ஊழல் காரணமாக ஓய்வை அறிவித்துள்ள ஆப்கான் கிரிக்கெட் வீரர்

258
Afghanistan opening batsman take rest from cricket and slams board

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரரான உஸ்மான் கனி தனது நாட்டு கிரிக்கெட் சபையில் காணப்படுகின்ற ஊழல் பிரச்சினைகள் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் ஆப்கான் ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் ஆடுகின்றது. மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு T20 தொடர் என்பன அடங்கும் இந்த தொடர்களுக்கான 16 பேர் கொண்ட ஆப்கான் குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் ஆப்கான் அணியின் ஆரம்பவீரரான உஸ்மான் கனி இடம்பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையில் தான் பங்களாதேஷ் தொடருக்கு தெரிவு செய்யப்படாத விடயம் தொடர்பில் டிவிட்டர் வாயிலாக கருத்து வெளியிட்டுள்ள உஸ்மான் கனி ஊழலற்ற தலைமை ஒன்று வரும் வரையில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

”மிகுந்த கவனத்துடன் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு ஒன்றினை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன். ஆப்கான் கிரிக்கெட் சபையின் தற்போதைய ஊழல் நிறைந்த தலைமைத்துவமே இந்த முடிவினை நான் எடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. சரியான நிர்வாகம் அமையும் வரை என்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு கடுமையான உழைப்பினை அணியில் இணைவதற்கு வழங்குவேன்.”

”விடயங்கள் சரியாக மாறும் போது மீண்டும் பெருமையுடன் ஆப்கான் அணிக்காக விளையாடுவேன். நிறைய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் கிரிக்கெட் சபை தலைவரை சந்திக்க முடியவில்லை என்பதோடு, என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு திருப்தியான காரணங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை” என உஸ்மான் கனி தனது ட்விட்டர் வாயிலாக குறிப்பிட்டிருக்கின்றார்.

26 வயது நிரம்பிய உஸ்மான் கனி ஆப்கான் அணிக்காக இதுவரை 17 ஒருநாள் போட்டிகளிலும், 35 T20I போட்டிகளிலும் விளையாடியிருப்பதோடு ஒருநாள் போட்டிகளில் 25.58 என்கிற துடுப்பாட்ட சராசரியினையும், T20I போட்டிகளில் 25.35 என்கிற துடுப்பாட்ட சராசரியினையும் வெளிப்படுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<