இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் நவீட் நவாஸிடமிருந்து பல விடயங்களை கற்றுக்கொண்டதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக புதன்கிழமை (30) நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடரினை சமநிலைப்படுத்துமா இலங்கை கிரிக்கெட் அணி?
நவீட் நவாஸ் தொடர்பில் இவர் குறிப்பிடுகையில், “அவரிடமிருந்து கற்றுக்கொள்ள அதிகமான விடயங்கள் உள்ளன. துடுப்பெடுத்தாடும் போது அவர் என்னுடன் கலந்துரையாடுவார். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுவார். அவருடன் பகிர்ந்துக்கொள்வதற்கு அதிகமான விடயங்கள் உள்ளன. அதிகமான விடயங்களை சரிசெய்துள்ளேன். அவருடன் பணிபுறிவது இலகுவானது” என்றார்.
அதேநேரம் T20 உலகக்கிண்ணத்திலிருந்து திரும்பியதால், இலங்கை அணியின் பல வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் பிரகாசிக்க தடுமாறி வருகின்றனர். எனினும் பெதும் நிஸ்ஸங்க சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்துகின்றார். இதற்கான காரணத்தையும் இவர் குறிப்பிட்டார்.
“ஒரு தொடர் முடிந்தவுடன் அடுத்த தொடருக்காக தயாராகுவது ஒவ்வொரு வீரரதும் பணி. தனிப்பட்ட ரீதியில் தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும். பயிற்சியில் சரியான விடயங்களை செய்யவேண்டும். அதனை நான் சரியாக செய்வதால் என்னால் பிரகாசிக்க முடிகிறது என நினைக்கிறேன்” என்றார்.
இதேவேளை அனைத்துவகை போட்டிகளிலும் பிரகாசிப்பதற்கு உடற்தகுதி மிக முக்கியமானது என்பதை குறிப்பிட்ட இவர், அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக கூறினார்.
“உடற்தகுதி என்பது மிக முக்கியமானது. தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு வீரரும் தங்களுடைய உடற்தகுதி தொடர்பில் சிந்திக்கவேண்டும். உடற்தகுதிக்காக நான் தனியாகவும், அணியின் உடற்பயிற்சியாளருடனும் இணைந்து பயிற்சி செய்கிறேன். இது எனக்கு மிக உதவியாக உள்ளது” என மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கண்டி – பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<