உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தயாராகத் தொடங்கும் இலங்கை

401

இந்த வாரம் நிறைவடைந்த IPL கிரிக்கெட் தொடரின் இலங்கை வீரர்கள் இம்முறை ஒவ்வொரு அணிகளுக்காகவும் தத்தமது பங்களிப்பினை வழங்கியது இரசிக்கும் படியாக அமைந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்து என்பது கிடையாது.

“வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன

ஆனால் முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் இரசிக்கும் படியாக இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரும் அமைய வேண்டும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலங்கை அணி ஒரு தவிர்க்க முடியாத போராட்டத்தில் வெற்றி பெற்றே  ஆக வேண்டும். இதில் வெற்றி பெறாது போயின் இலங்கை அணிக்கு இம்முறை உலகக் கிண்ணம் வெறும் கனவாகவே மாறும்.

இலங்கை அணியில் கடந்த ஓரிரு வருடங்களில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் அணியினை பலவீனப்படுத்தி இருந்ததோடு, அது இலங்கை அணியினை இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் சுற்றுத் தொடர் ஒன்றில் விளையாடும் நிலைக்கும் தள்ளி விட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் பின்னடையும் போது தடைகளை தகர்த்தெறிந்து வரலாற்றில் பல தடவைகள் வீர நாமம் பதித்த ஒரு கிரிக்கெட் அணியாகவே இலங்கை காணப்படுகின்றது என்பதனையும் நாம் மறக்க கூடாது.

அந்தவகையில் இந்த ஆண்டு உலக்க கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்ட இலங்கை அணி, அதற்கு தயாராகும் பொருட்டு ஆப்கானுடன் தமது சொந்த மண்ணில் ஒருநாள் தொடர் பலப்பரீட்சை ஒன்றை நடாத்தவிருக்கின்றது.

கவனிக்க வேண்டியவை  

இறுதியாக கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒன்றில் ஆடியது. ஐ.சி.சி. இன் ஒருநாள் சுபர் லீக்கிற்காக இந்த ஒருநாள் தொடர் நடைபெற்றதோடு குறித்த சுற்றுத் தொடரினை 1-1 என ஆப்கான் சமநிலை செய்திருந்தது. முக்கியமாக குறித்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அந்த ஒருநாள் தொடரினை கைப்பற்றும் வாய்ப்பும் காணப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இலங்கை குழாம்

ஆனால் இப்போதைய நிலைமைகள் மாறியிருக்கின்றன. உண்மையும் அதுவே, ஒரு காலத்தில் கத்துக் குட்டி கிரிக்கெட் அணியாக இருந்த ஆப்கானிஸ்தான் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு இம்முறை நேரடித் தகுதியினைப் பெற்றிருப்பதோடு, முன்னாள் உலகக் கிண்ண சம்பியன்களான இலங்கை நேரடி தகுதியினை இழந்து மோசமான நிலையில் காணப்படுகின்றது.

எனவே இந்த விடயங்களின் அடிப்படையில் நோக்கும் போது உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்ற ஒரு அணிக்கும், தகுதி பெறாத ஒரு அணிக்கும் இடையில் நடைபெறும் ஒருநாள் தொடராக இலங்கை – ஆப்கான் ஒருநாள் தொடர் அமைகின்றது.

இலங்கையின் களநிலவரங்கள் 

சிரேஷ்ட வீரர்களின் சேவைகளை ஒருநாள் உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி நாடுகின்றது என்பது தெளிவாகியிருக்கின்றது. இலங்கையின் அண்மைய ஒருநாள் போட்டிகளின் முடிவுகள் மிக மிக மோசமாகவே அமைந்திருந்தன. ஒருநாள் போட்டிகளில் நீண்ட நேரம் நின்று ஆடக் கூடிய துடுப்பாட்டவீரர்கள் இலங்கையில் இல்லாதமை வருத்தம் அளித்த நிலையே இலங்கை அணி சிரேஷ்ட வீரர்களின் உதவியினை நாடியிருப்பதற்குரிய காரணமாக கருதப்படுகின்றது.

WATCH – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரின் முக்கியத்துவம் என்ன? | Cricket Kalam

அந்தவகையில் ஆப்கான் தொடரில் இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்பட முடியும் என நம்பப்படுகின்றது. அணிக்குள் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மீண்டிருக்கும் திமுத் கருணாரட்ன ஒருநாள் அணியின் ஆரம்ப வீரர்களில் ஒருவராக களமிறங்க எதிர்பார்க்கப்பட, அனுபவமிக்க அஞ்செலோ மெதிவ்ஸ் மத்திய வரிசை வீரராக இலங்கை ஒருநாள் அணிக்கு பலமளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியில் மாற்றங்கள்?

வழமையான குழாத்தினை மாற்றி பல சோதனை முயற்சிகள் ஆப்கான் – இலங்கை ஒருநாள் தொடரில் மேற்கொள்ளப்படலாம். இலங்கை அணி உலகக் கிண்ணத்தினை இலக்காக வைப்பதன் காரணமாக இப்போதே அதற்கான அணியினை உறுதிப்படுத்திக் கொள்ள முயல்கின்றது.

அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அனுபவ வீரர் துஷ்மன்த சமீர ஒருநாள் அணிக்குள் மீண்டிருக்கின்றார். IPL போட்டிகளில் அசத்திய மதீஷ பத்திரனவும் காணப்படுகின்றார். வனிந்து ஹஸரங்க இலங்கை ஒருநாள் அணியின் முதல் தெரிவு சுழல்பந்துவீச்சாளராக இருந்த போதும் ஒருநாள் போட்டிகளில் அவரது பதிவுகள் சிறப்பாக இருக்கவில்லை. கடைசியாக விளையாடிய ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் எடுக்க தவறியிருக்கும் வனிந்து ஹஸரங்க தனது இடத்திற்காக அணியில் போராட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

வனிந்து ஹஸரங்க பிரகாசிக்க தவறும் சந்தர்ப்பத்தில் மணிக்கட்டு சுழல்சகலதுறை வீரரான துஷான் ஹேமன்தவிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம். துஷான் ஹேமன்தவின் பந்துவீச்சோடு மாத்திரமின்றி துடுப்பாட்டமும் அண்மைய உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகவே அமைந்திருந்தது. எனவே ஆப்கான் ஒருநாள் தொடரில் இலங்கையின் பந்துவீச்சு வரிசையில் பாரியளவு மாற்றங்களை பார்க்க முடியும்.

இலங்கையின் திட்டங்கள்

இலங்கை – ஆப்கான் தொடரின் மூன்று போட்டிகளும் ஹம்பாந்தோட்டையிலேயே நடைபெறுகின்றன. கிடைத்திருக்கும் தகவல்கள் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடர் நடைபெறும் ஜிம்பாப்வேயின்  மைதான நிலைமைகளை அடிப்படையாக கொண்டே ஹம்பாந்தோட்டையில் ஒருநாள் தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதனை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரின் போட்டிகள் அனைத்தும் பகலிரவு ஆட்டங்களாக நடைபெறாத நிலையில், அதே மாதிரி இலங்கை – ஆப்கான் தொடரும் பகல் நேரங்களிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே இந்த விடயங்கள் இலங்கை அணி இப்போதிருந்தே திட்டங்களை வகுத்து உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கு தயாராகுவதனை வெளிப்படுத்துகின்றது.

ஆப்கான் அணி

மிக விரைவான வளர்ச்சியினைக் காட்டும் அணிகளில் ஒன்றாக ஆப்கான் மாறியிருக்கின்றது. ஆப்கான் அணியின் வீரர்கள் இப்போது எந்த அணிக்கும் அழுத்தம் தரும் வீரர்களாவே காணப்படுகின்றனர். அணியின் துடுப்பாட்ட வரிசை இளம் வீரர்களான இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான் போன்ற வீரர்கள் மூலம் பலப்படுத்தப்பட்டிருக்க அனுபவமிக்க மொஹமட் நபியின் சேவையும் ஆப்கான் வீரர்களுக்கு காணப்படுகின்றது.

ஆப்கான் அணியின் பந்துவீச்சினை நோக்கும் போது அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும் சகலதுறைவீரருமான ரஷீட் கான் முதல் இரண்டு போட்டிகளிலும் முதுகு உபாதை காரணமாக விளையாடமாட்டார் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியிருக்கின்றது. ரஷீட் கான் இல்லாத போதும் நெருக்கடி உருவாக்க கூடிய பந்துவீச்சாளர்கள் ஆப்கான் அணியில் தொடர்ந்தும் காணப்படுகின்றனர்.

குறிப்பாக வேகப்பந்துவீச்சாளரான பசால்ஹக் பரூக்கி அண்மைய IPL தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடியிருந்ததோடு அவர் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்ததனை அவதானிக்க முடியுமாக அமைந்திருந்தது. மறுமுனையில் இளம் சுழல்பந்துவீச்சாளர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் நூர் அஹ்மட் ஆகியோர் ஆப்கானை பலப்படுத்தும் முக்கிய பந்துவீச்சாளர்களாக காணப்படுகின்றனர்.

அணிக்குழாம்கள்

இலங்கை – திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), சதீர சமரவிக்ரம, வனிந்து ஹஸரங்க, துஷான் ஹேமன்த, மகீஷ் தீக்ஷன, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, மதீஷ பதிரன, கசுன் ராஜித

ஆப்கானிஸ்தான் – ஹஸ்மத்துல்லா சஹிதி (தலைவர்), ரஹ்மத் சாஹ் (பிரதி தலைவர்), றஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹஸ்ஸன், நஜிபுல்லா சத்ரான், மொஹமட் நபி, இக்ராம் அலிகில், அஷ்மத்துல்லா ஓமர்சாய், ரஷீட் கான், முஜிபுர் ரஹ்மான், நூர் அஹ்மட், அப்துல் ரஹ்மான், பசால்ஹக் பரூக்கி, பரீட் அஹ்மட் மலிக்

ஒருநாள் சுற்றுத் தொடர் அட்டவணை

முதல் ஒருநாள் போட்டி – ஜூன் 02 – ஹம்பந்தோட்டை – காலை 10 மணி

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூன் 04 – ஹம்பந்தோட்டை – காலை 10 மணி

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூன் 07 – ஹம்பந்தோட்டை – காலை 10 மணி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<