ் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோர் சற்று ஓட்டங்களை குவித்தனர். எனினும், இவர்கள் இருவரும் ஆட்டமிழக்க, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அணிக்கு ஏமாற்றமளித்தனர்.

மஹமதுல்லாஹ் அதிகபட்சமாக 44 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, அவருக்கு அடுத்தபடியாக சபீர் ரஹ்மான் 24 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான் 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பரீட் அஹமட், ரஷீட் கான், குல்பதீன் நயீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இந்த முத்தரப்பு தொடரின் மூன்று போட்டிகள் இதுவரையில் நிறைவடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 2 வெற்றிகளையும், பங்களாதேஷ் அணி ஒரு வெற்றியையும் பெற்றுள்ளதுடன், ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளது.

ஓய்விலிருந்து மீண்டும் வந்த அம்பதி ராயுடுவிற்கு தலைவர் பதவி

உலகக் கிண்ண அணியில் தேர்வு….

முத்தரப்பு தொடரின் அடுத்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டி எதிர்வரும், 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

போட்டி சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 164/6 (20) – மொஹமட் நபி 84, அஸ்கர் ஆப்கான் 40, மொஹமட் சய்புதீன் 33/4, சகிப் அல் ஹசன் 18/2

பங்களாதேஷ் – 139 (20) – மஹமதுல்லாஹ் 44, சபீர் ரஹ்மான் 24, முஜீப் உர் ரஹ்மான் 15/3, ரஷீட் கான் 23/2

முடிவு – ஆப்கானிஸ்தான் அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<