ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) சம்பியன்களாக பல்க் லெஜென்ட்ஸ் அணி

1263
APL

ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் சபை, ஐ.பி.எல். போட்டிகளை ஒத்தவிதத்தில் முதன்முறையாக ஒழுங்கு செய்து நடாத்திய ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடரின் இறுதிப் போட்டியில் காபுல் ஸ்வானன் அணியை 4 விக்கெட்டுக்களால் தோற்கடித்த பல்க் லெஜென்ட்ஸ் அணி சம்பியனாக நாமம் சூடியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பிரிமியர் லீக்கில் அசத்தி வரும் இசுரு உதான

ஐ.பி.எல். போட்டிகளைப் போன்று ஆப்கானிஸ்தான் …

இம்மாதம் 05ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமான இந்த ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடரில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களையும் குறிப்பிடும் ஐந்து அணிகள் மோதலுக்கு தயாராகியிருந்தன.

ஆப்கானிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் பங்கெடுத்த இத்தொடரில் ஐந்து அணிகளும் முதலில் குழுநிலை போட்டிகளில் மோதின.  பின்னர் நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளில் பல்க் லெஜென்ட்ஸ் அணி நங்கர்கார் லெபேர்ட்ஸ் அணியை தோற்கடித்தும், காபுல் ஸ்வானன் அணி பக்தியா பன்தர்ஸ் அணியினை தோற்கடித்தும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

நேற்று (21)  ஆரம்பமான தீர்மானமிக்க இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற காபுல் ஸ்வானன் அணியின் ரஷீத் கான் தனது தரப்பிற்கு முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொண்டார்.  

இதன்படி முதலில் துடுப்பாடிய காபுல் ஸ்வானன் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 132 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. காபுல் ஸ்வானன் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகூடிய தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் அடங்கலாக 32 ஓட்டங்களுடன்  ஜாவேத் அஹ்மதி பதிவு செய்தார்.

ரோகித் ஷர்மா மற்றும் கோஹ்லியின் அதிரடியால் இந்திய அணிக்கு அபார வெற்றி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு …

மறுமுனையில் பல்க் லெஜென்ட்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பாக வலதுகை சுழல் வீரரான கயிஸ் அஹ்மட் வெறும் 18 ஓட்டங்களை விட்டுத்தந்து 5 விக்கெட்டுக்களை சாய்த்து திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் இறுதிப் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 133 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பல்க் லெஜென்ட்ஸ் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.

பல்க் லெஜென்ட்ஸ் அணியின் வெற்றிக்கு அரைச்சதம் ஒன்றை விளாசிய  மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயில் 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 56 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம், பல்க் லெஜென்ட்ஸ் அணியின் வெற்றிக்கு உதவிய மற்றுமொரு வீரரான ரவி போபரா 32 ஓட்டங்களை குவித்து இறுதிவரை  ஆட்டமிழக்காது நின்றிருந்தார்.

காபுல் ஸ்வானன் அணியின் பந்துவீச்சு சார்பாக தென்னாபிரிக்க வீரர் வேய்ன் பர்னல் 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதிலும் அது அவரது தரப்பு அணி வெற்றியை சுவைக்க போதுமாக இருக்கவில்லை.

T10 தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்களின் விபரம் வெளியானது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொடர்ந்தும் இரண்டாவது …

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பல்க் லெஜென்ட்ஸ் அணியில் சிறந்த பந்துவீச்சினை வெளிக்கொணர்ந்த கயிஸ் அஹ்மட் பெற்றதோடு, தொடர் நாயகன் விருதினை ரஷீத் கான் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, தொடரின் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருது பக்தியா பன்தர்ஸ் அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்த இலங்கை அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இசுரு உதானவிற்கு கொடுக்கப்பட்டிருந்ததுடன் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதினை ஆப்கான் அணியின் மொஹமட் ஷஹ்சாத் வென்றார்.  

போட்டியின் சுருக்கம்

காபுல் ஸ்வானன் – 132/9 (20) ஜாவேத் அஹ்மதி 32(19), கயிஸ் அஹ்மட் 18/5(4)

பல்க் லெஜென்ட்ஸ் – 138/6 (18.1) கிறிஸ் கெயில் 56(34), ரவி போபாரா 32(29)*, வேய்ன் பர்னல் 35/3(4)

முடிவு – பல்க் லெஜென்ட்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…